மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பறியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின. அந்நிலைக்கு ஆபத்து வந்துவிட்டதாகவும் அதனால் தமிழர்கள் பலத்த பாதிப்புக்கு உட்படுவார்கள் என்கிறார் சுவராம் மனித உரிமை கழகத் தலைவர் கா. ஆறுமுகம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கு மாறாக கடந்த சில தினங்களாக நமது அனைத்து நாளிதழ்களும் மத்திய அரசாங்கத்தின் பிரச்சார வாகனமாக செய்தி வெளியிட்டு வருவது மிகுந்த கவலையை அளிப்பதாகவும் அதனால் இறுதியில் பாதிப்படைவது ஒட்டு மொத்த தமிழினமே என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.
இந்நிலைக்குக் காரணம் உள்துறை அமைச்சும் பிரதமர் இலாகாவுமாகத்தான் இருக்கும். அரசியல் பீதியில் அல்லல் படும் தேசிய முன்னணி தமிழர்களை மீண்டும் அடிமை படுத்த இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான, சனநாயகத்திற்குச் சாவு மணி அடிக்கும் கொடூரமான செயல் என வன்மையாக சாடிய கா. ஆறுமுகம், “சமூகத்தின் மூச்சை உள்வாங்கி பேனா முனையால் அதை சொற்களாக செதுக்கி சமூக விடுதலையைக் கோரும் எண்ணற்ற பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் நிருபர்களுக்கும் இந்நிலை மிகவும் வேதனையானதாக இருக்கும்” என்றார்.
நாளிதழ் ஒரு தகவல் சாதனம். அது மக்களின் சவால்களையும் பிரச்சனைகளையும் தீர்வுக்காக அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது. அதேவேளையில் எதிர்க்கட்சியினர் ஆட்சி செய்பவர்களைத் தட்டி கேட்க ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. அதோடு பத்திரிகை என்பது ஓர் அரசியல் அழுத்தத்தைத் தர வல்லது.
“மக்களின் பிரச்சனைகளை அரசாங்கம் அறியும்படி செய்திகளை வெளியிடாமல் அரசாங்கம் செய்யும் செயல்களை மட்டும் பக்கம் பக்கமாக புகழ்ந்து பாடி உண்மைகளை மூடி மறைக்கும் போது, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் ஒரு மாயை உருவாக்கப்பட்டு, விமர்சனம் அற்ற நிலையில் அரசாங்கம் தான் செய்வதுதான் சரி என்று மீண்டும் தவற்றையே செய்கிறது” என்கிறார் ஆறுமுகம்.
வானொலி, தொலைக்காட்சி போன்றவை அரசாங்கத்தின் கட்டுபாட்டில் உள்ளன. ஆனால், நாளிதழ்கள் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. பிரசுரம் செய்ய அரசாங்கத்தின் சில கட்டுபாடுகள் இருப்பினும், பத்திரிக்கை தர்மத்தை நிலைபடுத்த நமது நாளிதழ்கள் தேவையற்ற சுய கட்டுபாடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறார் ஆறுமுகம்.
“தமிழ்ச் சமூகம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்குத் தமிழ் நாளிதழ்கள்தான் போராட வேண்டும். நமக்காக சீன, மலாய் அல்லது ஆங்கில நாளிதழ்கள் போராடாது. நமது கையைக் கொண்டு நாமே நமது கண்களைக் குத்திக் கொள்ளக் கூடாது.”