அனைத்து மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளிகளாக அங்கீகரிக்க வேண்டும், ஜிபிஎம் பரிந்துரை

நாட்டிலுள்ள அனைத்து மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு அரசாங்கம் அவற்றை சமமாக நடத்த வேண்டும் என்று மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு (ஜிபிஎம்) வலியுறுத்தியுள்ளது.

ஜிபிஎம்மின் தலைவர் டான் இயு சின் நேற்று பிற்பகல் கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் இதனைக் கூறினார்.

சீன, தமிழ் மற்றும் சமயப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்நாட்டின் குடிமக்கள். அதன் அடிப்படையில் அவர்கள் பயிலும் பள்ளிகள் தேசியப்பள்ளிகள் என்று அங்கீகரிக்கப்படுவதோடு அவை சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

செப்டெம்பர் 11 இல், பிரதமர் நஜிப் ரசாக் வெளியிட்ட மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 சம்பந்தமாக ஜிபிஎம் வெளியிட்ட 15 பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஜிபிஎம் பல்வேறு இலக்குகளையும் இலட்சியங்களையும் கொண்ட அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பாகும். “அது அரசியல் கட்சி சார்பற்ற, பல்லின மற்றும் பல சமயங்களைச் சார்ந்த இயக்கங்களின் கூட்டமைப்பு”. அது மலேசிய இக்ராம் மன்றத்தின் தலைமைச் செயலாளர் ஹஜி ஜைட் கமருடின் தலைமையில் ஒரு பணிக்குழுவை அமைத்தது. அக்குழு ஜிபிஎம் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த 15 பரிந்துரைகளைத் தயாரித்தது.

மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் நவம்பர் 30 இல் கல்வி அமைச்சிடம் வழங்கப்படும் என்று ஜிபிஎம் தலைவர் இயு சின் கூறினார்.

கல்விப் பெருந்திட்டத்தை வரைவதில் கல்வி அமைச்சு எடுத்துக்கொண்ட முனைப்பைப் பாராட்டி வரவேற்பதாக கூறிய இயு சின், அதே வேளையில், இத்திட்டம் சம்பந்தமாக சிவில் அமைப்புகள் முன்வைத்த பரிந்துரைகள் மீது போதுமான கவனம் செலுத்தாமல் இக்கல்விப் பெருந்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுவது குறித்து ஜிபிஎம் ஆழ்ந்த கவலையடைகிறது என்று அவர் மேலும் கூறினார்.

கல்விப் பெருந்திட்டத்தின் முக்கிய அம்சங்களான தேசிய கல்வி சித்தாந்தம், தொழில்நுட்ப கல்வி, தாய்மொழிக் கல்வி, மொழிகள் கற்பித்தல், பள்ளிப்படிப்பைக் கைவிடும் மாணவர்கள் பிரச்னை மற்றும் வரலாறு, பூகோளம் மற்றும் இலக்கியம் ஆகிய பாடங்கள் போதித்தல் போன்றவற்றில் ஜிபிஎம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது”, என்றாரவர்.

“இறுதி வடிவம்” பெறும் கல்விப் பெருந்திட்டத்தில் ஜிபிஎம்மின் ஈடுபாடுகளும், பரிந்துரைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்துகொள்வதற்காக, கல்வி அமைச்சிடம் கல்விப் பெருந்திட்டம் குறித்த கலந்தாலோசனைக்கான இறுதி நாளை மார்ச் 31, 2013 வரையில் நீட்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இது இக்கல்வி பெருந்திட்ட வரைவை ஆய்வு செய்வதற்கு பொதுமக்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும். இது ஒரு முக்கியமான திட்டம் என்பதால், இதற்கு போதிய அவகாசம் அளிக்காமல், அவசரமாக முடிவு எடுப்பது விவேகமான செயலாகாது என்றும் அவர் கூறினார்.

