கருத்துக்கட்டுரை: TOMMY THOMAS
நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் ஐந்தாண்டுகள். அரசமைப்பின் சட்டவிதி 55(3) கூறுகிறது: ‘நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படலாம் இல்லையேல் அதன் முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தொடரும். அதன்பின் கலைக்கப்படும்.’
நடப்பு நாடாளுமன்றம் 2008, ஏப்ரல் 28-இல் முதல் கூட்டத்தை நடத்தியது என்பதால் 2013, ஏப்ரல் 28வரை செயல்படலாம். அதன்பின் தானாகவே ‘செயலிழந்துவிடும்’ என்பதால் யாரும் அதைக் கலைக்க வேண்டியதில்லை.
அரசமைப்புச் சட்டப்படி 13வது பொதுத் தேர்தலை ‘நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் நடத்தியாக வேண்டும்’. அந்த வகையில் 13வது பொதுத் தேர்தலை, நாடாளுமன்றத் தேர்தல்களையாவது, 2013, ஜூன் 28-இலாவது நடத்தியே ஆக வேண்டும்.
தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டையுமே ஒரே நாளில் நடத்தும் முடிவில் உள்ளது. அதை அறிவித்தும் உள்ளது. நெகிரி செம்பிலான்தான் முதல்முதலாக சட்டமன்றக் கூட்டத்தை நடத்தியது. 2013, மே 26-இல். எனவே, மே 26-க்குள் நெகிரி செம்பிலானில் தேர்தல் நடத்தவில்லை என்றால் அதன் சட்டமன்றம் சட்டவிரோதமானது ஆகிவிடும்.
பொதுத் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பதை முடிவு செய்வது மலேசிய பிரதமருக்குள்ள சலுகைகளில் ஒன்றாகும்.
முந்திய ஐந்து பிரதமர்களும் வாக்காளர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ள காலம் பார்த்து வாக்களிப்பு நாளை நிர்ணயித்திருக்கிறார்கள். உசேன் ஒன், மகாதிர் முகம்மட், அப்துல்லா அஹமட் படாவி ஆகியோர் நான்காண்டுகளுக்குளேயே-3 ஆண்டுகள் 10 மாதங்களில், 3 ஆண்டுகள் 9 மாதங்களில், 3 ஆண்டுகள் 11மாதங்களில் தேர்தலை நடத்தியது உண்டு.
மெர்டேகாவுக்குப் பின்னர் நீண்ட காலம் அமர்வில் இருந்தது 1969 மே மாதம் ஆட்சியேற்ற கூட்டணி/பிஎன் அரசுதான். 1974, ஆகஸ்ட் மாதம்- 5 ஆண்டுகள் 3 மாதம் கழித்துத்தான் அது பொதுத் தேர்தலை நடத்தியது. ஆனால், அப்போதிருந்த நிலவரம் வேறு. மே 13 கலகத்துக்குப்பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேசிய நடவடிக்கை மன்றம் (என்ஓசி) பொறுப்பேற்றிருந்தது.
1971 ஆகஸ்டில்தான் வழக்க நிலை திரும்பியது. (அதுவரை என்ஓசி இயக்குனராக இருந்த) அப்துல் ரசாக் உசேன் பிரதமராக பதவியேற்றார். நாடாளுமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கிற்று. ஆக, அதை ஒரு முன்மாதிரியாகக் கொள்வதற்கில்லை.
அப்படியானால், நஜிப் அப்துல் ரசாக், தம் பதவிக்காலம் முடிவதற்குமுன்பே நாடாளுமன்றத்தைக் கலைக்க பேரரசருக்கு ஆலோசனை கூறாதது ஏன்? இதற்கு ஒரு காரணத்தைத்தான் ஊகிக்க முடிகிறது: பிஎன்னுக்குப் பயம்.
பிஎன்னுக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இருந்தால், நஜிப் முன்கூட்டியே தேர்தலை நடத்தி இருப்பார். யாரும் சாதாரணமாக அப்படித்தானே நினைப்பார்கள். அதுதானே அறிவுபூர்வமான முடிவாகவும் இருக்கும். ஆனால், உள்விவகாரம் அறிந்தவர்களும் அரசியல்வாதிகளுக்கும் பெருந் தொழில்களுக்கும் நெருக்கமாக இருப்பவர்களும் கூறும் காரணம் வேறு. தேர்தலைத் தள்ளிப்போடுவது ஒப்பந்தங்கள் செய்வதற்குக் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறதாம்.
அரசாங்கத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவோர், அரசு குத்தகைகள் வழங்கப்படுவது பற்றி ஒவ்வொரு நாளும் அறிவிப்புகள் வந்து கொண்டிருப்பதைச் சுட்டுகிறார்கள். இது தவிர, கமுக்கமாக செய்துகொள்ளப்படும் பரிவர்த்தனைகள் வேறு. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, பதவிக்காலத்தை நீட்டிக்கொண்டு போவதற்கு அரசியல் மட்டுமல்ல, வணிகக் காரணமும் உண்டு என்ற அனுமானத்துக்கு வர வேண்டியவர்களாகிறோம்.
