முருகா… அடியோர்க்கு அடியவனே. போயும் போயும் ம.இ.கா பசங்கள இப்படிக் குழப்பலாமா? ஏற்கனவே பழனிவேலுவால ரோட்டத்தாண்ட முடியாத குறைய உங்கிட்ட சொல்லி புலம்பனுதுக்கே தீர்வு கிடைக்கல… இதுல சரவணனுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போனா தாங்குமா இந்தத் தமிழ் சமுதாயம்!
நேற்று காலையிலேயே தினசரிகள புரட்டுனேன். கொஞ்ச நேரத்துல மண்ட சுத்த ஆரம்பிச்சிடுச்சி. நம்ம சரவணனுக்கா இந்த நெலம. அதுவும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை அருகில் இருக்கிற உன்னோட சன்னிதானத்துல தன்னோட பொது வாழ்க்கையத் தொடங்குனதா போகுற இடமெல்லாம் பக்தியோட சொல்லித்திரியும் அந்தப் பச்சப்புள்ளைக்கா இந்தக் கொடும?
அப்படி என்ன சேதின்னு கேட்கறியா? கொஞ்ச காலமாகவே எல்லா பொய்யையும் போடுறதால, நீ சில தமிழ் நாளிதழ்கள படிக்கிறதில்லைன்னு தெரியும். ஞாயம்தான் எங்க நாட்டு தமிழ் ஆசிரியர்களே தங்கள் பிள்ளைங்கள தமிழ்ப் பள்ளியில சேர்க்கமா அக்குளுல ஆங்கிலப் பத்திரிகை தொங்குனா பெருமைன்னு நினைக்கும் போது நீ தமிழ்க் கடவுளா இருந்தும் ஒருசார்பா இயங்கும் சில தமிழ்ப் பத்திரிகைகளைப் படிக்காததில் தப்பில்லை.
‘எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எங்கே இலவசக் கல்வி’ன்னு கேட்டிருக்காரு உன் பக்தன் சரவணன். அதுவும் சிலாங்கூரில் உள்ள ‘யுனிசெல்’ பல்கலைக்கழகத்திலாவது அதை செய்துக்காட்டச் சொல்கிறார். முருகா… இத படிச்ச உடனே நம்ம நாட்டின் உயர்க்கல்வி அமைச்சு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதோ என உனக்கொரு பால்குடம் எடுக்க நினைத்தேன். ஆனா, ‘அதெல்லாம் ஒன்னும் மாறல சாமியோ’ என தமிழகத்திலிருந்து தைப்பூசத்திற்கு நரிக்கொம்பு விற்க வந்த தோழர் ஒருவர் சொன்ன போதுதான் சரவணனுக்குப் பக்கங்கள் சில காணாமல் போனது தெரிந்தது.
முருகா… அயலக நரிக்குறவர் நண்பருக்குத் தெரிவதுகூட நாடாளுமன்றத்துல நாக்காலிய சூடாக்குற ஒரு துணை அமைச்சருக்கு தெரியாத அளவுக்கு அவரோட பக்கத்துல கொஞ்சத்த காணாம அடிச்சிட்டியே.
இது தேர்தல் காலம்தான். சரவணனுக்கு கொஞ்சம் மண்ட சூடாகி அப்படி இப்படின்னு உளர ஆரம்பிக்கிறார்.
அவர் மேல கோபப்பட்டு ஒன்னும் இல்ல முருகா. தலைமையே தள்ளாடி போயி இருக்கு தம்பிங்க என்னப் பண்ணுவாங்க? அதனால இந்த மருத்துவம், காவல்துறை, கல்வி, போக்குவரத்து, தொடர்ப்புத் துறை போன்றவை மத்திய அரசாங்கத்தால வழிநடத்தப்படுதுன்னு சொல்லிடு முருகா. அப்புறம் நாளைக்கு வேறொரு அறிக்கையில, சிலாங்கூர் மாநில அரசாங்கம் டெலிக்கோம் கட்டணத்தில் கழிவு தர வேண்டும், சிலாங்கூரில் இருக்குற பொது மருத்துவமனைகள் எல்லாம் குறைந்த பட்ச கட்டணத்தைக் கூட வாங்க கூடாது என உண்ணாவிரத்தில் இறங்கிவிடப்போகிறார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்ற படத்தில் இப்படி உளறிக்கிட்டிருந்தவர் ஒருநாள் தூங்கி எழுந்ததும் எல்லாம் சரியாகிடும். சரவணனையும் கொஞ்சம் தூங்கவிடு முருகா… தேர்தல் முடிஞ்சி முழுசா விழிக்கட்டும்.
ஒருவேளை இவ்வளவு தெளிவான தலைவர் ஜெயிச்சி வந்தா அப்புறம் தொகுதி மக்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போக வாய்ப்புண்டு.
–முருக பக்தன்