இந்த நஜீப்போட தொல்லை தாங்க முடியல முருகா!

najib19அண்மையில ‘நம்நாடு’ தினசரியில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி முருகா. ‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், கச்சாங் பூத்தே லைசென்ஸ் கூட கிடைக்காது’. இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. நம்ம ஹிண்ட்ராப் உதயகுமார். அவர் சமீப காலமா இப்படிப் பல அறிக்கைகள் விட்டாலும் அது பாரிசான் அரசாங்கத்தையும் சாடியே வருகிறது.

அதேபோலத்தான் இந்த அறிக்கையிலும் பாரிசான் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அலுவலகப் பணியாளர் வேலைக்கூடக் கிடைக்காது என்றிருக்கிறார்.

உதயகுமார் நிலையைப் பொறுத்தவரை எப்போதும் ஒன்றுதான்… ‘பாரிசானுக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். பக்காத்தானுக்கு ஓட்டு போடுங்கள் என நாங்கள் சொல்ல மாட்டோம்.’

சரி…  அது அவர் கருத்து முருகா. உதயகுமார் சொல்லி ஓட்டுப் போடும் அளவுக்கு நம்ம மக்கள் மழுங்கி போய்விடவில்லை என்பதை முதலில் நம்புவோம். ஹிண்ட்ராப் என்பது மக்கள் புரட்சி. மக்கள் தயாராகாமல் எந்தப் புரட்சியும் சாத்தியம் இல்லை.

மாற்றத்தை விரும்பும் மக்கள் மத்தியில் இந்த அறிக்கைகளெல்லாம் எடுப்படாதுதான். ஆனா  இங்கு விஷயம் அதுவல்ல. ஒரு செய்தியை எப்படி எதிர்க்கட்சிக்கு எதிராக ஊடகவியளாலர் மாற்றியமைக்கும் அரசியல் செயல்படுகிறது என்பது பற்றிதான் யோசிக்க வேண்டியுள்ளது. உண்மையில் இவர்களுக்கு ‘அது’ இருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது முருகா.

tamil-newspapersஇதைச் சொல்லப்போனால், ‘நம்நாடு’ பத்திரிகை ஆசிரியர் தனது வழக்கமான பாணியில் ஹி…ஹி…ஹி என இளித்துக்கொண்டு எதையாவது புலம்ப ஆரம்பிப்பாரோ என்ற பயம் வருகிறது. “எங்கள் பத்திரிகை நடுநிலையானது… அரசு சார்பற்றது… சிலர் அவ்வாறு வதந்தியைப் பரப்புகிறார்கள்” என அடுத்த நாளே தலையங்கம் எழுதுவார்.

கூடவே… இதையெல்லாம் தான் தமாஷாக எடுத்துக்கொண்டதாகவும்… எல்லாம் தனக்கு ஜாலி என்றும்… நடமாடும் சித்தர் போல சொற்களை உதறுவார். கூலிக்கு மாரடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது.

சரி… நாளிதழ்களில் இவர்கள் ஒரு தினுசு என்றால்… வானொலி மற்றும் தமிழ்ச் செய்திகளின் நிலை இன்னும் கொடுமை. அவர்களுக்கும் சுத்தமாக ‘அது’ இல்லை முருகா. அரசுக்கு நேர்மையாக இருக்கிறேன் என்ற போக்கில் முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் பிரசார பீரங்கிகளாக மாறிவிட்டனர்.

பாரிசான் அரசாங்கம் என்னென்ன செய்கிறது எனச்சொல்லும் இவர்கள் மருந்துக்கும் பக்காத்தான் அரசின் செயல்பாடுகளை விவரிப்பதில்லை. தொலைக்காட்சி செய்திகளும் பக்காத்தான் ஆட்சியில் மாபெரும் தவறுகள் நிகழ்வது போன்ற செய்திகளைத் தொடர்ந்தார் போல ஒளிபரப்புகிறது. இந்த அக்கறை ஆளுங்கட்சியை நோக்கி திரும்பியிருந்தால் நாடு எப்போதோ உருப்பட்டிருக்கும்.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் காலையிலிருந்து இரவு வரை இந்த நஜீப்போட தொல்லை தாங்க முடியவில்லை முருகா. இப்படி பயந்து சாகிறாரே… அவருக்காவது ‘அது’ இருக்கா இல்லையா? மக்கள் கொஞ்சம் யோசிச்சா  ஊடகங்கள் எல்லாமே பாரிசானுக்கு ஆதரவான பிரசாரங்களைத் தொடங்கிவிட்டன என அறிந்திருப்பார்களே.

இது முழுக்க முழுக்க மொள்ளமாறித்தனம் என அறிந்த ஒருத்தர் இன்னமும் பாரிசானுக்கு ஓட்டுப்போடுவார்களா முருகா? அப்படிப் போட்டால் அவர்களுக்கும் ‘அது’ இருக்குமா? என்ற சந்தேகம் வரத்தானே செய்யும் முருகா.

மொத்தத்தில் இந்த நாடே தேர்தலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகி வருகிறது முருகா. எல்லா ஊடகங்களையும் கொடுக்க வேண்டியதை கொடுத்து கைக்குள் போட்டுக்கொண்ட நஜீப் ஒரு தற்காலிக கடவுள் போல பார்க்கும் இடமெல்லாம் தோன்றுகிறார். அதனால் என்ன முருகா… ஓட்டுப் போடும் போது மட்டும் நாங்கலெல்லாம் நாத்திகர்கள் ஆயிட்டா நீ கோவப்பட மாட்டாயே முருகா…

குறிப்பு : கட்டுரை முழுக்க ‘அது’ என்றது முதுகெலும்பைக் குறிக்கும்.

-முருக பக்தன்