சிறுபான்மை இனத்தினரான இந்தியர்கள் மீது கம்போங் மேடானில் நடத்தப்பட்ட தாக்குதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 8 இல் தொடங்கி மார்ச் 15 வரையில் நீடித்தது.
இத்தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தாக்குதலை நடத்தியவர்கள் வெளியிடத்திலிருந்து வந்த மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தாதற்கு இதுவே காரணம்.
ஆகவே, கம்போங் மேடான் போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து செயல்படக் கூடிய பல்லின பணிப்படை (multi-ethnic task force) அமைக்கப்பட வேண்டும் என்று சுவாராம் இயக்கத்தின் நிருவாக இயக்குனர் டாக்டர் குவா கியா சூங் நேற்று இரவு (18.12.2012) கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடந்த கம்போங் மேடான் தாக்குதல் பற்றிய ஓர் ஆங்கில நூல் வெளியீட்டிற்குப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் கூறினார்.
“Violence Against An Ethnic Minority In Malaysia – Kampung Medan 2001” என்ற ஆங்கில நூல் சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம் மற்றும் முனைவர் எஸ். நாகராஜன் ஆகியோரால் எழுதப்பட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர் முனைவர் குவா கியா சூங்.
நல்ல நூல்
இந்த ஆங்கில நூல் முனைவர் எஸ். நாகராஜன் அவரது முனைவர் பட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் கம்போங் மேடான் தாக்குதலை “ஓர் இனக் கொலை” என்று கூறிய அவர், இத்தாக்குதலை “ஓர் இனக் கலவரம்” என போலீசார் வர்ணித்து மக்களை ஏமாற்றினர் என்றாரவர்.
“நாட்டின் மனச்சாட்சிக்கு பதில் அளிக்க இத்தாக்குதலை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்”, என்று கூறிய கணேசன், “என்ன நடந்தது என்பதை காலக்கிரமமாக பட்டியலிடும் ஒரு நல்ல நூல் இது”, என்று மேலும் கூறினார்.
இது “மார்ச் 8″ அல்ல
இந்நூல் வெளியீடு நிகழ்ச்சியின் போது பேசிய அதன் ஆசிரியர்களில் ஒருவரான கா. ஆறுமுகம் இந்த ஆங்கில நூல் அவர் முன்னதாக தமிழில் எழுதி வெளியிட்டிருந்த “மார்ச் 8″ என்ற நூலின் மறுஆக்கம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
3,000 பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்டுவிட்ட “மார்ச் 8″ தடை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் மேல்முறையீடு நீதிமன்றமும் அந்நூல் தேச நிந்தனையானது எனத் தீர்ப்பளித்து தடையை நிலைநிறுத்தியுள்ளன. தற்போது அவ்வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து மேலும் விவரிக்க விரும்பவில்லை என்று ஆறுமுகம் கூறினார்.
ஒரு கூட்டத்தினர் இந்தியர்களை தாக்கினர்
இஸ்லாம் எந்த வகையான வன்முறைக்கும் எதிரானது. அது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நாடுகிறது. அதிலும் குறிப்பாக அண்டை வீட்டுக்காரர்களுக்கிடையில் வன்முறைக்கு அதில் இடமில்லை. “நான் ஒரு மலாய்க்காரர், ஒரு முஸ்லிம். கம்போங் மேடானில் நடந்தது இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களும் இடையிலான ஓர் இனக் கலவரம் அல்ல என்று அரசு சார்பற்ற இசா எதிர்ப்பு இயக்கத்தின் (GMI) தலைவரான சைட் இப்ராகிம் சைட் நோ அக்கலந்துரையாடலில் கூறினார்.
“அது ஓர் இனக் கலவரம் அல்ல. அங்கு கூட்டத்தினர்களுக்கிடையில் தாக்குதல் நடக்கவில்லை என்பதை இந்நூல் தெளிவாகக் காட்டுகிறது.
“அங்கு ஒரு கூட்டத்தினர் இந்தியர்களை தாக்கு, தாக்கு என்று தாக்கினர்.
“அது ஒரு புறம்போக்கு பகுதியாக இருந்த போதிலும் அங்கு வாழ்ந்தவர்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கு வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வெளியிடத்திலிருந்து வந்தவர்கள்”, என்று சைட் இப்ராகிம் மேலும் கூறினார்.
இச்சம்பவத்தின் பின்னணி அரசியல் சூழ்ச்சி என்று கூறிய சைட், அன்றைய சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் கிர் தோயோவை பதவியிலிருந்து அகற்றுவதற்காக அம்னோக்காரர்கள் மேற்கொண்ட சதித்திட்டத்தின் வெளிப்பாடுதான் இந்த கம்போங் மேடான் தாக்குதல் என்றாரவர்.
ஆனால், அதிகார வர்க்கம் அளிக்கும் விளக்கம் இதுவல்ல என்றும் அவர் கூறினார்.
ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?
தாக்குதல் நடந்த இடத்தில் 2,000க்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் இருந்தனர். வெறும் 100 குண்டர்களை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. போலீசார் மக்களுக்கு காதுகுத்துகிறார்கள் என்று கூறிய கணேசன், எவ்வளவோ கேட்டுக்கொண்டும் இன்றுவரையில் இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன் என்று வினவினார்.
“விசாரணை நடத்தப்பட வேண்டும்”, என்று கணேசன் வலியுறுத்தினார்.
பக்கத்தான் தயாரா?
“இந்நூலில் கூறப்பட்டிருப்பதிலிருந்து எழும் தொடர்புகள் குறித்து சிந்திக்க வேண்டும்”, என்று ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் காலங்களில் கம்போங் மேடான் போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய குவா, அரசாங்க அமைப்புகள் அனைத்திலும் பல்லின மக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
தற்போது இராணுவப் படையில் 99 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர் அவர்களே. இந்நிலை மாறவேண்டும்.
அரசு சேவைகள் அனைத்திலும் பணி புரிபவர்கள் இன அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்றாரவர்.
தேர்தல், மனித உரிமைகள் போன்ற அனைத்தும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று குவா கூறினார்.
“கம்போங் மேடான் தாக்குதல் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு மக்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
“நாம் மக்களிடம் இவற்றை தெரிவிக்க வேண்டும். அதற்கு இந்நூலை பயன்படுத்த வேண்டும்”, என்று குவா வலியுறுத்தினார்.
மேலும், “இவற்றை எல்லாம் பக்கத்தான் கூட்டணியின் முன்வைக்க வேண்டும். இது சரியான நேரம்”, என்றார் குவா கியா சூங்.