பராமரிப்பு அரசின் வரம்புகள்
இவ்வார இறுதியில் தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் ஆகி இருக்கும். ஆனால், நாடாளுமன்றக் கலைப்புப் பற்றியோ 13வது பொதுத் தேர்தல் பற்றியோ இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை. அதன்பின், பிஎன் அரசாங்கம் பற்றிக் கேள்வி எழும்பும்.
மார்ச் 9-க்குப் பின்னர், ஜூன் 28வரை பிஎன் ஆட்சியில் இருப்பது சட்டப்படி சரியே. ஆனால், அரசியல் ரீதியில், நடைமுறை ரீதியில் அது சரியா என்ற கேள்வி எழும்.
வாக்காளர்கள், 2008, மார்ச் 8-இல் தாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதற்காகத்தான் பிஎன் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தோம், அது, அதன்பின்னரும் ஆட்சியில் இருக்க வேண்டுமானால் மறுபடியும் அதற்கான அதிகாரத்தைப் பெற வேண்டும் இல்லையேல் அது ஒரு பராமரிப்பு அரசாங்கம் ஆகிவிடும் என்று சட்டப்படி வாதாடலாம்.
‘பராமரிப்பு அரசு’ என்பது அரமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்று. ஆனால், நடைமுறை அரசியலில் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இடைக்கால அரசு என்பதுதான் அதற்கான பொருளாகும்.
அது தற்காலிகமாக ஆட்சியில் இருக்கலாமே தவிர நிரந்தரமாக இருக்க முடியாது.
முந்தைய பிஎன் அரசுகள் எல்லாம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் ஆட்சியில் இருப்பது பராமரிப்பு அரசுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றன.
எனவே, நஜிப்பும் கெளரவமாக, மார்ச் 9-இல், அந்த நாள் தொடங்கி தேர்தல் நடத்தப்படும்வரை தாம் ஒரு பராமரிப்பு அரசின் தலைவர்தான் என்பதை அறிவிக்க வேண்டும். இந்த விசயத்தில் ஒரு ராஜதந்திரியாக அவர் நடந்துகொள்ள வேண்டும்.
பிஎன் பராமரிப்பு அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?
1.நாட்டின் நிர்வாகம் பிரதமர், அமைச்சர்களின் கைகளில்தான் இருக்கும்.
2.அன்றாடம் செய்ய வேண்டியதை முடிவு செய்வது அமல்படுத்துவது அரசு ஊழியர்களின் பொறுப்பாக இருக்கும். அரசு ஊழியர்கள் எக்கட்சியையும் சாராது சுயேச்சையாகவும் நடுநிலையுடனும் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும்.
3. வெளியுறவு, தற்காப்பு விவகாரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
ஒரு பராமரிப்பு அரசு செய்யக்கூடாதது என்னவென்றால், நீண்டகால விளைவுகளைக் கொண்ட கொள்கைகளையோ அடுத்துவரும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளையோ எடுக்கக்கூடாது.
மக்களின் வரிப்பணத்துக்குச் செலவு வைக்கும் ஒப்பந்தங்களையும் செய்தல் கூடாது. அப்படிச் செய்யப்படும் ஒப்பந்தங்கள் மக்கள் நலனுக்கு உகந்தவை அல்ல என்று நினைத்தால் புதிய அரசாங்கம் அவற்றை முடிவுக்குக் கொண்டுவரலாம். அதற்கு அந்த உரிமை உண்டு.
இறுதியாக, பராமரிப்பு அரசாங்கம் வரிப்பணத்தை மக்கள் உதவித்தொகை என்ற பெயரில் வாரிக் கொடுக்கவும் முடியாது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாடாளுமன்ற முன் அனுமதியின்றி அரசாங்கம் பணத்தைச் செலவிட முடியாது. அரசாங்கம் எந்த அனுமதியுடன் பிரிம் உதவித் தொகையையும் மற்ற அன்பளிப்புகளையும் செய்தது? அது தேர்தல் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பது தெளிவு. இதனால், நமது தேசிய கடன்சுமைதான் மேலும் மோசமடையும்.
13வது பொதுத் தேர்தலைத் தாமதப்படுத்தும் நஜிப்பை வாக்காளர்கள் தண்டிப்பார்களா? இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பிரிட்டனில் 1979-இல், பிரதமர் ஜேம்ஸ் கெல்லாகனும் 2010-இல் கோர்டன் புரவுனும் இப்படித்தான் தாமதப்படுத்தினார்கள். முடிவு அவர்களுக்குச் சாதகமாக இல்லாமல் போனது. இச்செய்தி நிச்சயம் நஜிப்புக்கு மகிழ்ச்சியைத் தராது.
=====================================================================================================
TOMMY THOMAS அரசமைப்புச் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற வழக்குரைஞர்