ஜிபிஎம்மின் பரிந்துரைகளை அமைச்சிடம் முன்வைப்பதற்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 30 இல் கல்வி அமைச்சிடம் தாக்கல் செய்யப்படவிருக்கும் ஜிபிஎம்மின் 15 பரிந்துரைகளின் சுருக்கம்:

1. கல்வி: இலட்சியமும் சித்தாந்தமும்

1.1 (செயல்திட்டம் பொழிப்பு E-4) ஒரு தனி நபரின் திறமையை வெளிக்கொணர்ந்து ஆளுமை அளித்தல்; பகுத்தறியும் ஆற்றலை மேம்படுத்துதல்; அந்நபரின் மனம் மற்றும் உடல் சார்ந்த அருந்திறன்கள் மீது நம்பிக்கை ஊட்டுதல்; அந்நபர் சுயமாக தூண்டப்பட்டு மாற்றத்தின் முகவராகுவதற்கான கைத்திறம், அறிவு ஆகியவற்றுடன் ஆன்மீக மற்றும் நன்னெறி கோட்பாடுகளைப் போதித்து அந்நபரை அவரின் மற்றும் சமூகத்தின் மிகச் சிறந்த நலன்களுக்காக பணியாற்றுபவராக்குவதை இந்நாட்டு கல்வி நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

1.2 சமநிலையுடைய கல்வி அமைவுமுறை நமது நோக்கமாக இருக்க வேண்டும். கல்வி தேசிய சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள [JERI – jasmani, emosi, rohani, intelek] இந்த உயர்ந்த குறிக்கோள்களை அடைவதற்கு மனித, சமய மற்றும் ஆன்மீக தன்மைகளை உள்ளடக்கிய தகைமை அடிப்படையிலான கல்வி வழங்கப்பட வேண்டும்.

1.3 பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றால் மாணவர்களின் நற்பண்புகள் செல்வாக்குப் பெறுகின்றன. ஆகவே, இம்மூன்று தரப்பினரும் ஒன்றிணைந்து கூட்டாக மாணவர்களின் நற்பண்புகளை பேணி வளர்க்க வேண்டும்.

2. நியாயம்

2.1 சிறப்பாக தேர்வு நிலையை அடையும் மாணவர்கள் மட்டுமல்லாமல் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவது முக்கியமாகும். பள்ளிப்படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதில் அக்கறை காட்ட வேண்டும். போதுமான நிதி ஒதுக்கீடுகள் அளிக்க வேண்டும்.

2.2 இக்கல்விப் பெருந்திட்டத்தில் உயர்மட்ட மாணவர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் பாதிப்புற்று பின்தங்கிய மாணவர்கள் மீது போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.

2.3 வசதியற்ற குழுந்தைகளுக்கு சிறப்பான ஆதரவு அளிக்க வேண்டும். வசதிபடைத்தவர்கள் தங்களுடைய குழந்தைகளை அவர்கள் விரும்பிய பள்ளிகளுக்கு அனுப்ப முடியும். ஆனால், அவ்வாறான வாய்ப்பு குறைந்த வருமானம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. இதில் மேல்நோக்கி செல்வதற்கு தடையாக இருக்கிறது. இக்குறைபாட்டை பின்னர் அகற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, வசதியற்றவர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்கு அரசாங்கம் கூடுதல் நிதி மற்ற இதர வசதிகளை அளிக்க வேண்டும்.

2.4 ஒவ்வொரு பள்ளிக்கும், அது எங்கிருந்தாலும், போதுமான நிதி ஒதுக்கீட்டை சமமான அடிப்படையில் அரசாங்கம் வழங்க வேண்டும்.

3 சமநிலை

3.1 அனைத்து மொழிப்பள்ளிகளும்  “தேசியப்பள்ளி” என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்.

3.2 போதுமான எண்ணிக்கையிலான பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கிலம் உட்பட, புதிய இதர மொழிப்பள்ளிகள் திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

3.3 வாணிக நோக்கமற்ற தாய்மொழிப்பள்ளி, சமயப்பள்ளி, தனியார் பள்ளி (சீன சுயேட்சை பள்ளி அல்லது இஸ்லாமிய சமயப்பள்ளி) போன்றவை தேசிய கல்வி அமைவுமுறையின் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதோடு அவை நிதி மற்ற இதர உதவிகள் பெறுவதற்கான உரிமை அளிக்கப்பட வேண்டும்.

3.4 தற்போது அமலில் இருக்கும் மொழிப்பள்ளிகளுக்கு எவ்விதப் பாதகத்தையும் ஏற்படுத்தாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, சீனம், ஆங்கிலம், தமிழ், இபான், கடஸான் மற்றும் டுசூன் ஆகிய மொழிகளுக்கு பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

3.5 தாய்மொழிப்பள்ளிக்கான உரிமை மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. தாய்மொழிப்பள்ளிகளும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்ற உரிமை உடையவர்கள் என்பதால், அப்பள்ளிகளும், அம்மாணவர்களும் தேசியப்பள்ளிக்கு சமமாக நடத்தப்படுவதை, வளர்ச்சியடைந்து மேம்பாடு அடைவதை கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.

