PBS : மாணவர்களை கொல்ல முஹிடினின் திட்டமா முருகா?

muhyiddinமுருகா… நீ அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன். சிவனே உங்கிட்ட கைக்கட்டி பவ்வியமா பாடம் கேட்டதா கதையெல்லாம் உண்டு. அப்படி இருக்கும் போது எங்க நாட்டுல மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக்கிட்டு இருக்கும் இந்த முஹிடினின் அட்டகாசத்தை நீ கொஞ்சம் அடக்க மாட்டியா?

சும்மா வயலு வரப்பு … தோட்டம் தொரவுன்னு ஒரு விவசாயத்துறை அமைச்சராக ஜாலியா சுத்திக்கொண்டிருந்தவர் எங்கத் துணைப்பிரதமர் முஹிடின் யாசின். 2009ல் ஏப்ரல் மாதம் அவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பெடுத்ததிலிருந்து நாட்டுல கல்விச்சூழலுல நடந்த அமளிதுமளிக்கு அளவே இல்லாம போச்சி.

அதுல உச்சமா இப்ப வந்து நிக்கிறது  PBS (PENTAKSIRAN BERASASKAN SEKOLAH). அதாவது பள்ளி அளவிலான தர மதிப்பீட்டுச் சோதனை. எங்கக் கல்வி அமைச்சர் வெளிநாடெல்லாம் சுற்றி கண்டுப்பிடிச்ச அறிய திட்டமாம். இந்த திட்டத்தின் வழி ஒவ்வொரு மாணவனும் திறனை அடைந்துள்ளானா என அப்பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரால் வகுப்பறையிலேயே  சோதிக்கப்படுவான். ஒருவேளை ஒருசில மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு திறனை அடையவில்லை என்றால் அம்மாணவன் திறனை அடையும்படி கேள்விகளை எளிது படுத்தி அவனைத் தேர்ச்சி அடைந்தவனாக மாற்றுவது ஆசிரியரின் கடமை. என்ன முருகா உனக்குப் புரியலயா?

அதாவது, ஒரு சந்துக்குள் நுழைவதுதான் திறன் என்றால் அந்த சந்துக்குள் நுழைய முடியாத மாணவனுக்கு ஏற்றதுபோல சந்தைப் பெரிதாக்கி உள்ளே நுழைக்க வேண்டும். அவன் திறனை அடைந்துவிட்டதாக பதிவு செய்ய வேண்டும்.

tamil_school_studentsயூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர் மற்றும் எஸ்.பி.எம் போன்ற சோதனைகளின் அடிப்படையில் புள்ளிகள் தருவதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான் முருகா. அந்த வகையில் அவற்றை நீக்குவதில் எனக்கு தடையே இல்லை. ஆனால், அதற்கு பதிலாக எவ்விதத்திலும் நியாயம் இல்லாத இந்த PBS முறையால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழம்பி போய் நிர்க்கிறார்களே அதற்கு என்ன செய்யலாம்?

இந்தப் பள்ளி அளவிலான தர மதிப்பீட்டால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முதன்மையாக ஒன்றை மட்டும் சொல்கிறேன் முருகா. இந்தச் சோதனை முறையால் ஆசிரியர்களுக்கு அதிகாரம் கூடிவிட்டது முருகா.

ஒருவேளை ஓர் ஆசிரியருக்குத் தனிப்பட்ட முறையில் சில மாணவர்கள் மேல் கோபம் என வைத்துக்கொள்வோம்… அல்லது ஆசிரியருக்கு மாணவர்களின் நடத்தையில் திருப்தி இல்லாவிட்டால், அம்மாணவனின் புள்ளிகளைக் குறைக்க அவருக்கு சகல வாய்ப்புகளும் உண்டு. அதே போல ஒரு ஆசிரியரைக் கவர்ந்த மாணவனை அவரால் கூடுதல் புள்ளிகள் எடுக்கும் படி செய்யவும் முடியும். சுருக்கமா சொன்னா… தப்பு பண்ணினா சாமி கண்ணக் குத்துமுன்னு பயங்காட்டுன சூழல் போயி தப்பு பண்ணுனா வாத்தியார் PBS ல தர அளவ குறைச்சி போட்டுடுவார்ன்னு புலம்ப ஆரம்பிசிருக்காங்க.

Tamil school forum 2012இந்த நிலைய கொஞ்சம் இடைநிலைப்பள்ளியில வச்சி யோசிச்சிப்பாரு முருகா. ஓர் இடைநிலைப்பள்ளியில மூவினமும் இருக்கு. பாடங்களை அதிகம் சொல்லிக் கொடுப்பது தமிழ் ஆசிரியர்களாக இல்லாத சூழலில் ஒரு தமிழ் மாணவனுக்கு எல்லா பாடங்களிலும் ஏற்ற புள்ளிகள் கொடுக்கும் சூழல் இன்னிக்கு இருக்கா? அதில் நியாயம் இருக்குமா? ஆசிரியரின் கையில் எல்லா அதிகாரமும் இருக்கும் சூழலில், அவரின் முடிவே இறுதியாக இருக்கும் போது ஒரு மாணவனின் எதிர்க்காலத்தைக் கொஞ்சம் யோசிச்சி பாரேன்.

ஆனா நம்ம கல்வி அமைச்சரோ நிதர்சனத்துக்கு பதில் சொல்லாம ‘Trust the teacher’ என்ற சுலோகத்தைப் பரப்ப முனைந்துள்ளார். ஆசிரியர்கள் மனிதர்கள்தானே முருகா… குறையை மறைக்க சுலோகங்களைப் பரப்பும் இவரெல்லாம் கல்வி அமைச்சராக இருக்கும் வரை மலேசிய  நாட்டின் கல்வி சூழல் உருப்படுமா?

ஆனா முருகா… எல்லா தீமையிலும் ஒரு நன்மை இருப்பது போல இதிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்யுது முருகா…

மலாய் மற்றும் சீனப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துள்ள தமிழ்ப்பெற்றோர்களுக்கு ரொம்பப் பெருசா காத்திருக்கு முருகா… ஆப்பு !

(வாசகர்களே… PBS  குறித்து இன்னும் சில கட்டுரைகளைத் தொடர வேண்டியுள்ளது. உங்களின் ஆக்ககரமான கருத்துகளை இங்கே பகிர்வதன் வழி அதை இன்னும் விரிவாக யோசிக்கலாம்.  )

– முருக பக்தன்