தமிழர் தாகமும் தமிழீழத் தாயகமும்

(ஒரு பார்வையாளரான தமிழினியின் பதிவுகள்:- மார்ச் 3, 2013 – கண்டனப் பேரணி,  பிரிக்பீல்ட்ஸ்,  கோலாலம்பூர்.)

உன்னைச் சுட்டு
எலும்பை எடுத்துப்
பாதையில் வீசினர்
பாதைகள் மூடப்படுமென…
சாம்பலை எடுத்து காற்றில் எறிந்தனர்
காற்றும் மெளனமாய் இருக்கட்டுமென.

மெளனத்துக்கு அப்பாலும் வாழ்வுண்டு
மரணத்தை மீறியும் போராட்டம் உண்டு…

புரிந்து கொள்வார்களா? (ஈழத்து முன்னோடி கவிஞர் ஒளவையின் வரிகள் அவை.)

protest against sri Lanka06மழை வந்துவிடக்கூடாதென்கிற வேண்டுதலோடுதான் இன்றைய காலை பொழுது விடிந்திருந்தது. தமிழர்களை இயற்கை கூட எப்போதும் எதிரியாகத்தான் பார்க்கிறது என்று நினைக்கிறபோது மனம் கனக்கத்தான் செய்தது. இதே பிரிக்பீல்ட்ஸில் தமிழீழத்தைச் சுனாமி தாக்கியபோது இரவு பகல் என மக்களுக்கான உதவி பொருட்களை ஒழுங்குசெய்தது நினைவிற்கு வந்தது. அதே கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் “விழ விழ எழுவோம் வீழ்ந்து விட மாட்டோம்” என்ற தளராத உறுதியோடு ஒன்றுகூட ஒரு களம் கிடைத்ததை எண்ணி மனம் சோகத்திலும் கொஞ்சமாய் துளிர்திருந்தது. Video | 6:12min

காலை மணி 10.20

நான்  பிரிக்பீல்ட்ஸை வந்தடைந்திருந்தேன். கடும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. புது வண்ணம் பூசப்பட்டிருந்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா தாமரைத் தடாக வளாகத்தில் மக்கள் குழுமத் தொடங்கியிருந்தனர். அருகிலிருந்த ஓர் உணவகத்தில் இன்றைய பேரணி குறித்த ஒழுங்கமைவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேரணியில் நிகழ்வு நிரல் வழங்கப்பட்டது. அவரவர் செய்ய வேண்டி பணிகள் குறித்து திரு. கா. ஆறுமுகம் விளக்கமளித்தார்.

காலை மணி 10.40

தாமரைத் தடாக வளாகத்தினுள் நான் இருந்தேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் செயற்பாட்டாளர்கள் பலரும் அங்கிருந்தனர். சிலர் குறித்து இங்கு பதிவிட வேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன். ஜொகூரைச் சேர்ந்த திரு. மோகன்,  கேமரன் மலையைச் சேர்ந்த திரு. அமைச்சியப்பன்,  பூச்சோங்கை சேர்ந்த திரு. கந்தசாமி, டெங்கிலைச் சேர்ந்த திரு. ரமேஸ், பத்தாங் பெர்சுந்தையைச் சேர்ந்த திரு. ஜெகன், பத்துமலையைச் சேர்ந்த திரு. சுகுமாறன்,  தமிழ் நெறிக் கழகத்தை சேர்ந்த திரு. திருமாவளவன்,  உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் வழி எனக்கு அறிமுகமான பசுபதி ஐயா,  திரு. ஆறுமுகம்,  திரு. அக்கினி சுகுமார்,  மருத்துவர் சண்முகசிவா என 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழத்திற்கான போராட்டத்திற்குத் தங்களது தார்மீக ஆதரவை வழங்கி வரும் பலரும் அங்கிருந்தனர். பல புதிய முகங்களும் தங்களது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அங்கு குழுமியிருந்தனர். சிலரது பெயர் விடுபட்டிருக்கலாம். ஆனால்,  அவர்கள் ஒவ்வொருவரின் பணியும் மிக முக்கியமானது என்பதை நானறிவேன்.

காலை மணி 11.00

நாட்டின் அனைத்து தமிழ் நாளிதழ்களின் முதன்மை ஆசிரியர்களும் நிருபர்களும் அங்கிருந்தனர். இதை இப்பேரணியின் முதல் வெற்றியென நான் கருதுகிறேன். நிகழ்வு சரியாக 11.00 மணிக்குத் தொடங்கப்பட்டது. மிக நேர்த்தியாக கவனம் எடுத்து தயாரிக்கப்பட்ட பதாகைகளும் படங்களும் தகவல் அட்டைகளும் இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சவின் உருவ பொம்மையும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. கா. ஆறுமுகம் மற்றும் அவர்தம் பணிப்படையில் முயற்சியால் அமைந்தது என்பதைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். அகவணக்கத்துடன் நிகழ்வு முறையாகத் தொடங்கியது. ஊர்வலம் செல்ல வேண்டிய வழி குறித்தும்,  விதிமுறைகள் குறித்தும் முழங்க வேண்டிய முழக்கங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

protest against sri Lanka07காலை மணி 11.20

கண்டன ஊர்வலம் தொடங்கியது. தாமரைத் தடாக வளாகத்திலிருந்துப் புறப்பட்ட பேரணி லோட்டஸ் விடுதி வழியாக அங்கிருக்கும் உணவகங்களைக் கடந்து பின் மீண்டும் தாமரைத் தடாக வளாகத்திற்கு வந்து பிரிக்பீல்ட்ஸ் கந்தசுவாமி கோவில் நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தது. பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா நாடு இன மத சார்பின்றி அனைவருக்கும் பொதுவாக ஒரு வணிக தளமாகும். பேரணிக்கான இந்த இட தேர்வே இன்றைய பேரணி பொருள்பொதிந்த ஒன்றான ஆவதற்கு முக்கியமான ஒன்றாகிறது. இன்றைய பேரணி ஒரு பரப்புரை நிகழ்வாகவும் பங்காற்றியிருக்கிறது.

பிரிக்பீல்ட்ஸ் வணிக வளாகத்திற்கு வந்திருந்த மக்கள்,  உணவங்களில் உணவருந்த வந்திருந்த மக்கள்,  அந்த இடத்தைக் கடந்து போகும் பேருந்துகளில் நிரம்பியிருந்த மக்கள்,  குறிப்பாக வெளிநாட்டு சுற்றுப்பயணிகள்,  தமிழரல்லாத பிற இன மக்கள் என அனைவரையும் இன்றைய பேரணி தன்வசம் இழுத்திருந்தது. எண்ணற்ற பேர் இன்றைய பேரணியைத் தங்கள் கைப்பேசியிலோ அல்லது புகைப்படக்கருவியிலோ பதிவு செய்துள்ளனர். இலங்கையில் நடப்பவை குறித்த ஒரு தெளிவு இன்று பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

எனக்குள் ஒரு சந்தேகம் மனதை அரித்தபடியே இப்போதும் இருக்கிறது. இலங்கையில் நடந்தது என்ன என்பது குறித்து தேவைக்கும் மேலான சாட்சியங்களும் சான்றுகளும் இருக்கின்றன. ஆனால்,  மன்னிக்க முடியாத தவறிழைத்திருக்கும் மகிந்த இராஜபக்ச எப்படி மமதையோடு நடமாடி திரிகிறான்? யார் விட்ட பிழையால் அவனது உயிர் இன்னும் எஞ்சியிருக்கிறது?

கண்டன ஊர்வலம் பல முழங்கங்களோடு தொடர்ந்தது. போர்க்குற்றவாளி இராஜபக்ச ஒழிக! தமிழர் இனப்படுகொலையைக் கண்டனம் செய்வோம்! நீதி வேண்டும் நீதி வேண்டும் தமிழர்களுக்கு நீதி வேண்டும்! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கங்கள் அதிர்ந்தன.

பிற்பகல் மணி 12.00

protest against sri Lankaஊர்வலம் மலேசியாவில் இலங்கைத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் கந்தசுவாமி திருக்கோவிலுக்கு முன்னால் குழுமியிருந்தது.  யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவிலை ஒத்திருக்கும் இத்திருத்தளம் மணியோசையோடு வீற்றிருந்தது. வெயிலின் உக்கிரமும் அதிகரித்திருந்தது. நிகழ்வைக் கலாமண்டபத்தில் நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லோரி ஒன்றை மேடையாக்கி இறுதி கட்ட நிகழ்வு தொடங்கப்பட்டது. மாண்புமிகு மனோகரன், திரு. சி.பசுபதி, திரு.பால் சின்னப்பன், திரு.இளந்தமிழ், டாக்டர் ஐயங்கரன், திரு.இராமகிருஷ்ணன், திரு. திருமாவளவன்,  திரு.பொன்ரங்கன்,  திருமதி காமட்சி ஆகியோர் சுருக்கமாக தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்தும் இன்றைய எதிர்பார்ப்பு குறித்தும் உரையாற்றினர்.

பிற்பகல் மணி 12.30

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு கா. ஆறுமுகம், மலேசியத் தமிழர்களின் சார்பில் கலந்து கொண்ட  அனைவரும் மலேசிய அரசைக் கேட்டுக் கொள்வதற்கான தீர்மானங்களை விளக்கினார். அவர் முன்வைத்த இரண்டு தீர்மானங்களும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முதலாவது  தீர்மானம்,  தற்பொழுது ஜெனிவாவில் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும். அதில் சுயேட்சையான அனைத்துலக விசாரணைக் குழுவொன்றை அமைத்து அதன் வழி இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றம், மனிதநேயத்திற்கு எதிராக நடத்தப்பெற்ற குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது தீர்மானம்,  இவ்வாண்டு இறுதியின் கொழும்பில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த்) மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும். ஓரினத்தை அழிப்பதன் வழி இறையாண்மை பெற்றுவிட்டதாக கூறும் இலங்கை அரசை பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானத்தை பொதுநலவாய செயலகத்திடம் மலேசியா முன்மொழிய வேண்டும் என்பதாகும்.

hanging rajapaksaதொடர்ந்து, நிகழ்வின் புதுமையான அணுகுமுறையாக போர்க்குற்ற நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. குற்றவாளி தரப்பில் யாரும் வாதாடவராத நிலையில் சந்தேகத்திற்கிடமின்றி மகிந்த ராஜபக்ச குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு சாகும் வரையிலான தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் செருப்படிகளுக்குப் பின் மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட்டார். பின் அவரது உடலுக்கு தீ மூட்டினர். வெயிலின் உக்கிரமும் தணிந்து ஒரு பெருமழைக்குத் தயாராவதற்காக சூழ்நிலை நிலவத் தொடங்கியிருந்தது.

கூட்டம் குறைவுதான் என சிலர் குறைப்பட்டுக் கொண்டது என் காதில் விழத்தான் செய்தது. அதிகாலை மூன்று மணிக்கோ அல்லது அதற்கும் முன்பாக எழுந்து அனைவரையும் ஒன்று திரட்டி பேருந்தில் கோலாலம்பூருக்கு வந்த ஒவ்வொரு முகங்களையும் மீட்டுப் பார்க்கிறேன். இந்த கூட்டம் போதும் எங்களுக்கு என்ற பெரும் நம்பிக்கை மனமெங்கும் நிறைந்திருக்கிறது. அதே நிறைவோடு வாய்ப்பும் தேவையும் இருப்பின் மற்றுமொரு பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் மீண்டும் சந்திப்போம்.

மெளனத்துக்கு அப்பாலும் வாழ்வுண்டு மரணத்தை மீறியும் போராட்டம் உண்டு…

“உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்…”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழினி.
03.03.2013

TAGS: