மின்னல் FM – மதம் மாற்றும் பிரச்சாரம்; சட்டத்திற்குப் புறம்பானது

தமிழகத்திலிருந்து சிறப்பு வருகைப் புரிந்திருந்த மெளலானா இராஜகுரு முகமது சாதிக் (பூஜ்யசிரீ இராஜகுரு வானமாமலை பார்த்தசாரதி ஐயங்கார்) கடந்த வியாழன்று மின்னல் வானொலியில் நேர்காணல் செய்யப்பட்டிருந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு செம்பருத்திக்கு  அழைப்புகள் வரத் தொடங்கின.  அடுத்த நாள் காலை இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக ப்ரி மலேசியா டுடே கூறுகிறது. (மின்னல் FM-ல் ஒலிபரப்பான சாதிக்கின் நேர்காணலை கேட்க இங்கே அழுத்தவும்)

இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட பின்னணி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குத் தமிழகத்தின் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இந்து எனக் கூறிக்கொள்ளும் இராஜகுரு முகமது சாதிக் பின்வருமாறு கூறுகிறார்: இந்து மத வேதங்களைப் படித்து தருமகர்த்தா குடும்பமாக தன் குடும்பம் வாழ்ந்ததாக தன் பின்னணியைத் தொடங்குகிறார். 12 வயதிற்குள் தான் வேத மந்திரங்களையெல்லாம் படித்து தேர்ந்தாக விளக்குகிறார். நான்கு வேதங்களையும் கரைத்து குடித்திருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்கிறார். 200 முறைக்கு யாகங்கள் செய்திருப்பதாக பறைசாற்றுகிறார்.

உறக்கத்தில் கேட்ட ஒரு குரல் தனது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் முகமது சாதிக்.

ஒரு மதத்தை உயர்த்திக் காட்ட  இன்னொரு மதத்தின் மேன்மையோடு ஒப்பிட்டு அந்த மதத்தைத் தாழ்த்தி மக்களின் மனம் புண்படும்படி செய்வது தவறானது. குற்றவியல்ச் சட்டம், பிரிவு 298 இன் கீழ் அது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். அதை மின்னல் எப்எம் பிரச்சாரமாக ஒலிபரப்பியது தவறு என்றும் அதை செய்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார் சுவராம் மனித உரிமை  கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

மூவின மக்கள் வாழும் நமது நாட்டில்,  நமது தேசியக் கோட்பாட்டில் கூட “இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்” என்றுதான் இருக்கிறது. இன்னாரின் இறைவன் என்று குறிப்பிடப்படவில்லை. வேறொரு நாட்டிலிருந்து இங்கு வந்து மதப்பரப்புரை செய்பவர்கள் நமது நாட்டின் பண்பாட்டையும் மேன்மையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரை நேர்காணல் செய்தவரும் அதை அறியாமல் போனதுதான் வேதனை. அவரும் இராஜகுரு முகமது சாதிக்கின் கூற்றை ஆமோதித்தபடியேதான் இருக்கிறார்.

ஒரு மதத்தின் சிறப்புகளை மீண்டும் மீண்டும் கூறி, பின் தான் வேறோரு மதத்திற்கு மாறிவிட்டதாக கூறுவது மிக அப்பட்டமாக அந்த மதத்தைத் தாழ்த்திக் காட்டும் ஒரு செயலாகும். அந்த செயலைத்தான் இராஜகுரு முகமது சாதிக் செய்திருக்கிறார். மீண்டும் இன்று (15.11.2012 – வியாழக்கிழமை) அச்செயலை செய்யப் போகிறார் என்று கூறியிருந்தாலும், அவ்வாறு செய்வது தவறு என்பதை மின்னல் எப்எம் உணர வேண்டும். உடனடியாக அதைத்தடை செய்ய வேண்டும்.

கடந்த முறை பெரியார்தாசன் இப்படி ஒரு தவறைச் செய்தபோதே அது சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், மின்னல் எப்.எம். அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

TAGS: