அதிகமாக ஒன்னும் கேக்கல, கொஞ்சம் பாத்து குடுங்க சார்!

mic-palanivelஆட்டோவில் பயணம் செய்பவர்கள் கட்டணம் எவ்வளவு என்று கேட்டால், ஆட்டோக்காரர் மீட்டரை பார்ப்பார். ஆளைப் பார்ப்பார். பின்னர் முழங்கையைச் சொறிவார். அதன் பின்னர் “பாத்து குடுங்க சார்”, என்று கூறுவார். கடந்த வெள்ளிக்கிழமை த ஸ்டார் நாளிதழில் “We didn’t ask for a lot” என்ற செய்தியைக் கண்டபோது ஆட்டோக்காரர்களின் ஞாபகம்தான் வந்தது.

“நாங்கள் அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நிதி உதவிகளைக் கேட்டோம்”, என்று பிரதமர் நஜிப்பிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறித்து மஇகா தலைவர் ஜி. பழனிவேல் கூறினார்.

ஆனால், சுங்கைப்பட்டாணியில் பேசிய ஜி. பழனிவேல் நாட்டிலுள்ள எல்லா இனமக்களுக்கும் உதவிவரும் பிரதமர் நஜிப் இந்தியர்களையும் அவர் மறப்பதில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கும், ஆலயங்களுக்கும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கும் மானியத்தை அள்ளித் தந்துள்ளார்” என்றார். (தநே 16.12.12)

இப்படி அள்ளித் தரும் நஜிப்பிடம் ஏன் கிள்ளித் தாருங்கள் என்று கேட்க வேண்டும்?

ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம்

“நாட்டில் இருக்கக்கூடிய இருபது லட்சம் இந்தியர்களில் இரண்டு லட்சம் பேர் வறுமைப்பிடியில் சிக்கித் தவிப்பதாக தாம் பிரதமர் அவர்களிடம் கூறவே, இவர்களின் விபரத்தை ம இ.கா தயாரித்து தம்மிடம் வழங்கக்கோரி பிரதமர் தம்மை பணித்ததாக”, பழனிவேல் கூறினார்.

மஇகா இதற்கு முன்பு எத்தனையோ அறிக்கைகளைத் தயாரித்து கொடுத்துள்ளது. ஆனால், பாரிசான் அரசாங்கத்திடமிருந்து கிடைத்ததெல்லாம் “நஹீன்”தான். இப்படி கூறிவர் மஇகா முன்னாள் தலைவர் ச. சாமிவேலு.

தற்போதைய மஇகா தலைவர் பழனிவேலு டிசம்பர் 2010 க்கும் டிசம்பர் 2012 இடையில் வாழும் கலையைக் கற்றுக்கொண்டு விட்டதுபோல் தெரிகிறது.

டிசம்பர் 23, 2010 இல் பிரதமராக இருந்தவர் நஜிப்தான். அப்போது அவர் இந்தியர்களுக்கு அள்ளித் தரவில்லை. பழனிவேலும் மந்திரியாகவில்லை. அன்றைய நிலையில் இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்ட சமூகமாக இருந்தது. இதனைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தவர் பழனிவேல். “நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்…அதில் சந்தேகமே இல்லை” என்று பறைசாற்றிய அவர் கடந்த இரண்டு ஆண்டில் அந்த ஓரங்கட்டப்பட்ட நிலையிலிருந்த இந்தியர்களை அதிலிருந்து மீட்டு விட்டாரா? அதனால்தான் அதிகமாக ஒன்றும் வேண்டாம் என்கிறாரா?

ஒரு வேளை, தாம் மீண்டு விட்டதால், மந்திரியாகி விட்டதால், ஓரங்கட்டப்பட சமூகத்தை மீட்க அம்னோ மலாய்க்காரர்களை மீட்க அமல்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற எதனையும் பெரிய அளவில் கேட்டு கிடைத்ததும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் பாத்துக் குடுங்க, சார் என்ற முழங்கையைச் சொறியும் கலையைக் கற்றுக்கொண்டு விட்டாரோ?

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பாத்துக் குடுங்க, சார் என்றாராம். பிரதமரும் ஒப்புக்கொண்டாராம். அந்த அதிகமாக ஒன்றும் கேட்காத வேண்டுகோளின் பெரும் பகுதி 2014 ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று பிரதமர் கூறினாராம். இதுவும் கேட்கப்படும், கொடுக்கப்படும் என்ற ஏமாற்றுக் கலையின் ஓர் அங்கம்தான்!

ஓரங்கட்டியவர்களை ஓரங்கட்டப்பட்டவர்கள் ஆதரிக்க வேண்டுமா?

முன்னதாக, இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்ட சமூகம் என்று உலகிற்கே கூறினார். இப்போது, இருபது இலட்சம் இந்தியர்களில் இரண்டு இலட்சம் இந்தியர்கள் வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று பிரதமரிடமே கூறினாராம்.

இந்நாட்டை கோடீஸ்வர நாடாக்கிய இந்தியர்களை ஓரங்கட்டியது, இரண்டு இலட்சம் இந்தியர்களை வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்க வைத்தது யார்? இவைமட்டுமல்ல. தினக்குரல் பகிரங்கப்படுத்தும் “சுடும் உண்மைகள்” யாரால் உருவாக்கப்பட்டவை?

கடந்த 55 ஆண்டுகளாக இந்திய சமூகத்திற்கு எதிராக இத்தனைக் கொடுமைகளையும் இழைத்தது அம்னோ-மசீச-மஇகா அரசாங்கம். இதனைப் பகிரங்கமாக உறுதிப்படுத்தியவர் மஇகாவின் இன்றையத் தலைவர் ஜி. பழனிவேல்.

இந்தியர்களை ஓரங்கட்டிய அம்னோ-மசீச-மஇகா அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம் ஆதரித்து, வாக்களித்து ஆட்சியில் மீண்டும் அமர்த்த வேண்டும் என்று அதே அரசாங்கத்தைச் சேர்ந்த, அதே பாரிசான் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான மஇகாவின் தலைவரான ஜி.பழனிவேல் இந்தியர்களை வற்புறுத்துகிறார். இதற்கு அவர் நியாயம் கூற வேண்டும்.

TAGS: