சி.பாண்டிதுரைக்குச் சூடா ஒரு ‘டத்தோ’ பட்டம் பார்ர்ர்சல் ! ( 2-ஆம் இணைப்பு)

OLYMPUS DIGITAL CAMERA-ம. நவீன்

அண்மையில் ஓவியர் சந்திரனின் நூல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. டாக்டர் சண்முகசிவா மற்றும் இயக்குனர் தங்கர் பச்சானின்  பேச்சைக் கேட்பதற்காகச் சென்றிருந்தேன். டைம் சரி இல்லன்னா டி.ராஜேந்தர் படத்த டிவியில பார்க்க வேண்டிய கொடுமை வருவது போல அன்றைக்கும் எனக்கு நேரம் சரியில்லை.

ஓவியர் சந்திரன் நூல் வெளியீட்டு விழாவில் பாண்டிதுரையின் பேச்சைக் கேட்க நேர்ந்த போது நம்பியாரைப் பார்த்த சரோஜா தேவிபோல கையை வாயில் வைத்து அலரத்தொடங்கினேன்.

சமூகத்தில் நடக்கும் அத்தனை அநீதிகளையும் பொறுக்க மாட்டாமல் கொதித்து போயிருந்தார் மனிதர். அவரால் மேடையில் நிர்க்க முடியல. அவ்வளோ கொதிக்கிறாராமாம். மேடையில ஏறுறாரு… இறங்குறாரு… சே குவேரா உயிரோட இருந்து இத பார்த்திருந்தா செருப்ப கலட்டி அடிச்சிக்கிட்டிருப்பாருன்னா பார்த்துக்கிங்க.

‘நடிப்பை ரசித்துவிட்டு போவதில் உனக்கு என்னடா பிரச்னை ?’னு எனக்கேட்பது புரிகிறது. வெறும் நடிப்பா மட்டும் இருந்திருந்தா நமக்குச் சிக்கல் இல்லைங்க. கருத்தைச் சொல்கிறேன் என  மலேசியக் கலைஞர்களின் பெரும் தேவையாக,  அமைச்சர் சுப்ரமணியத்திடம் இப்படி ஒரு பரிந்துரையை வைத்தார்.

“மலேசிய கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு ‘டத்தோ’ கொடுக்கறீங்க… நம்ம கலைஞர்களுக்கு தருவதற்கு என்ன? ஒருவருடத்தில் ஒரு கலைஞருக்கு டத்தோ பட்டம் வேண்டும்” என்று கூறிய போது… அரங்கில் ஒரே கைத்தட்டல். பாண்டிதுரை ஒரே இரவில் புரட்சிவாதியாகிவிட்டார். எனக்கு நம் கலைஞர்களின் அறிவின் மேதமையை நினைத்து கண்ணீர் வந்தது. எப்படி மூளை பிதுங்கி மூக்கி வழியா சிந்துது.

நம் கலைஞர்களை பிச்சைக் கேட்கும் குழுவாக அதிகார வர்க்கத்தினர்தான் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்றால்,  பேச்சாளர்களும், எழுத்தாளர்களுமா அவ்வாறு சிந்திக்க வேண்டும் ? முதலில் ஒரு கலைஞனுக்கான அங்கீகாரம் என்பது என்ன? அவன் கலை வெளிப்பாடு பரந்த தளத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன். பரந்த தளத்திற்கு ஒரு படைப்பு செல்வதற்கும் ‘டத்தோ’ பட்டத்துக்கும் என்னங்கண்ணா சம்பந்தம்.

ஓர் எழுத்தாளனை எந்த அரசியல்வாதி கொடுக்கப்போகும் நன்கொடைக்கும் திகதிக்கும்  காத்திருக்கவைக்காமல், தரமான படைப்பு அவ்வப்போது பதிப்பிக்கப்பட்டு நாடு முழுவதும்  உள்ள பொது மற்றும் கல்லூரி நூலகங்களுக்குக் கொண்டு செல்லும் அரசு சார்ந்த அமைப்புகளை  உருவாக்க இங்கு எந்த அரசியல்வாதிக்கும் துப்பு இல்லை. அவ்வாறு அமைப்பது சாத்தியமாக இருந்தாலும் அவர்கள் அதை செய்யப் போவதுமில்லை.

அரசியல்வாதிகளின் அடிப்படை நோக்கமே கலைஞன் தன்முன் கைக்கட்டி நிர்க்க வேண்டும் என்பதுதானே. அதோடு அரசியல்வாதி கொடுக்கும் பணத்துக்காக நன்றிக்கடனோடு ஒரு கலைஞன் நாக்கைத் தொங்க போட வேண்டும் என்பதே அவர்களின் தலையாய எதிர்ப்பார்ப்பு.

