எது கம்யூனிசம்: கைமுட்டியா? கைகுலுக்கலா?

-ஜீவி காத்தையா, பெப்ரவரி 26, 2013.

Pakatan-PSMஇன்று இந்நாட்டில் ஏழை மக்களுக்காக, ஏழை தொழிலாளர்களுக்காக தெருத்தெருவாக அலைந்து, நாடு முழுவதும் சைக்கள்களில் சென்று தங்களால் இயன்ற அளவுக்கு சேவை செய்து வரும் ஓர் அமைப்பு உண்டு என்றால், அது நிச்சயமாக தொழிற்சங்கங்கள் அல்ல; ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் அல்ல; ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருக்கும் பெரும் எதிர்க்கட்சிகள் அல்ல. சாதாரண மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட, எளிமையான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும், ஆண்டுதோறும் வாக்களித்தவாறு தங்களுடைய சொத்துடமைகளை சத்தியப் பிரமாணத்துடன் பகிரங்கமாக மக்கள்முன் வைக்கும் தலைவர்களைக் கொண்ட மலேசிய சோசலிசக் கட்சிதான் (பிஎஸ்எம்) அந்த அமைப்பு.

கைமுட்டி சின்னம்

பல்லாண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் மக்கள் சொத்தை கொள்ளையடித்து விழுங்கும்psm symbol மலைப் பாம்பான அம்னோ அரசாங்கம் பிஎஸ்எம் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்தது. மக்களுக்குப் பணி ஆற்றுவதில் அக்கட்சி கொண்டிருந்த திண்மையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் கைமுட்டி கட்சியின் சின்னமாக, அதுவும் பல தொந்தரவுகளுக்கிடையில், பதிவு செய்யப்பட்டது. கைமுட்டி மக்களை அச்சுறுத்துவதாகக் கருதப்படும் என்றும் கருணையின் மறுவடிவமான அம்னோ அரசாங்கம் கூறியதுண்டு!

தற்போது, பிஎஸ்எம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையும், ஒரு சட்டமன்ற உறுப்பினரையும், இரு நகராட்சிமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சி மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு மனு செய்திருந்தது. அம்மனு இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏன்?

பிஎஸ்எம் கட்சியின் கைமுட்டி சின்னம் குறித்து மக்களிடையே குழப்பம் நிலவுவதைக் கண்டதாக மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

Anwar-Tamil Dailies213.2.2013 இல் மிட்லேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடந்த ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பிஎஸ்எம் ஏன் இன்னும் மக்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று மலேசிய நண்பன் துணையாசிரியர் கேசவன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், பிஎஸ்எம் கம்யூனிஸ்ட்டுகளுடனும், சே குவாராவுடனும், மாவ் சே டோங்குடனும் தொடர்புடையது என்று மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று குழப்பவாதிகளில் எல்லாம் பெரிய குழப்பவாதி என்று அவரது அம்னோ எதிரிகளால் குற்றம் சாட்டப்பட்டு வரும் அன்வார் கூறினார்.

ஆனால், இப்பிரச்னை குறித்து பிஎஸ்எம்முடன் விவாதித்து ஒரு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அன்வார் யூதர்களின் கையாள் என்று அம்னோக்காரர்கள் கூறுகிறார்கள். அக்குற்றச்சாட்டை மறுக்கும் அன்வார் மக்கள் அதனை நம்பக்கூடாது; குழப்பமடையக்கூடாது என்றுதானே மக்களிடம் கூறுகிறார்.

எதிரிகள் குழப்புகிறார்கள் என்பதற்காக பிஎஸ்எம் குறித்து அன்வார் குழப்பம் அடைய வேண்டியதில்லையே! ஏனென்றால், பிஎஸ்எம் தலைவர்கள் அம்னோவின் தலைவர்களைப்போல் கம்யூனிச கட்சி தலைவர்களின் ஆதரவை நாடியதில்லை.

இந்த கம்யூனிஸ்ட்டுகள் யார்? மக்கள் உழைப்பையும், நாட்டின் வளத்தையும் கொள்ளையிட்ட, கொள்ளையிட்டு வரும் முதலாளித்துவ முதலைகள் போன்றவர்களா இந்த கம்யூனிஸ்ட்டுகள்? அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு முகவர்களாகச் செயல்பட்ட, செயல்பட்டு வரும் அம்னோவாதிகள் போன்றவர்களா இந்த கம்யூனிஸ்ட்டுகள்?

பிரிட்டீஷ் அரசாங்கம் இந்நாட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்காக பெரும் போராட்டங்கள் நடத்திய எஸ்.எ.கணபதி போன்ற தொழிற்சங்க தலைவர்களை சுட்டுக் கொல்வதற்கு, தூக்கிலிடுவதற்கு காரணமாக இருந்த பிரிட்டீஷ், பிரன்ச் மற்றும் அமெரிக்க தோட்டத் தொழில் முதலாளிகளைப் போன்றவர்களா இந்த கம்யூனிஸ்ட்டுகள்?

Ganapathy-saஎஸ்.எ.கணபதியின் தலைமையில் இயங்கிய அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தை ஒழித்துக்கட்டி விட்டு மாற்று தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க பிரிட்டீஷாரால் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஜோன் பிரேசியர் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் பி.பி.நாராயணன் தலைமையில் ஒரு மாற்று தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டார். ஆனால், அவர் உருவாக்கிய தொழிற்சங்க தலைவர்களைப் பற்றி அவர் லண்டன் பேபியன் மன்றத்திற்கு (Fabian Society) அனுப்பிய அறிக்கையில் தாம் உருவாக்கிய தொழிற்சங்க தலைவர்களுக்கு தொழிலாளர்களின் ஆதரவு இல்லை. அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவை நம்பி இருக்கிறார்கள். இந்நாட்டில் உண்மையாக தொழிலாளர்களுக்காகப் போராடுகிறவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். கொள்ளைக்காரர்களிலும் உண்மையைக் கூறுபவர்கள் இருக்கிறார்கள்!

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிறவர்கள் யார்?

கம்யூனிஸ்ட்டுகள் கூடாது. அவர்களது சித்தாந்தம் கூடாது. தொழிலாளர்களுக்காக, ஏழைகளுக்காகப் போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்றால், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் யார்? அவர்களுக்குத் துணைபோகும் அம்னோக்காரர்களை போன்றவர்கள் யார்?

நெற்றி வியர்வை காய்வதற்கு முன்பு தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்றாரொருவர். ஏசுநாதர் உலகின் முதல் சோசலிஸ்ட் என்றார் மகா கர்ணன் என்ற பொருள்படும் பெயரைக் கொண்ட இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகர்னோ. இவர்களுக்கெல்லாம் முன்பாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, மார்க்ஸ்சின் “From each according to his ability, to each according to his need” என்ற கோட்பாட்டை அமல்படுத்தினார் கண்ணபிரான். ஏழை குலேசர் கொடுத்த ஒரு சிறு பொட்டல அவலைப் பெற்றுக்கொண்டு குசேலரின் இருபத்தேழு குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்தார் ஆட்சியாளர் கிருஷ்ண பரமாத்மா! இதுதான், இந்த கிருஷ்ண தத்துவத்துவம்தான், சோசலிசம் என்று கூறுகிறார் இந்தியாவின் மூதறிஞர் இராஜாஜி. முதலாளிகளுக்கும், அம்னோ தலைவர்களுக்கும் இவை எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. எது அவர்களின் சுயநலத்திற்கு, பேராசைக்கு, சுரண்டலுக்கு எதிராக இருக்கிறதோ அது கம்யூனிசம்! அது பயங்கரவாதம்! அவர்களுக்கு பிரிட்டீஷ் பேரரசை வீழ்த்த தெருவில் தண்டி யாத்திரை மேற்கொண்ட அந்த காந்தியும் ஒரு “பயங்கரவாதி”!

மகாத்மா காந்தி ஒரு பயங்கரவாதி என்றால், அருட்செல்வன் பயங்கரவாதிகளுக்கெல்லாம் பயங்கரவாதி. இருக்கட்டும். ஆனால், அன்வாருக்கு இது குறித்து குழப்பம் இருக்கக்கூடாது. ஏனென்றால் அம்னோகாரர்களுக்கு தற்போது அன்வார்தான் மிகப் பெரிய பயங்கரவாதி!

தொலாளர்களுக்காக அருட்செல்வன் காட்டும் கைமுட்டி கம்யூனிசம். அது கூடாது என்றால், இந்த அம்னோக்காரர்களின் அரசாங்கம் ஏன் தொழிலாளர்களுக்கு பிச்சைக்கார குறைந்தபட்ச சம்பளம் (Minimum wage) கொடுக்க முன்வருதில் தடுமாறுகிறது?

mtucதொழிலாளர்களுக்கு தேவைப்படுவது குறைந்தபட்ச சம்பளம் அல்ல. வாழ்வதற்கான சம்பளம் (Living wage)வேண்டும். அக்கோரிக்கை 1950 ஆம் ஆண்டில் விடுக்கப்பட்டது. ஜோன் பிரேசியர் மற்றும் சர் டத்தோ ஓன் பின் ஜாபார் ஆகியோரின் ஆதரவுடன் பிரிட்டீஷ் பேரரசு உருவாக்கிய மலாயா தொழிற்சங்க மன்றம் (Malayan Trades Union Council) இத்தீர்மானத்தை நிறைவேற்றியது. என்ன ஆயிற்று? மலேசிய தொழிலாளர்களின் ஊதியத்தை குறைப்பதற்காக மில்லியன்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்டு வந்து குவித்து அவர்களுக்கு முறையான ஊதியமும், ஓய்வுகால நிதியும், இதர உரிமைகளும் இல்லாமல் குத்தகைக்காரர்கள் மூலம் வேலை வாங்குவதற்கு வகை செய்யும் சட்டத்தை கடந்த ஆண்டு இந்த அம்னோ அரசாங்கம் இயற்றியுள்ளது. இவ்வாறு நடந்து கொள்ளும் அம்னோ அரசாங்கம் மற்றும் அதன் தத்துவங்கள் குறித்து மக்களிடையே குழப்பம் இல்லையா?

che Guevaraசே குவாரா யாருடைய சொத்தைக் கொள்ளையடித்தார்? எந்த நாட்டின் வளத்தை கொள்ளையடித்தார்? எந்த வங்கியின் சொத்துக்களை அபகரித்தார்? மருத்துவரான சே அனைத்தையும் துறந்து போராட்டவாதியானார். கியுபா மத்திய வங்கியின் இயக்குனர் பதிவியில் அமர்த்தப்பட சே, ஏன் அதனை உதரித்தள்ளி விட்டு தென் அமெரிக்க காட்டை நாடினார்? நமது மத்திய வங்கில் நடந்தவை போன்ற எதனையும் சே செய்தாரா? நல்லவரை பின்பற்றக் கூடாதா? தமிழக முன்னாள் முதலைமைச்சர் கே. காமராஜர் இந்த உலகை விட்டுச் சென்ற போது அவரின் மொத்த சொத்து 63 ரூபாய்! நமது மலாக்கா முதலமைச்சர் வீட்டு கல்யாணச் செலவு எத்தனை மில்லியன்? யாரை பின்பற்ற வேண்டும்? இதில் குழப்பம் என்ன இருக்கிறது?

மாவ் சே டோங்! இவரது காலடியில்தானே அம்னோ தலைவர் அப்துல் ரசாக் சரணடைந்தார். அப்போது குழப்பம் எங்கே போயிற்று?

பொதுச்சொத்தை கொள்ளயடிக்கும் அம்னோக்காரர்களை போல மாவ் சீன மக்களின் சொத்தைக் கொள்ளையடிக்கவில்லை. சீனாவின் கோடீஸ்வரர்கள், நிலச்சுவான்தார்கள், ஜெனரலிசிம்மோ சியாங்கைசேக் ஆட்சியாளர்களைப் போல் மாவ் சீன மக்களை சுரண்டவில்லை; சீனாவை எவருக்கும் அடகு வைக்கவில்லை. அவரது தலைமைத்துவம் பிச்சைக்கார நாடாக இருந்த சீனாவை உலகின் முன்னணி நாடாக உயர்வதற்கு வழிகாட்டியது.

அமெரிக்காவின் உதவி அதிபராக இருந்த காலத்தில் ஆணவமிக்க ரிச்சர்ட் நிக்சன் இந்தியாவின் வி.கே.கே கிருஷ்ண மேனனிடம் உலக வரைப்படத்தைக் காட்டி சீனா என்ற நாடு எங்கே இருக்கிறது என்று காட்டுமாறு கேட்டுக் கொண்டாராம். அவரைப் பொறுத்தவரையில் சீனா என்றால் தைவான்தான்.

இறுதியில், காவடி எடுத்தது யார்? சீனா எங்கே என்று கேட்ட அதே ரிச்சர்ட் நிக்சன், பெய்ஜிங்கில் மாவ்வை தரிசிக்க காவடி எடுத்தார்.

மே தினம் சீனாவில் கொண்டாடப்படுகிறது

மாவ்வின் சீனாவை ஐக்கிய நாட்டு மன்றத்தின் உறுப்பினராக்கக் கோரும் இந்தியாவின் தீர்மானத்தைIsmail abdul rahman எதிர்த்த அம்னோ அரசின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் இஸ்மாயில், தமது நாட்டு அரசாங்கம் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப் போர் புரிந்துள்ளது. ஆகவே, சீனாவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றார். இந்தக் காரணம் எவ்வளவு மடத்தனமானது என்பதைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ண மேனன், மலாயாவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகப் போர் நடத்தியது பிரிட்டீஷ் அரசாங்கம். அந்த பிரிட்டீஷ் அரசாங்கம்தான் மாவ்வின் கம்யூனிஸ்ட் சீனாவை அங்கீகரித்த முதல் நாடு என்று பதிலடி கொடுத்தார்.

David3 கோலாலம்பூரில், மே மாதம் 1 ஆம் தேதியை மே தினமாக அங்கீகரித்து பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தொழிற்சங்கவாதி வி.டேவிட் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அத்தீர்மானத்திற்கு டி.ஆர். சீனிவாசகம், டாக்டர் தான் சீ கூன், சி.வி தேவன் நாயர் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது துணைப் பிரதமராகவும் தற்காப்பு அமைச்சராகவும் இருந்த அப்துல் ரசாக் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தார். ஏன்?

சீனாவில் மே தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாட்டிலும் மே தினம் என்ற பெயரில் கம்யூனிச சித்தாங்கள் பரப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 1956 ஆம் ஆண்டில் வி. டேவிட் விடுத்த மே தின செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாசித்தார் அப்துல் ரசாக்: “On this May Day Branch Officers should expose the true colours of the present big business administration and point out to the rank and file members that through militant” – I repeat, militant – “trade unions only the emancipation of the working class could take place. Tell the workers to be prepared for working class revolution could only bring a change in the political, economical and social life of the working masses.” வி.டேவிட்டின் இச்செய்தி மே தினம் வழியாக கம்யூனிச சித்தாந்தம் பரப்பப்படுவதைக் காட்டுகிறது என்று அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

மேலும், அவசர காலத்தின் 11 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளைப் பட்டியலிட்டார். கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினர் 1,856; கொல்லப்பட்ட பொதுமக்கள் 2,468; அவசரகால நடவடிக்கைகளுக்காக 1957 ஆம் ஆண்டு வரையில் அரசாங்கம் $1,300 மில்லியனை செலவிட்டுள்ளதாக கூறினார்.

ஆனால், பாதுகாப்பு படையினரால், பத்தாங்காலி போன்ற சம்பவங்களில், கொல்லப்பட்ட பொதுமக்கள், நாடுகடத்தப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கணபதியைப்போல் தூக்கிலிடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.

நாடும் நாட்டு மக்களும் அனுபவித்தத் துன்பங்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள்தான் காரணம். ஆகவே, கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாடும் மே தினத்திற்கு இந்நாட்டில் அனுமதி இல்லை. இதுதான் அப்துல் ரசாக்கின் நிலைப்பாடு.

கம்யூனிஸ்ட்டுகளையும் அவர்களின் சித்தாங்களையும் வெறுத்த, சாடிய, பல்லாயிரக்கணக்கானவர்கள் கம்யூனிஸ்ட்டுகளால் கொடுமைப்படுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டிய அப்துல் ரசாக் என்ன செய்தார்?

அம்னோக்காரர்களின் நண்பர்களான பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்க தலைவர்கள் செய்ததைத்தான் அப்துல் ரசாக்கும் செய்தார். அவர்களைவிட ஒரு படி மேலே சென்று காவடியும் எடுத்தார்.

மலாயாவில் ஜப்பானியர்களை தோற்கடிக்க மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சின் பெங்குடன் பிரிட்டீசார் உறவாடினர். அவருக்கு பதக்கமும் பட்டமும் கொடுத்து கௌரவித்தனர். காரியம் முடிந்தவுடன் சின் பெங்கின் தலைக்கு $25,000 விலை வைத்தனர்.

yalta threeஅவ்வாறே, “கொலைகாரன்”, “கொடுமைக்காரன்”, “சர்வதிகாரி” என்றெல்லாம் வசைபாடப்பட்ட ரஷ்யாவின் ஸ்டாலினுடன் யால்டாவில் அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியங்களின் தலைவர்களான ரூஸ்வெல்ட்டும் சர்ச்சிலும் கூடிக்குலாவினர். பின்னர், ஸ்டாலுனுக்கும் அதே கதிதான்!

மாவ்வுடன் உறவு

சீனா என்றால் தைவான்தான் என்ற அமெரிக்கர்கள் மாவ்வின் கம்யூனிஸ்ட்டு சீனாவுடன் “பிங்-போங்” ஆடத் தொடங்கினர். சீனாவுக்கு ஐநாவில் இடம் இல்லை என்ற கூட்டத்தை ஆதரித்த அப்துல் ரசாக்கும் ஆடத் தொடங்கினார். 1971 ஆம் ஆண்டில், மாவ்வின் Peoples’ Republic of China மட்டுமே ஐநாவில் இருக்கையைப் பெறும் தகுதியுடையது என்று கூறி அதற்கு ஆதரவாக வாக்கும் அளித்தார் பல்லாயிரக்கணக்கான இந்நாட்டு பாதுகாப்பு படையினரும் மக்களும் கொல்லப்பட்டதின் பின்னணியில் இருந்தது சீனாதான் என்று குற்றம் சாட்டிய அதே அப்துல் ரசாக். தைவானில் இயங்கிய மலேசிய பிரதிநிதித்துவ அலுவலகத்தை (Consulate) மூடினார் .இது எவ்வளவு பெரிய குழப்பம்!

இறுதியில், கம்யூனிஸ்ட்டு சீனாவை விட்டால் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கு வேறு வழி இல்லை என்ற நிலைக்கு வந்து விட்ட அப்துல் ரசாக் காவடி எடுக்கவும் தயாராகி விட்டார்.

PSM-MAO-Razak1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றி பெற சீனர்களின் வாக்குகளைப் பெற வேண்டும். சீனர்களிடம் அவர் எவ்வளவு பற்றும் பாசமும் வைத்திருக்கிறார் என்பதை நிரூபிக்க பெய்ஜிங்கிற்கு 1974 மே மாதம் காவடி எடுத்தார்.

இரத்தக்கரை படிந்த “கொலைகார”, “படுபயங்கர”, உலகின் மூத்த கம்யூனிசவாதியான மாவ் சே டோங்கின் கையைப்பற்றி மற்றற்ற மகிழ்ச்சியுடன் குலுக்கினார் அம்னோவின் தலைவர் அப்துல் ரசாக். அக்கைகுலுக்களின் முக்கிய அம்சம் படம் எடுத்துகொள்வதாகும். எவ்வித குழப்பமும் இன்றி படங்கள் பல எடுத்துக் கொண்டார்.

மாவ்வுடன் எடுத்துக்கொண்ட படத்துடன் நாடு திரும்பிய அப்துல் ரசாக், அப்படத்தை இலட்சக்கணக்கில் சுவரொட்டியாக அடித்து நாடு முழுவதும் ஒட்டித் தள்ளினார்.

s-arul-selvamஅச்சுவரொட்டிகளை உற்றுப்பார்க்காத மக்களே இந்நாட்டில் இல்லை என்று கூறலாம். பார்த்தார்கள். வாக்களித்தார்கள். அப்துல் ரசாக் வெற்றி பெற்றார்.

ஓர் இஸ்லாமியரான மலேசிய பிரதமர் அப்துல் ரசாக் இறைநம்பிக்கையற்ற, கம்யூனிச சித்தாந்ததில் எல்லையற்ற நம்பிக்கை கொண்ட, துப்பாக்கி குழலில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய முதல்தர கம்யூனிசவாதியான மாவ் சே டோங்குடன் கைகுலுக்கிய படத்தை மலேசிய மக்களிடம் காட்டிய போது அம்னோக்காரர்கள் குழப்பம் அடையவில்லையே. அப்துல் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றவில்லையே. மக்களிடையே பதற்றம் எதுவும் ஏற்படவில்லையே!

அப்துல் ரசாக்கிற்கு பிறகும் சீனாவுடனான அம்னோக்காரர்களின் உறவு மிக நெருக்கமானதாகவே இருந்து வருகிறது. அல்தான்துயாவை தெரியுமா என்ற கேள்விக்குகூட இன்றைய அம்னோ தலைவர் நஜிப் ரசாக் சீனாவிலிருந்துதானே பதில் அளித்தார்!

உலகப் பொதுச் சொத்து

சீனாவின் அதிபர், உலகின் முதல்தர கம்யூனிச தலைவர் மாவ்வை கண்டு பதற்றமடையாத, குழப்பமடையாத மலேசிய மக்கள், பிஎஸ்எம்மின் பொதுச் செயலாளர் அருட்செல்வனின் கைமுட்டியைக் கண்டு குழப்பத்தில் இருக்கின்றனர் என்றால், அப்படி கூறுகிறவர்கள் ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கின்றனர் என்பது நிச்சயம். தங்களிடம் இருக்கும் குழப்பத்திற்கு அருட்செல்வனின் கைமுட்டியை, கம்யூனிசத்தை, சேயை, மாவ்வை காரணமாக முன்வைக்கக்கூடாது.

தனிப்பட்ட ஒருவருக்கு அல்லது ஒரு கூட்டத்தினருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, கிருஷ்ண பரமாத்மா, புத்தபிரான், ஏசுநாதர், திருவள்ளுவர், ஆடம் ஸ்மித், மார்க்ஸ், லெனின், காந்தி, மாவ், நெல்சன் மண்டேலா போன்ற பல பெருமான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் உலக மக்களின் பொதுச் சொத்து. அப்பெருமான்கள் வழி செல்வதில் குழப்பம் இருக்கிறது என்றால், குழப்பத்தில் குழப்பம் இருக்கிறது.

அன்வார் இப்ராகிம் குறிப்பிடும் “குழப்பம்” அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. அதனைத் தரைமட்டமாக்கி அருட்செல்வனின் கைமுட்டியை அணைத்துக் கொண்டால் ஏழை சமுதாயம் மறுவாழ்வு காண வழிபிறக்கும்.

TAGS: