இலங்கை இனப்படுகொலை : உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆயுதம்

Prabhakaran_son_killingகா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர்.

ஆயுதமற்ற நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்கள் உட்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வழக்கம் போலவே,  இந்த மிகக் கொடூரமான குற்றத்தையும் இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

1980-ஆம் ஆண்டு முதல் ஆயுத போராட்டங்கள் வழி சுயநிர்ணய கோரிக்கையை முன் வைத்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற விடுதலைப் புலிகளின் போராட்டம் 2009-ஆம் ஆண்டு மே மாதம் ஆயுத ரீதியில் மௌனிக்கப்பட்டது.

aru_suaram_rally_2013தமிழர்களின்  சுயநிர்ணய கோரிக்கையை இலங்கையின் இன முரண்பாட்டு பிரச்னை என்றும் அதற்கு தீர்வாக ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு இராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டு   தனது இறுதி தாக்குதலில்  சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களைக்  கொன்று குவித்தது.

சாட்சிகளற்ற போர் என்றும் தமிழர்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சூழலில் கொல்லப்பட்டனர் என்றும் வர்ணிக்கப்படும் இதை ஒரு குறுகிய வட்டத்தில் அடக்கி அதற்கு நீதி கேட்கும் சில தரப்புகள் அதை போர் குற்றம் என்றனர். உலக நாடுகளும்  அவ்வகையில் பேசப்பட்டால்தான் தாங்கள் செவிமடுப்போம் என்றனர். அதே வேளையில் இந்த இனப்படுகொலையை முறையான வகையில் கையாள  உலக நாடுகள் தவறி விட்டன. ஐக்கிய நாட்டுச்சபையோ இன்னும் ஒரு படி மேலே போய் தான் இறுதிக்கட்ட போரின் போது இலங்கை அரசுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்குப்  பாதகமாகவும் நடந்து கொண்டதைத்  தனது சுய ஆய்வு அறிக்கை காட்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளதைக்  கடந்த நவம்பர் மாதம் வெளியான சார்ல்ஸ் பெற்றே அறிக்கை கூறுகிறது.

vanni_tamilsசுமார் எட்டு கோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாடோ, எட்டிப்பார்க்கும் தூரத்தில் இருந்து கொண்டு பொங்கிய தமிழர்களை அடக்கியது. போரின் போது இலங்கைக்குத்  துணை புரிந்த இந்தியா, தனது இறையாண்மைக்கு அப்பாட்பட்டது என்றும் உள்நாட்டு விவகாரம் என்றும் வேடிக்கை காட்டியது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களும் மலேசியத் தமிழர்களும் ஒன்றிணைய தரணியற்ற நிலையிலே தங்களது தனித்தன்மையில் இந்த இனப்படுகொலையைக்  கையாள்கின்றனர்.

உலக வரைபடத்தில் தமிழர்களும், தமிழ்ப் பண்பாடும், மொழியும் தரமாக வாழவும் நிலைக்கவும் வேண்டுமானால் அதற்கு மாற்று வகை அரசியல் தீர்வுகள் அவசியமாகின்றன. தமிழ் என்பது ஓர் அரசியல் அடையாள ஆயுதமாக உருவாக்கப்பட வேண்டும். ஆயுதமேந்திய போராட்டத்தின் எல்லையில் எஞ்சியுள்ள தீர்வுகள் அமைதியான வழிமுறையில் தேசியமயமாக்கப்பட வேண்டும். அதற்கு முதல் படி இலங்கை மீதான கண்டனத்தை ஆழப்படுத்துவதாகும்.

rally_in_klang_03மலேசிய தமிழர்கள் மாறுபட்ட கட்சி அரசியலில் இருப்பினும் அவர்களிடையே தமிழ் உணர்வு என்பது தேசியமயமாக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் இருக்கின்ற சுமார் 20 லட்சம் தமிழர்கள் பிரபாகரனின் கனவுக்கு மறுவடிவம் கொடுக்கும் நிலையில் உள்ளதை அண்மைய காலங்களில் நடந்த நிகழ்வுகளும் தமிழ் ஊடகங்களின் பங்கும் காட்டுகின்றன.

தமிழர் சார்ந்த நிகழ்வுகள் அனைத்திலும் இது சார்பான கருத்து விவாதங்களை முன்னெடுத்து இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத்தை நமது அரசாங்கம் கையாள கோர வேண்டும். நமது ஒற்றுமை என்பது ஓர்  அரசியல் ஆயுதம். சிறுபான்மை இனமாக வாழும் நமது அரசியல் பலம் என்பது சர்வதேச ஆற்றலாக உருவாகும் போதுதான் உலக மேடையில் தமிழரால் தலை நிமிர முடியும்.

TAGS: