ஜா. சுகித்தா, நவம்பர் 12, 2012.
அம்னோவின் தகவல் பிரிவு தலைவரும் துணை அமைச்சருமான அஹ்மட் மஸ்லான் அமைச்சர்களும், துணை அமைச்சர்களும்அவர்களின் சொத்து விபரங்களை அதற்கான பாரத்தில் பூர்த்தி செய்து பிரதமர்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்று கூறுயுள்ளார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அவ்வாறே செய்கின்றனர் என்றாரவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு “ஆமாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இதுதான் 55 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவரும் அம்னோவின் தகவல் பிரிவின் இலட்சனம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கிறார்களா என்பதை அவரால் உறுதியாகக் கூற முடியவில்லை.
பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினர். அமைச்சரவையின் உறுப்பினர். பிரதம அமைச்சர். பிரதமர் அவருடைய சொத்து விபங்களை அறிவிக்கிறாரா? யாரிடம் அவர் சொத்து விபரங்களை அறிவிக்கிறார்? இவ்விபரங்களாவது அம்னோவின் தகவல் பிரிவு தலைவரான அஹ்மட் மஸ்லானுக்கு தெரியுமா?
ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு தங்களுடைய சொத்து விபரங்களை ஈராண்டிற்கு ஒரு முறை தங்களுடைய கட்சியின் தலைவரிடம் அறிவித்துவிட்டால், அவருக்கு தமது கட்சியைச் சார்ந்தவர்கள் எவ்வளவு சேர்த்துள்ளனர் என்பது தெரியவரும். ஆனால், தலைவருடைய சொத்து எவ்வளவு என்று தெரிந்துள்ள ஆசையில்லையா?
அப்படியே உண்மையாக தாங்கள் சேர்த்த சொத்து விபரங்களை தங்களுடைய தலைவரிடம் காட்டி விட்டால், அது அவர்கள் ஊழலில் ஈடுபடவில்லை என்பதை மக்களிடம் நிரூபிக்குமா?
இந்த அமைச்சர்களும் பிரதமரும் முக்கியமானவர்கள்தான் (VIPகள்தான்). ஆனால், அவர்களைத் தெரிந்தோ தெரியாமலே தேர்வு செய்து பதவியில் அமர்த்திய மக்கள் அமைச்சர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் (Most Important people). ஏனென்றால் அவர்கள் இந்த அமைச்சர்களின் சீட்டை கிழிக்க முடியும். அந்த மக்களின் சேவர்களான அமைச்சர்கள் தங்களுடைய சொத்து விபரங்களை அவர்களுடைய எஜமானர்களான மக்களிடம்தானே தெரிவிக்க வேண்டும்.
பிரதமருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் தாங்கள் பதவியில் இருந்த காலத்தில் சேர்த்த சொத்து விபரங்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பது தெரியாதோ! அம்னோ தகவல் பிரிவின் தலைவரின் கூற்றிலிருந்து இப்படி எண்ணவும் தோன்றுகிறது. இருக்காது, இருக்காது. ஏனென்றால் நமது அமைச்சர்களின் அடைவுநிலை உலகத்தரத்தைவிட உயர்வானது என்பது அவர்களின் பொதுவான கருத்து.
பிறகு ஏன் தங்களுடைய சொத்து விபரங்களைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர்? ஒரு வேளை, மடியில் கனம் இருக்குமோ? அதுவும் நம்பிக்கை நட்சத்திரமான பிரதமர் நஜிப் அவருடைய சொத்து விபரங்களை யாரிடம் தெரிவிக்கிறார் என்பதை அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் கூறத் தவறிவிட்டார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், தலைவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை, சொத்துகளை பகிரங்கமாக தங்களுடைய எஜமானர்களான மக்களிடம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்றால் அதனை அவர்கள் மக்களிடம் தேர்தலுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.
இந்த உன்னதக் கடமை உணர்வை, கடப்பாட்டைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இந்நாட்டில் இருக்கிறார்கள். கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனத் தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே தங்களுடைய சொத்து விபரங்களை பகிரங்கமாக சத்தியப் பிரமாண ஆவணத்துடன் மக்கள்முன் வைத்த அரசியல் கட்சி வேட்பாளர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தங்களுடைய சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவித்து வரும் நாடாளுமன்ற மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னுதாரணத்தை ஏன் பிரதமரும், அமைச்சர்களும், இதர நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் பின்பற்றக்கூடாது?
இந்த நாட்டில் அப்படிப்பட்டவர்கள் எவரும் இருக்க முடியாதே என்ற எண்ணம் தோன்றலாம். ஏன்னென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் பெரும் தலைவர்களில் 99.6 விழுக்காட்டினர் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்ற கருத்து மக்களிடம் உண்டு.
தங்களுடைய சொத்து விபரங்களை கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமன நாளுக்கு முன்னதாகவே அறிவித்த, தொடர்ந்து ஆண்டுதோறும் அறிவித்து வரும் நான்கு உண்மையான மாண்புமிகுகள் இதோ: டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், டாக்டர் நசீர் ஹசிம், எஸ். அருட்செல்வன் மற்றும் எ. சிவராசன்.
மக்களுக்கு பதில் கூற வேண்டும், மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு இவர்களுக்கு இருக்கையில், மற்றவர்கள் ஏன் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கின்றனர்?
மக்கள் கேட்க வேண்டும். அவர்களின் பணியாளர்களான பிரதிநிதிகள் பதில் கூற வேண்டும். பதில் இல்லை என்றால், அவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்.