4 ஒற்றுமை

4.1 (CH 3.21) அனைத்து பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டை வளர்க்கும் பாடத்திட்டங்கள் அமல்படுத்துதல்.

4.2 பள்ளிகளில் வளர்ந்து வரும் இனவாதப் பிரச்னைகள் மற்றும் சமய ஊறுவிளைவித்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய்மொழிப்பள்ளிகள் மீது பலிபோடக்கூடாது.

4.3 பிடிஎன் பயிற்சிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

5 பாலியல் சமத்துவம்

5.1 பள்ளிகளில் படிப்பைக் கைவிடுவதில் மாணவிகளைவிட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதற்காக மாணவிகள் தண்டிக்கப்படக் கூடாது. செயல்திட்டங்களும், வளங்களும் இருதரப்பினருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். நமது கல்வி அமைவுமுறை இதனைப் பிரதிபலிக்க வேண்டும்.

5.2 தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் பயிற்சி திட்டங்களில் மாணவர் மற்றும் மாணவி ஆகியோருக்கு அனைத்துப் பயிற்சிகளிலும் வாய்ப்புகள் அளிக்க வேண்டும். சிகை அலங்காரம், தையல்கலை, சமையல், மின்சாரம் மற்றும் வாகனம் பழுதுபார்க்கும் பட்டறை பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் சமமாக திறந்துவிட வேண்டும்.

6. கல்வி நிருவாகப் பகிர்வு

6.1 கல்வியின் மீதான மத்திய அரசாங்கத்தின் முழு அதிகாரம் மாநில மற்றும் நகராட்சி மன்றம் வரையில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

இந்த அதிகாரப் பகிர்வை அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.

7 திட்டமிடும் அமைவுமுறை

7.1 பள்ளிக்கு திட்டமிடுகையில் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பெற்றோர்களின் விருப்பம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தல்.

7.2 கல்வி ஆணையம் அமைத்து கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் கண்காணித்தல். இது அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எவ்வித வேறுபாடின்றி அமலாக்கப்படுவதை உறுதி செய்ய உதவும்.

7.3 இன மற்றும் சமய வேறுபாடின்றி தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உபகாரச் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

7.4 கல்வி அமைச்சின் அனைத்து நிலைகளிலும் சீன, தமிழ் மற்றும் இதர மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்.

8 கற்பித்தலுக்கான தரம்

8.1 ஆசிரியர்கள் கல்வி அமைவுமுறையின் தூண்கள். தொழிலியல் சார்ந்த கல்வி போதனையாளர்களாக அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

8.2 போதுமான தரம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவர்களிடம் பயிலும் மாணவர்களின் தாய்மொழியில் போதிப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

8.3 ஆசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுதல், அவர்களின் பதவி உயர்வு போன்ற அனைத்தும் அவர்களின் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். கோட்டா முறைக்கு (பங்கு வீதம்) இடமளிக்கக்கூடாது.

9 மதிப்பீடு மற்றும் தேர்வு

9.1 மலேசிய கல்வித் தரத்தின் வீழ்ச்சிக்கு குறைந்த தர அளவில் மதிப்பீடு செய்யும் முறைதான் காரணம்.

9.2 பொதுத் தேர்வுகள் இரகசியப் பெட்டி பதிவு முறையில் நடத்தக் கூடாது. தேர்வு இலாகா அதிகாரிகள் முழு அறிக்கைகளை வெளியிட்டு தேர்வுகள் நடத்தும் முறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைமையும் இருப்பதைக் காட்ட வேண்டும், குறிப்பாக எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் போன்ற தேர்வுகளில் இம்முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.

9.3 பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதி எஸ்டிபிஎம்/மெட்டிரிக்குலேசன் என்றிருப்பது முரண்பாடானதாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.

9.4 சீன சுயேட்சை இடைநிலப்பள்ளிகளின் யுஇசி சான்றுகளை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

9.5 சீனமொழி எஸ்பிஎம் பாட தேர்வு புனராய்வு செய்யப்பட வேண்டும்.

10 மொழிப் பிரச்னைகள்/ புதுமுக வகுப்பு

10.1 பஹசா மலேசியா, ஆங்கிலம், சீன மற்றும் தமிழ்மொழிகள் தவிர, இதர மொழிகள் பயில்வது முடிந்த அளவிற்கு வசதியானதாக இருக்க வேண்டும்.

10.2 தேசிய – மாதிரி பள்ளிகள் தேசியப்பள்ளிகளின் பஹசா பாடத்திட்டத்திற்கு மாற வேண்டும் என்பதோடு புதுமுக வகுப்பு அகற்றப்பட வேண்டும் என்ற முன்மொழிதல்கள் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்.

தேசிய – மாதிரி பள்ளிகளின் பஹசா மலேசியா தரத்தை தேசிய பள்ளிகளின் பஹசா மலேசியா தரத்திற்கு உயர்த்தும் நோக்கத்தை அடைவதற்கு தேசிய – மாதிரி பள்ளிகளின் புதுமுக வகுப்பிற்கு தேவையான சீர்திருத்த நடவடிக்களை எடுக்க வேண்டும். அவற்றை மூடுவதல்ல.

10.3 தாய்மொழிப்பள்ளிகளில் பஹசா மலேசியா மற்றும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாக போதிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து முடிக்கக்கூடிய கற்பிக்கும் வழிமுறை காணப்பட வேண்டும்.

11 பாடத்திட்டம் பிரச்னைகள்

11.1 பள்ளி பாடத்திட்டங்கள் முறையான புனராய்வுக்கு உட்படுத்தப்படுத்தி அவை மாறும் சமூக மற்றும் சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மேலான நேர்மையான மாணவர்களை உருவாக்குகிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

11.2 வரலாறு, பூகோள அறிவியல் மற்றும் இலக்கியம் ஆகிய பாடங்கள் போதுமான, பாரபட்சமற்ற முறையில் போதிக்கப்பட வேண்டும்.

11.3 வரலாறு கீழ்நிலை வகுப்புகளில் அறிமுகப்படுத்தல் மற்றும் எஸ்பிஎம் தேர்வுக்கு கட்டாயப் பாடம் ஆக்கப்படுதல் அமல்படுத்தக்கூடாது. வரலாற்று பாடம் புனராய்வு செய்யப்பட வேண்டும்.

11.4 மாணவர்களின் சொந்த சமயம் நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

11.5 பல்லினக்கலாச்சாரம் மற்றும் வெவ்வேறான மனிதத் தன்மை போன்றவை பாடத்திட்டங்களில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

12 Sekolah Menengah Jenis Kebangsaan (Conforming)

12.1 – 12.8 இப்பள்ளிகளுக்கு அரசாங்கம் 1960 ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு அவற்றின் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்.

13 பாலர்பள்ளி

13.1 நான்கு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பாலர்பள்ளி கல்வி வழங்கும் கடப்பாடு கல்வி அமைச்சுக்கு உண்டு.

13.2 பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி கல்விக்கு எவ்வித வேறுபாடு இன்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

13.3 பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி கல்வி இலவசமாக அனைவருக்கும், வெளிநாட்டினர் மற்றும் நாடற்றவர் உட்பட, வழங்கப்பட வேண்டும்.

13.4 பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி கல்வி சிறார்களின் மேம்பாட்டிற்கு ஏற்ற அடித்தளமாக அமைய வேண்டும்.

14 தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் கல்வி பயிற்சி

14.1 தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் கல்வி பயிற்சியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

14.2 யுபிஎஸ்ஆர் தேர்வு அடிப்படையில் பிஎவி பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக் கொள்வது பரிசீலிக்கப்பட வேண்டும்.

14.3 அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் பயிற்சி கழகங்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

14.4 பொது தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் பள்ளிகள் பல்வேறு தொழிற்துறைக்களுக்கான பயிற்சிகள் வழங்க வேண்டும்.

15. டிரஸ்ட் பள்ளிகள்

 15.1 டிரஸ்ட் பள்ளி என்ற திட்டம் அமல்படுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது. மாறாக, அது பொதுமக்களின் கலந்தாலோசனைக்கு விடப்பட வேண்டும்.. கல்வி வாணிபமாக்கப்பட்டு இறுதியில் அரசாங்கம் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஆவன செய்ய வேண்டிய கடப்பாட்டை கைவிடுவதில் முடிவுறும் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. மேலும், அத்திட்டம் அமல்படுத்துவது வெறுக்கத்தக்க அல்லக்கைகளின் ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும்.

TAGS: