அரைநூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர் இனப்படுகொலையில் பதிவுகள் தொடர்ந்து நம்மை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த முறை சனல் 4 வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற தலைப்பிலான காணொளியின் அதிர்வுகள் இன்றுவரை நம்மை விட்டு அகலாத நிலையில் புதிய காணொளிகளுடன் மீண்டும் சனல் 4 தனது ஆதாரங்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது. (காணொளி)
கடந்த 22-2-2013 – புதுடெல்லியில், Amnesty International உதவியுடன், சனல் 4, இந்தியாவின் தலைநகரில் வெளியிட்ட NO FIRE ZONE – பாதுகாப்பு வலயம் ஆவணப்படத்தின் உள்ளடக்கம் குறித்த பதிவாக இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
போரின் இறுதிக் கட்டங்களாக கருதப்படும் அன்றைய துயரம் தோய்ந்த நாட்களில் ஈழத் தமிழர் மனதில் துள்ளிக் குதிக்கும் மகிழ்ச்சியில்லை; பயம், பீதி, உயிர் பிழைக்கும் அச்சம் மட்டுமே எல்லா உயிர்களிடத்தும் எஞ்சியிருந்தது. எங்கே, எந்த விதத்தில், எப்படித் தாக்குதல் நடக்குமென யாருக்குமே தெரியாது. எப்படியாவது தப்பிப் பிழைக்க மாட்டோமா, யாராவது காப்பாற்ற வர மாட்டார்களா என்ற உயிராசை மட்டுமே தமிழர்களைத் தொடர்ந்து ஓட ஓட விரட்டியபடியே இருந்திருக்கிறது.
இரத்தம் ஒழுக, உயிர் ஒழுக இவர்கள் ஓடிக் களைத்த இடம் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதுதான் வேதனையின் உச்சகட்டம். 2009-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் பாதுகாப்பு வலயப் பகுதியை அறிவித்தது இலங்கை அரசு. உயிர் பிழைக்க வேண்டும் என்றால் பாதுகாப்பு வலயத்திற்கு வாருங்கள் என கபட நாடகம் ஆடிய சிங்கள பேரினவாத அரசை நம்பித்தான் அதுவும் இறுதி முயற்சியாகத்தான் தமிழர்கள் பாதுகாப்பு வலயத்திற்குப் போனார்கள். குறுகிய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு அடைக்கலமாகியிருந்தனர்.
அங்கு ஐநாவின் குழு ஒன்றும் முகாமிட்டு மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தனர். அந்த குறுகிய நிலப்பரப்பில்தான் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அரசுக்கும் அவர்களுக்குமான தகவல் தொடர்புகளுக்காக ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை அரசப் படைகளின் பயன்பாட்டுக்காக ஐநா கொடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த காணொளியின் மிக முக்கிய சாட்சிகளில் ஒன்றாக, இப்படியான துயர் மிகு தருணங்களில் பாதுகாப்பு வலயப்பகுதியில் மனிதநேயப் பணிகளின் ஈடுபட்டிருந்த ஐநாவின் முன்னாள் ஊழியர் பீட்டர் மேக்கேவின் நேரடி சாட்சியம் அமைகின்றது. பீட்டர் மேக்கே தனது அதிபயங்கர அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்.
அன்றைய நாளின் மாலையில் 4 மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் கடுமையான வெடிகுண்டு தாக்குதலிருந்து உயிர் தப்பியிருந்தோம். நாங்கள் இருந்த இடத்திற்குத் தெற்குப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டன. மணல் மூட்டைகள், தடுப்புகள் மத்தியில் ஒழிந்திருந்த எங்கள் மீது எல்லா திசைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. கண்விழித்துப் பார்த்தபோது தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண்ணில் உடல் என் மீது கிடந்தது. அது தாக்குதலைவிட என்னை அதிகம் அதிர வைப்பதாக இருந்தது.
வெடிகுண்டின் கூர்மையான துகள்கள் அந்தப் பெண்ணில் உடலைத் துளைத்திருந்தன. அந்தப் பெண் இறக்கும் தருவாயில் இருந்தார். எனது அதிர்ஷ்டமும் மெல்ல மெல்ல கரைந்து வருவதை நான் உணர்ந்தேன். அடுத்த நாள் காலை அந்த இடம் பேரழிவு மிக்கக் களமாக காட்சியளித்தது. என் அறிவுக்கெட்டிய வகையில் நான் கண்ட காட்சிகள் அத்தனையும் மிக மிக மோசமானதாகவும் திட்டமிட்ட போர்க்குற்றத்தின் சாட்சிகளாகவும் இருந்தன.
நம் ஒவ்வொருவரின் மனதையும் அரித்துக் கொண்டிருக்கும் அதே கேள்வியைத்தான் உலக சமூகத்தை நோக்கி பீட்டர் மேக்கே கேட்கிறார்.
எல்லாவித நவீன ஆயுதங்களும் அருகிலேயே வைக்கப்பட்டிருந்த இடத்தை ஏன் இலங்கை பாதுகாப்பு வலயம் என அறிவிக்க வேண்டும்? பாதுகாக்கப்பட்ட பகுதியில் தனது இராணுவத்தைக் கொண்டு இவ்வளவு குண்டுகளையும் ஆயுதங்களையும் எல்லா திசைகளிலிருந்து ஏன் இலங்கை அரசு பயன்படுத்தியது?
அதற்கான சாத்தியப்பாடுகளை பீட்டர் மேக்கே இவ்வாறு பட்டியலிடுகிறார்:-
1. பொதுமக்களின் இறப்பைப் பொருட்படுத்தவில்லை
2. திட்டமிட்டே அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்.
இராணுவத்தின் இந்தச் செயல் நிச்சயமாக இத்தனைப் பேரைக் கொல்லும் என்று தெரிந்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பீட்டர் மேக்கே அறுதியிட்டுக் கூறுகிறார். அங்கு என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைத் தன்னால் கூற முடியும் என்பதோடு பரவலாக கொத்துகுண்டு பயன்படுத்தப்பட்ட கொடூரத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இன்றைய நிலையில் திட்டமிட்ட இனப் படுகொலையில் மிக முக்கிய சாட்சியாக பீட்டர் மேக்கே வெளிப்பட்டிருக்கிறார். குண்டு வீச்சிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களில் சிக்கியிருந்த பீட்டர் மேக்கே முதன் முறையாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். போர்க்காலத்தில் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த ஐநா முகாமிலிருந்த அவர், அந்த நேரத்தில் அவர் பார்த்த காட்சிகளைப் புகைப்படமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். தாயும் பிள்ளையுமாக பலியாகியிருக்கும் கொடூரமான காட்சிகள், இராணுவத் தாக்குதலின் இடிபாடுகளில் சிதைந்திருக்கும் மனிதர்களின் புகைப்படங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இக்காணொளியில் ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவு காட்டப்படுகிறது. ஆனால், அதற்கான வசதிகள் எதுவுமே அங்கு இல்லை. ஆய்வகம், முறையான மருத்துவ கருவிகள், இரத்தப்பரிசோதனைக் கூடம் என எதுவுமே அங்கு இல்லை. அவசர சிகிச்சைப் பிரிவுக்கே இந்நிலை என்றால் மற்ற பிரிவுகள் குறித்து சொல்லத் தேவையில்லை. பிழைப்பதற்கு வாய்ப்பிருந்தும் மருத்துவ உதவியும் மருந்தும் இல்லாததால் எண்ணற்ற உயிர்கள் வலியால் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஜனவரி 20 முதல் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இருந்த 78 விழுக்காட்டு அப்பாவி மக்கள் இறந்துவிட்டனர் என ஐநா ஆய்வின் ழூலம் தெரிய வந்துள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை மறுப்பதென்பது ஒரு குற்றமாகும். ஆனால், யாருக்குமே முறையாக சிகிச்சை அளிக்க முடியாத ஒரு நிலைதான் அந்த பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்தது.
இந்த இறுதி நாட்களின் மற்றொரு முக்கிய சாட்சி ஓர் ஈழத்தமிழரான வாணி விஜி ஆவார். அவர் தனது நெஞ்சைக் கிழிக்கும் அனுபவத்தை, கலங்கும் கண்ணீருக்கிடையே பதிவு செய்கிறார்.
இதைச் சொல்வதற்கே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எங்குப் பார்த்தாலும் இரத்தம் வழிந்தோடியது. ஆனால், காயமடைந்தவர்களுக்கு இரத்தம் இல்லை. கைவிடப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றில் தன்னார்வ தொண்டர்கள் பாதிக்ப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உதவியபடி இருந்தார்கள். அங்கு ஒலித்தெல்லாம் உயிர் அச்சத்தால் காயங்களின் வேதனையில் துடித்தவர்களின் குரல்கள்தான் என்கிறார் வாணி.
மேலும், அந்த நேரத்தில் மருத்துவமனையின் மேலாளராக இருந்தவர் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். அப்பாவி மக்கள் தஞ்சமடைந்திருந்த இந்த மருத்துவமனையும் இலங்கை இராணுவத்தின் நேரடித் தாக்குதலுக்கு இலக்கானது. இறந்தவர்களுக்கு மத்தியில் மருத்துவமனையின் மேலாளரும் உயிரற்றுக் கிடந்தார்.
பதறவைக்கும் இந்தக் காட்சியைத் தொடர்ந்து மற்றொரு காட்சி நமது உயிரையே உலுக்கி உலக மனிதநேயத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது.
புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் இரமேஸ் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் விசாரிக்கப்படும் காட்சிகள் தெளிவாக எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விசாரணைகளை இராணுவ வீரர்கள் கைப்பேசியில் மட்டும் படம் எடுக்கவில்லை. நல்ல தரமான கேமராவினால் கூட பதிவு செய்து வைத்துள்ளனர். கேணல் இரமேஸ் இராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்பட்டு மிக அருகில் வைத்து சுடப்பட்ட காட்சி பதிவுகள் தற்போது கிடைத்துள்ளன. சனல் 4-வின் புதிய காணொளியில் அவை இடம்பெற்றுள்ளன.
இந்த காணொளியில் இடம்பெற்றுள்ள படங்களில் கேணல் இரமேஸின் இடது நெற்றிப் பொட்டில் குண்டுப் பாய்ந்திருப்பது தெரிகிறது. அடுத்த புகைப்படத்தில் அவரது வலது பக்க நெற்றியில் குண்டு வெளியேறியிருப்பது மிகப் பெரிய காயமாகத் தெரிகிறது. வேறொரு புகைப்படத்தில் அவரை இழுத்துச் சென்றிருப்பது தெரிகிறது. அடுத்த படத்தில் அவரை எரியூட்டும் ஏற்பாடுகள் தெரிகின்றன. அடுத்து அவரது உடல் எரியூட்டப்பட்டு விட்டது. இதை படம் பிடித்தவர்கள் எவ்வளவு கழிவிரக்கம் அற்றவர்களாக இருந்திருப்பார்கள்? ஒரு சாட்சியும் அதற்கான தடயமும் எரியூட்டப்பட்டு விட்டது. இப்படித்தான் எண்ணற்ற தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
அடுத்ததாக மனிதகுல மாண்பையே உலுக்கிப் போடும் ஒரு காட்டுமிராண்டித்தனம் காணொளியாக காண்பிக்கப்படுகிறது. எந்தவொரு உதவியுமற்ற போர்க்களத்தில் வெறும் உடல்களாக மட்டும் பார்க்கப்பட்ட தமிழ்ப்பெண்கள் கிஞ்சிற்றும் மனிதத்தன்மையற்று நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகப்பட்ட கொடுமைகளுக்கான சாட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. நமது உறவுகளை நாமே அரைநிர்வாண நிலையில் திரையில் காண்கின்ற நிலை நமக்கு ஏற்படுத்தப்பட்டது எப்படியான அவலம்.
இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் மிகவும் வருந்தத்தக்க காட்சிகள் பெண்போராளிகளின் நிலைதான். ஒவ்வொருவரையும் கொல்வதற்கு முன்னால் பாலியல் ரீதியாக கொடூரமாக துன்புறுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. அப்போது எடுத்தப் புகைப்படங்களை இராணுவ வீரர்கள் வெற்றிச் சின்னமாக வைத்திருக்கின்றனர். பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு போர்க்குற்றமாகும். சர்வதேச போர்ச்சட்டங்களின் படி போர்க்குற்றங்களைச் செய்தவர் மட்டுமல்லாமல் அதனை மன்னித்தவரும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இறந்துகிடந்தாக காட்டப்படும் உடல்களில் ஒன்று இசைப்பிரியாவினுடையது. இசைப்பிரியா ஒரு செய்தி வாசிப்பாளர் ஆவார். அனைத்துக் காட்சிகளையும் பார்க்கும்போது இராணுவத்தின் உச்சகட்ட அட்டூழியம் தெரிகிறது. இதனை அனுமதித்த அனைத்து உயரதிகாரிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
போர் உச்சகட்டத்தை அடைந்தபோது வன்னிப் பகுதியில் இருந்து ஆயிரமாயிரம் தமிழர்கள் வெளியேறிய போது அவர்களில் ஒருவராக அங்கிருந்து தப்பி வந்த சாட்சிகள் ஒருவரான வாணி விஜி மீண்டும் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்கிறார். மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பாலத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மூதாட்டி அங்கிருந்த இலங்கை இராணுவ அதிகாரியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அந்த மூதாட்டியைப் பார்த்து சிரித்த அந்த அதிகாரி பாலத்தின் அடியில் ஓடிக் கொண்டிருந்த அசுத்தமான தண்ணீரைக் காட்டி அதைப் போய்க் குடி என்றார். அங்கு நான் பார்த்தெல்லாம் உயிரற்ற சடலங்களைத் தான். தண்ணீருக்கு மேலே உடல்கள் மிதந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு நாங்கள் அந்த தண்ணீரை அள்ளிக் குடித்தோம்.
மேலும் இந்த காணொளியில், விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பட்ட இளம் பெண்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 20 விநாடிக்கு மட்டுமே இந்த காட்சிகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அவர்கள் கண்களில் தெரியும் அந்த பதற்றம், உயிர் வழியும் கதறல் நம்மை பற்றிக் கொள்கின்றது.
மிகவும் அழகான, தலை தலைமுறையாக தமிழர் வாழ்ந்த மண் இன்று போரின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்து அவலத்தோடு இந்த காணொளி முற்றுப் பெறுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22-வது கூட்டத் தொடர் நாளை சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் தொடங்கி மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20-ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21-ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
சனல் 4 வெளியிடவுள்ள இவ்வினப்படுகொலைக்கான காணொளி தெளிவான ஆதாரங்களோடும் காட்சிப்படுத்துதல்களோடும் உலக நாடுகள் அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஒரு உந்துசக்தியாக விளங்க வேண்டும் என்பது உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாகும்.
தொகுப்பு : தமிழினி
(புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழாக்கம் செய்து வெளியிட்ட இக்காணொளியின் உரை வடிவம் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது: நன்றி புதிய தலைமுறை)