–பாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்) (Joint Action Group for Gender Equality (JAG)), ஜனவரி 29, 2013.
வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
‘அச்சமின்மை’ எனும் ஒரு நிர்பயத்தை நாம் இன்று நினைத்துப் பார்க்கிறோம். புதுடில்லியில் 2012 டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற ஒரு மிருகத்தனமான கற்பழிப்புக் கொடூரம். அதனால் ஏற்பட்ட வன்மையான காயங்கள். அந்தக் காயங்களினால் இரண்டு வாரங்களுக்கு உயிருக்குப் போராடிய ஒரு தைரியமான இளம் பெண். அவரை இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.
சினிமாவுக்குப் போய்விட்டு தன்னுடைய தோழருடன் வீட்டிற்குச் சீக்கிரமாகச் செல்ல ஒரு பேருந்தில் ஏறினார். வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக இருவரும் அந்தப் பேருந்திலேயே மிகக் கொடுமையாகத் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசி எறியப்பட்டனர். அங்கிருந்த ஆடவர்களினால், அந்த இளம்பெண் மிக மிக மோசமான வல்லுறவுகளுக்கு பலிக்கடா ஆகிறாள். அவளுடைய ஆண் தோழர் அங்கேயே அடித்து நொறுக்கப்பட்டார்.
நிர்பயாவும் அவளுடைய தோழரும் ஒரு தெரு ஓரத்தில் அனாதையாகத் தூக்கி வீசப்படுகின்றனர். யாருமே அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு மணி நேரம் கழித்து போலீஸ் வந்து எட்டிப் பார்க்கிறது.
அதைப் போல, மலேசியாவிலும் பல கொடூரமான வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் சாதாரண மக்களாகிய நமக்கும் பெரிய பங்கு உண்டு. நம்முடைய ஒட்டு மொத்த உணர்வுகளையும் அந்தச் சம்பவங்கள் ஓரங்கட்டிப் பார்க்கின்றன.
24 வயது கணினிப் பொறியியலாளர் நூர் சூசாலி மொக்தார். அவர் நம் நினைவுகளை விட்டு இன்னும் அகலவில்லை. ஒரு பேருந்து ஓட்டுநரினால் கழித்து நெரிக்கப்பட்டு வல்லுறவின் போர்வையில் பிணமாகிப் போனவர். அடுத்து 28 வயது கென்னி ஓங் எனும் ஒரு கணினி நிபுணர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
16 வயது நூருல் ஹானிஸ் காமில். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது மிருகத்தனமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 10 வயது நூருல் ஹுடா கனி. ஒரு பாதுகாவலரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். எட்டு வயது நூரின் ஜாஸ்லின் ஜாஸ்மீன். ஒருபால் புணர்ச்சிக்கு பலியாகிக் கொலை செய்யப்பட்டாள். அனைத்தும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். நெஞ்சத்தைக் கிள்ளும் வேதனைக் காயங்கள்.
2001ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், பாலியல் வல்லுறவுகள் 1217லிருந்து 3301ஆக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன என்று காவல் துறையினர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு பெரிய பனிப்பாறையில் ஒரே ஒரு சின்ன நுனிக்கட்டி. அவ்வளவுதான். பொதுவாக, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தாங்கள் களங்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகின்றார்கள். தாங்கள் குறை கூறப்பட்டு வார்த்தைகளால் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்க, மறைந்து ஒதுங்கிப் போகிறார்கள். உண்மையான அசல் உண்மைகள் சாகடிக்கப் படுவதைத் தவிர்க்க மாற்றுவழி தேடுகிறார்கள். அதனால்தான், பாலியல் வல்லுறவுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய நாளில், நாம் நிர்பயாவின் நினைவுகளுக்கு மதிப்புக் கொடுத்து மரியாதை செய்கிறோம். அதே சமயத்தில், 2003ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு தொடர்பான ஒரு நினைவுப் பத்திரத்தை நாம் அரசாங்கத்திடம் தாக்கல் செய்ததை நினைவு படுத்த வேண்டும். நம்முடைய தாக்கல் பாத்திரத்தை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம். அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், இப்போதைக்கு மேலும் பல உடனடித் தீர்வுகள் அவசியமாகத் தேவைப் படுகின்றன. வல்லுறவின் போது ஏதாவது ஒரு பொருளைப் பயன்படுத்துவதில் உள்ள குற்றவியல் நடைமுறை சட்ட வரையறைகளை கண்டிப்பாக விரிவுபடுத்தியாக வேண்டும்.
பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டில் மலேசியா உறுப்பியம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டை Convention on the Elimination of All Forms of Discrimination Against Women என்று அழைக்கிறார்கள். ஆகவே, அந்த மாநாட்டின் சட்டங்களையும் அதன் கொள்கைகளையும் பின்பற்றிச் செல்வதில் மலேசியாவுக்கும் கடமை உணர்வு உள்ளது என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது.
பாலியல் வல்லுறவு (violence against women) என்று சொல்லப்படுவதும் பெண்களுக்கு எதிராக அமையும் ஒரு வகையான வேறுபாடு காட்டும் பாரபட்சத் தன்மைதான். ஆகவே, பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டின் சட்டக் கூறுகளில் 5வது விதியின்படி (Under article 5 of CEDAW), ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே தீங்குகளை விளைவிக்கும் பாரபட்சங்களைக் கலைவதில் அரசாங்கத்திற்கு ஒரு நடுநிலையான கடப்பாடு இருக்கிறது என்பதை நாம் இங்கே நினைவுகூருகிறோம்.
இரு பாலரிடமும் உயர்வு தாழ்வு எனும் வேறுபாட்டுக் கருத்துகளுக்கு இடம் இல்லை. சட்டத்திலும் சரி உண்மையான வாழ்வியல் நிலையிலும் சரி, ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே சரிசமமான சமத்துவம் நிலவ வேண்டும். முன்பைக் காட்டிலும் இன்றையக் காலக் கட்டத்தில் பெண்கள், பொது வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பாலியல் துன்புறுத்தல்களினால் அனுதினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நிர்பயாவுக்கு ஏற்பட்ட வல்லுறவுக் கொடுமை என்பது, பெண் வெறுப்பினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளுக்கு நம் கவனங்களை ஈர்த்துச் செல்கிறது. உறவு முறை இல்லாத ஓர் ஆண் தோழருடன், நிர்பயா தைரியமாக பொது இடத்தில் சுற்றித் திரிந்தது அந்தக் கொடுமையான நிகழ்வுக்கு ஒரு காரணம் என்று குற்றம் புரிந்தவர்களில் ஒருவர் சொல்லி இருக்கிறார். அத்துடன் அவர்களை எதிர்த்து நிர்பயா போராடியதால்தான் அவர் அந்த மோசமான நிலைக்கு உள்ளானார் என்றும் சொல்லப்படுகிறது. நம்முடைய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் (Penal Code) பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சட்டத்தைத் தாண்டிய ஒரு நிலைமையும் அவசியமான தேவையாக இங்கே அமைகின்றது. ஆகவே, மனித மனப்போக்குகளில் மாற்றங்கள் தேவை. மனித எண்ணங்களில் மாற்றங்கள் தேவை.
சுருங்கச் சொன்னால், வன்முறை, அதிகாரம் ஆகிய இரண்டின் குற்றப் பார்வையே இந்த வல்லுறவு ஆகும். ஒரு சமுதாய அணுகுமுறையில் இருந்து பார்த்தால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் பிரச்னை இருக்கிறதே, அது எப்போதுமே முதன்மைப் படுத்தப்பட வேண்டும் என்பது தெரிய வருகிறது. வல்லுறவு என்பதைப் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட ஒரு பிரச்னை என்று நாம் பார்க்கக் கூடாது. அதை ஒரு மனித உரிமை மீறல் செயலாகத்தான் பார்க்க வேண்டும்.
திறமையற்ற விசாரணைகளும் வலு குறைந்த வழக்குகளும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. தவிர, பாலியல் வன்முறைகளைப் பற்றிய கொடூரங்களுக்குக் குறைவான புகார்கள் கிடைப்பது பெரும் கவலையைத் தரும் விசயமாகும். சமுதாயத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, அவர்களுக்கு உள்ள சமூக நிலை தொடர்பான பழைய எண்ணங்கள், காலாவதியான கருத்துகள் மாற்றப்பட வேண்டும். தெளிவான சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும்.
கற்பழிப்புச் சம்பவங்களைத் தவிர்க்கும் முறைகளைப் பற்றி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லித் தருவதை நிறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டம் வந்துவிட்டது. அதற்குப் பதிலாக யாரையும் யாரும் கற்பழிக்கக்கூடாது; கற்பழிக்க முடியாது என்று ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சொல்லித் தர வேண்டிய காலக் கட்டத்திற்கு வந்துவிட்டோம்.
தன்னைத் தாக்கியவரை எதிர்த்துப் போராடிய நிர்பயாவின் துணிச்சலை நாம் நினைத்துப் பார்க்கிறோம். உயிருடன் வாழ்ந்து காட்டுவோம் எனும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை; இறப்பிலும் ஒரு துணிச்சலான போராட்டம்; உலக மாந்தர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. நம் குழந்தைகளுக்கு நியாயங்களைச் சொல்லித் தருவதில் இருந்து நாம் என்றைக்குமே தோல்வி அடைந்துவிடக் கூடாது. பாலியல் வன்முறை என்பது சகித்துக் கொள்ள முடியாதது என்பதை நாம் ஒரு தீர்க்கமான முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பாலியல் வன்முறை என்பது மகா பெரிய அநியாயம், மகா பெரிய பாவம் என்பதில் நமக்கு மாறுபட்ட கருத்துகள் எப்போதுமே இருக்கக் கூடாது.
பாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்) Joint Action Group for Gender Equality (JAG)
அனைத்து மகளிர் செயல் கழகம் (அவாம்) All Women’s Action Society (AWAM)
பேராக் மகளிருக்கான மகளிர்க் கழகம் Perak Women for Women Society (PWW)
சிலாங்கூர் சமூக விழிப்புணர்வு கழகம் (எம்பவர்) Persatuan Kesedaran Komuniti Selangor (EMPOWER)
சிலாங்கூர் மகளிர் நட்புக் கழகம் Persatuan Sahabat Wanita Selangor (PSWS)
சபா மகளிர் செயல்வளக் குழு Sabah Women Action Resource Group (SAWO)
இஸ்லாமியச் சகோதரிகள் Sisters in Islam (SIS)
தெனாகாநித்தா Tenaganita
மகளிர் உதவி அமைப்பு Women’s Aid Organisation (WAO)
மகளிர் மாற்று மையம் Women’s Centre for Change (WCC)