அந்தக் காலத்தில் மன்னனைப் போற்றிய புலவர்கள் போல யாராவது புழுகுபவர்களாவது கிடைப்பார்களா என்பதுதான் அரசியல்வாதிகளின் தலையாய கவலை. அந்தப் புழுகுமூட்டைகளை வைத்துக்கொண்டுதானே இத்தனை காலமாக மொழிக்கும் இலக்கியத்துக்கும் சேவை செய்கிறோம் என நமது ம.இ.கா மந்திரிகள் மமதையோடு இருக்கிறார்கள். ஒருவேளை அரசாங்க பலம் கொண்ட திடமான ஒரு பதிப்பகம்  உருவாகுமேயானால், அதோடு அரசியல்வாதிகளின் கொடை வள்ளல் முகமூடி டர்ர்ர்ர் ஆகிவிடும்.

இதே நிலைதான் ஏனைய கலைகளுக்கும். ஒரு கலைஞன் அதிகாரத்தின் முன் குனிந்து நிர்க்காமல், அவன் கலையைத் தொடர்ச்சியாக மக்கள் முன் பொருளாதாரத் தடையின்றி கொண்டு செல்ல தகுந்த அரசு நிறுவனங்கள் உருவாகும் பட்சத்தில் அவனின் கலை வெளிப்பாடு தொடர்ந்து வீரியத்தோடு இருக்கும். அதை செய்ய வேண்டியது அரசின் கடமை. நம்மை பிரதிநிதிப்பதாகச் சொல்லும்  அரசியல்வாதிகளின் கடமை. முதலில் ம.இ.காவினரிடம் குழைந்து, பின்னர் முதல் நூல் பெருபவரிடம் வளைந்து, சிறப்பு விருந்தினர்களான செல்வந்தர்களிடம் நெளிந்து ஒரு சோரம் போன எழுத்தாளன் அப்படி என்னத்த இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லிடப்போகிறான்?

இந்த வெறுமையைத்தான் ‘சக்தி அறவாரியத்தின்’ தனேந்திரன் போன்றவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நூல் வெளியிடுகிறோம் என சிலரது எழுத்துகளை நூலாக்கி… அதை வெளியிட பிரதமரை வரச்சொல்லி, பிரதமரும் உங்கள் தமிழுக்கு என் சேவையைப் பார் என முழங்க அரசியல் நாடகம் நடக்கிறது. கூடவே பாரிசானுக்கும் ஓட்டு கேட்கப்படுகிறது. போலி அரசியலி அடிப்படை சித்தாந்தமே ‘பிரச்னை இருக்கும் வரைதானே அரசியல்வாதி சேவையாளனாக முடியும்.’

எனவே இவர்கள் பிரச்னையை அகற்ற விரும்பவில்லை. மலேசியக் கலைஞர்கள் தொடர்ந்து அவ்வப்போது கிடைக்கும் எலும்புத்துண்டை நக்கிக்கொண்டு நன்றி உணர்ச்சியோடு பார்க்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம். நல்ல சிந்தனையாளர்கள் அனைத்து கலைஞர்களின் அடிப்படை சிக்கல் தீரவே சிந்திப்பார்கள். தற்காலிக மினுமினுப்புகளை உதறி எரிவார்கள்.

பாண்டிதுரை போன்ற பேச்சாளர்களுக்கு வேண்டுமானால் ‘டத்தோ’ பட்டம் பெரிதாக இருக்கலாம். மக்களிடம் கைத்தட்டல் வாங்க எதையும் சிந்திக்காமல் பேசத்தோன்றலாம். அவருக்கு டத்தோ பட்டம் என்பது அங்கீகாரம் என்றால் அவருக்காக ஒன்றை ஆர்டர் கொடுக்கலாம். என்னைப் பொறுத்தவரை கலை என்பதும்  ‘டத்தோ ‘ பட்டத்திற்கானதல்ல ; கலைஞன் என்பவன் பட்டம் பதவிக்காக  அலைபவனுமல்ல… கலை என்றுமே அதிகாரத்துக்கு எதிரான தீ!

 

[இரண்டாவது பதிவேற்றம் : 11:00 pm – பெப்ரவரி 6, 2013]

paandi_navinநண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி. கொஞ்சமாவது நம்மிடையே கருத்துச் சுதந்திரம் உள்ளதை எண்ணி மகிழ்கிறேன். எனது தரப்பு கருத்துகளை கொஞ்சம் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

நான் யாரும் பட்டம் பதவி பெறுவதை இழிவு படுத்தவில்லை என்பதை முதலில் உறுதி படுத்துகிறேன். என் விவாதம் அதை நோக்கியதும் அல்ல. முதலில் இந்நாட்டில் ஓர் இந்தியக் கலைஞனின் நிலை என்ன? அதிலும் மொழி மூலமாக இயங்கும் எழுத்தாளனின் நிலை என்ன என்பதே என் தலையாய கேள்வி .

இங்கு மலேசியத் தமிழ் இலக்கியம் தேசிய இலக்கியத்தில் இணையவில்லை அல்லது இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மலாய் மொழியில் எழுதப்படும் இலக்கியமே தேசிய இலக்கியமாக உள்ளது. நமது பக்கத்து நாடான சிங்கையில் கூட தமிழ் இலக்கியம் தேசிய இலக்கியமாக இயங்கும் ஒரு காலச் சூழலில் நமக்கு இந்த நிலை.

நமது அரசியல் தலைவர்களும்  இது குறித்து கேட்க மாட்டார்கள். ஒரு வேளை இது நடக்குமானால், தமிழ் எழுத்தாளன் இனி அரசியல் தலைவர்களை நம்ம வேண்டியது வராது. எனவே எந்த நேரமும் நன்றி உணர்ச்சியோடு எழுத்தாளன் தன்னை நோக்கி இருக்கவாவது, அரசியல்வாதிகள் அதை பற்றி சிந்திக்கக்கூடப் போவதில்லை.

இந்நிலையில் சாமிவேலு போன்றவர்கள் என்ன செய்தார்களோ அதைதான் பாண்டிதுரை போன்றவர்களும் மீண்டும் இந்தச் சமுதாயத்திற்குச் செய்கிறார்கள். நமக்கு அடிப்படையில் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கேட்காமல், ஏதோ கிள்ளிக்கொடுப்பதை அரசிடமிருந்து நமக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு சமுதாயத்திற்கு தன்னாலானதைச் செய்துவிட்டதாகக் கூறுவார் சாமிவேலு.

பாண்டிதுரை கேட்கும் ‘டத்தோ’ பட்டம் கிடைப்பதென்ன அவ்வளவு சிரமமா? தடுக்கி விழுந்தால் ஒரு டத்தோ சிரிக்கும் சூழலில் எழுத்தாளனுக்கு அதனால் என்ன பயன்? என்பதே என் அடிப்படை விவாதம். நாளையே அரசாங்கம் எலும்பு துண்டுபோல இரண்டு டத்தோ பட்டத்தைத் தூக்கி வீசிவிட்டால் அப்புறம் தமிழ்  கலைஞர்களுக்கு கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டது என்பீர்கள் அல்லவா?

நாம் எதைக் கேட்கிறோம் என்ற தெளிவு கூட இல்லாமல் அறிவீனமாக கேட்கும் சின்ன சின்ன விடயங்களால்தான் நமக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் மறைந்தே கிடக்கின்றன. இன்னும் நாம் ஏமாற வேண்டுமா?

இந்நாட்டில் ஒரு தமிழ் படைப்பாளி தேசிய இலக்கியவாதியாக முடியுமா? கிடைத்தால்… அதல்லவா அங்கீகாரம்.

நாம் இந்த தேசத்தில் பிறந்தோம். நம் ரத்தம் இந்த தேசத்தில் சிந்தியுள்ளது. நமது இலக்கியம் இந்நாட்டில் நம் வாழ்வை பேசுகிறது. அப்படி இருக்க நாம் ஏன் தேசிய இலக்கியவாதியாகக் கூடாது. அதன் மூலம் நமது படைப்புகள் மலேசியா மட்டும் அல்லாமல் தென்கிழக்காசிய நாடு முழுவதும் பரவப்படுமே. நம் வாழ்வை அதன் சிக்கலை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல முடியுமே?

அங்கீகாரம் என்பது என்ன என்பதில்தான் நாம் மாறுபடுகிறோம். ஒரு கலைஞனுக்கு அவன் படைப்பு பரந்த அளவில் சென்று அது சக மனிதனோடு தடையில்லாமல் உரையாடும் சூழல் இந்நாட்டில் நிகழ்வதே கலைஞனுக்கான அங்கீகாரம் என்கிறேன். அதை எது செய்யுமோ அதுவே இன்று நமது தேவை. தமிழ் இலக்கியமும் இந்நாட்டின் தேசிய இலக்கியமாக்கப்பட்டால் அது சாத்தியம். வேறெந்த டத்தோ பட்டமும் அந்த சந்தர்ப்பத்தை வழங்கப்போவதில்லை.

-ம.நவீன்