“எதிர்க்கட்சி ஆட்சியில் வளர்ச்சி ஏதும் இல்லை”, சாமிவேலு

-ஜீவி காத்தையா.

samyசுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள கம்போங் பெர்ஜெ ஓராங் அஸ்லி மக்கள் அவர்களுடைய கம்பத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகருக்கு வர வேண்டுமானல், ஆற்றை கடக்க வேண்டும். ஆனால், பாலம் இல்லை.

34 ஆண்டுகள் அத்தொகுதியில் “ஆட்சி” புரிந்த பாரிசானின் மிக மூத்த தலைவரான ச.சாமிவேலு அந்த ஓராங் அஸ்லி மக்களுக்கு பாலம் கட்டித்தரவில்லை.

ஆனால், அந்த தொகுதியை 2008 ஆம் ஆண்டில் அவரிடமிருந்து பிடிங்கிய பிஎஸ்எம் டாக்டர் ஜெயக்குமார் அந்தக் கிராம மக்களுக்கு அவரது ஐந்தே வருட”ஆட்சி” காலத்தில் தொங்கு பாலம் கட்டித் தந்துள்ளார்.

ஆனால், அந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற அம்னோ திருடர்களால் களமிறக்கப்பட்டிருக்கும் ச.சாமிவேலு “எதிர்க்கட்சி ஆட்சியில் வளர்ச்சி ஏதும் இல்லை” என்று கூறியுள்ளார்.

சுங்கை சிப்புட் தொகுதியை அவர் “ஆட்சி” புரிந்த காலத்தில் சந்து பொந்தெல்லாம் சாலை விரிவாக்கம் செய்ததாக அவர் கூறுகிறார்.

அவரது ஆட்சி “கால கட்டத்தில் டோவன்பி தொடங்கி கோலகங்சார் வரை சாலைகளை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையோட்டிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி பயனிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

“அதோடு, பள்ளிக்கூடம், பொது மருத்துவ மனை, பொது மண்டபம், வீடமைப்பு பகுதி, தொழிற்சாலைகள் உட்புற பகுதிகளில் உள்ள சாலைகளை நவீனமயமான சாலைகளாக உருமாற்றம் என பல திட்டங்களை பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்திக் கொடுத்ததாக” அவர் குறிப்பிட்டார்.

சந்திரனும் இந்திரனும் இறங்கி வந்து நடனம் ஆடிக் களிப்பதற்கு ஏற்ற அத்தனை சுகமான நவீன சாலைகளை அமைத்த அந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் ச.சாமிவேலு, அவரது தொகுதி கம்பத்து ஓராங் அஸ்லிகள் ஆற்றை கடப்பதற்கு அவரது நீண்ட 34 ஆண்டுகால ஆட்சியில் பாலம் கட்டித்தரவில்லை. அப்படியானால், அவரது கடப்பாடு என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளில், எதிர்க்கட்சி ஆட்சியில் வளர்ச்சி ஏதும் இல்லை என்றால், கம்போங் பெர்ஜெ ஓராங் அஸ்லி மக்களுக்கு ரிம80,000 செலவில் தொங்கு பாலம் கட்டியது வளர்ச்சி இல்லையா?

ஒருவேளை, எட்டு மில்லியனில் கட்ட வேண்டிய தொங்கு பாலத்தை எண்பதினாயிரம் ரிங்கிட்டில் கட்டியது பண வெள்ளத்தில் நீந்தும் அவருக்கு வளர்ச்சியாக தென்படாமல் இருக்கலாம்.

ஆனால், ஏழைகளின் தோழனான மருத்துவ நிபுணர் ஜெயக்குமார் பாஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர ஆதரவாளர்களின் உதவியோடு ரிம80,000 த்தை வசூலித்து அந்த தொங்கு பாலத்தை கட்டினார்.

இது போன்ற பல்வேறு உதவிகளை அத்தொகுதி மக்களுக்கு ஜெயக்குமார் செய்து வருகிறார்.

தமது தொகுதி மக்களுக்கு மேம்பாட்டு திட்டங்களை கொண்டுவரும் பொறுப்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அம்னோ பாரிசான் அரசாங்கம் பாகுபாடு காட்டி வருகிறது. இப்பாகுபாடு அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையைப் பாதிக்கிறது.

ஆனால், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரிராயா கெண்டூரிக்கு தலா ரிம1 மில்லியன் செலவிட நிதி ஒதுக்கப்பட்டது!

அரசியல் நாகரீகமடைந்துள்ள நாடுகளில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி வேறுபாடின்றி  நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசியல் நாகரீகம் என்றால் ஒரு கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்நாட்டில் ஜெயக்குமார் போன்றவர்கள் பிச்சை எடுத்து தங்களுடைய சேவையைத் தொடர வேண்டியுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அரசாங்க கருவூலத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. அது மக்கள் செலுத்தும் வரியிலிருந்து ஒதுக்கப்படுகிறது. அம்னோக்காரர்கள் திருடும் நிதியில் இருந்தல்ல.

psm_kumarநாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமது தொகுதியின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறும் உரிமையை நிலைநாட்ட ஜெயக்குமார் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் “is not a court of justice. It is a court of law” என்று ஒரு காலத்தில் சட்டத்துறைத் தலைவராக இருந்த அபு தாலிப் கூறியிருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பு அக்கூற்றை நினைவுறுத்தியது என்று கூற வேண்டும்.

பிச்சை எடுத்து மக்களுக்கு பாலம் கட்டும் ஜெயக்குமார், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கிடைக்கும் படியை வைத்து மக்கள் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்த விழைகிறார்.

ஆற்றின் மேல் பாலம் கட்டுவது வளர்ச்சியல்ல. பாலத்தின் மேல் ஆற்றை கட்டுவதும், தங்கத்தால் சாலைகள் அமைப்பதும்தான் வளர்ச்சி என்றால், சாமிவேலு ஏன் அதனைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்யவில்லை?

சாமிவேலு அதனைச் செய்தால் ஜெயக்குமார் அதனைத் தடுக்க முடியுமா? தடுக்கத்தான் விடுவார்களா?

சிலாங்கூர் மாநிலத்தில் போதுமான நீர் இருக்கிறது. பகாங்கிலிருந்து நீர் கொண்டுவர வேண்டியதில்லை என்றால் விடுகிறார்களா?

மாநில ஆட்சியை திருடியவர்கள்

ஒரு மாநிலத்தின் ஆட்சியைத் திருடியவர்கள் இந்த அம்னோக்காரர்களும் அவர்களின் ஆமாம் சாமி பிஎன்காரர்களும்!

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் ஒரு சட்டமன்ற தொகுதி அம்னோவின் கையில். அங்கிருந்தவாறே சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியைத் திருடி அங்கு மாடமாளிகை கூடகோபுரங்களைக் கட்டி, தங்கத்தால் சாக்கடைகள் கட்டி உயர்ந்த ரக பன்னீரால்  அவற்றை 24 மணி நேரமும் கழுவி அந்தத் தொகுதியை நாற்றமடிக்க வைக்கலாமே. அதனைச் செய்யாமல் ஏன் கூலிக்கு மாரடிப்பவர்கள் போல் “வளர்ச்சி இல்லை, வளர்ச்சி இல்லை” என்று சாமிவேலு ஒப்பாரி வைக்க வேண்டும்?

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியைத் திருட அம்னோக்காரர்கள் முயன்றார்கள். ஜெயக்குமார் மாமன்னருக்கு எதிராகப் போர் தொடுத்தார் என்று பொய் சொல்லத் தெரியாமல் பொய் சொல்லி அகப்பட்டுக் கொண்டார்கள். அம்னோக்காரர்களுக்கு சொந்தமாக, திறமையாக பொய் சொல்லும், திருடும் திறமையும்கூட கிடையாது. அவர்களால் மற்றவர்களைப் பயன்படுத்தித்தான் திருட முடியும். அப்படி திருடிய அனைத்தையும் தங்களுடையதாக்கிக் கொள்வார்கள். பின்னர், திருடியதையும் காணவில்லை என்று தொடர்ந்து திருட முயற்சிப்பது அம்னோக்காரர்களின் பாரம்பரியம்.

வீடியோ டேப் லிங்கம், கார்பெட் தீபக், எஃபிடேவிட் பாலா ஆகியோர் அம்னோக்காரர்களின் சாதனைக்கு சான்றாக இருக்கிறார்கள்.

இந்தியர்களையும் சீனர்களையும் முன்வைத்து அம்னோக்காரர்கள் பிரிட்டீசாரிடமிருந்து ஆட்சியை திருடினார்கள்.

பின்னர், சீனர்களின் அரசாங்கப் பதவிகளையும், வங்கிகளையும், தொழில்களையும் திருடிக்கொண்டனர்.

அடுத்து, அம்னோக்காரர்கள் இந்தியர்களின் பிழைப்பை, வாய்ப்பை, பங்களிப்பை, அமைச்சர் பதவிகளைத்  திருடிக்கொண்டனர். சில எடுத்துக்காட்டுகள்:

1. பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு: 1958 இல் 28%. 2011 இல் 1.1%.

2. சொத்துடமை: 1958 இல் 24%. 2011 இல் 7.9%.

3. பட்டதாரிகள்: 1958 இல் 34%. 2011 இல் 0.9%.

4. அரசாங்க வேலை: 1958 இல் 63%. 2011 இல் 3.7%.

5. நிலச் சொத்துடமை: 1958 இல் 37%. 2011 இல் 0.8%

6. தமிழ்ப்பள்ளிகள்: 1958 இல் 1,028. 2011 இல் 523.

7. இந்திய அமைச்சர்கள்: 1958 இல் 16 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் 2 இந்தியர்கள். 2011 ஆகஸ்ட் 30 வரையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் 1 அமைச்சர்! 

இத்தகவலை 2011 ஆம் ஆண்டு மஇகா ஆண்டுப் பேராளர்கள் மாநாட்டின் போது வெளியிட்டது கர்பால், கிட் சியாங், நிக் அஸிஸ் அல்லது மற்ற எந்த எதிர்க்கட்சி தலைவரும் இல்லை.

இத்தகவலை அளித்தவர் சிவ முருகன் பாண்டியன். ஆகஸ்ட் 30, 2011 இல் தமிழ் நேசன் இதனை வெளியிட்டது. ச.சாமிவேலு இதனைப் பார்த்திருப்பார். ஆனால், பார்க்கவில்லை!

இதுதான் 56 ஆண்டுகால அம்னோக்காரர்களின், ஆமாம் சாமி பாரிசான்காரர்களின் ஆட்சியில் பாதாளத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியர்களின் வளர்ச்சி!

இதுதான் “வளர்ச்சி” என்றால், எதிர்க்கட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் “வளர்ச்சி” இல்லை என்று சாமிவேலு கூறுவது உண்மையே.

1958 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த வருமானம் $180 மில்லியன். அதில் தோட்டத் தொழில் 68 விழுக்காட்டையும், சுரங்கத் தொழில் 30 விழுக்காட்டையும் அளித்தது. மீதமுள்ள 2 விழுக்காடு மற்றவர்களின் பங்களிப்பு. இது இந்தியர்களின், சீனர்களின் உழைப்பு உருவாக்கிய செல்வம்.

இந்த அளவுக்கு நாட்டின் வருமானத்திற்கு பங்களிப்புச் செய்த இந்தியர்களின் உழைப்பை அம்னோக்காரர்கள் திருடி விட்டார்கள். இன்னும் திருடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவோ திருடிக் கொண்டிருக்கிறார்கள். தினக்குரலை பார்த்தீர்களா?

மலாய்க்காரர்களிடமும் திருடும் அம்னோக்காரர்கள்

umnoஅம்னோக்காரர்களால் திருடப்பட்டவர்கள் இந்தியர்களும் சீனர்களும் மட்டுமல்ல. சுரண்டலுக்கு இனபேதம் இல்லை என்றார் மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் உங்கு அசிஸ். அம்னோக்காரர்கள் மலாய்க்காரர்களின் சொத்தையும் திருடி விட்டனர்.

மலாய்க்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிம54 பில்லியன் மதிப்புள்ள பங்குகளில் பூமிபுத்ராக்களிடம் எஞ்சி இருப்பது வெறும் ரிம2 பில்லியன் மட்டுமே (“Of the RM54 billion in shares allocated, only RM2 billion worth of shares are left in the hands of bumiputeras.”) என்று அம்னோ பிரதமர் நஜிப் ரசாக் கூறியதாக பெர்னாமா ஜூன் 30, 2009 இல் செய்தி வெளியிட்டது.

ஏழை மலாய்க்காரர்களுக்கு சேர வேண்டிய ரிம52 பில்லியன் எங்கே போயிற்று? யார் திருடியது? வழக்கமாக பங்குகள் அம்னோக்காரர்களின் மற்றும் ஆமாம் சாமி பாரிசான்காரர்களின் அல்லக்கைகளுக்குத்தான் கொடுக்கப்பட்டது. இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏன்? இப்படி இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால்தான் பூமிபுத்ராக்கள் அவர்களுக்கான 30 விழுக்காடு இலக்கை இன்னும் அடையவில்லை. ஆகவே, ஒதுக்கீடு தொடர வேண்டும் என்ற கோரிக்கையை அம்னோ வலியுறுத்த முடியும் என்று அம்னோ அரசாங்கத்தில் சட்டத்துறைக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இத்தனை ஆண்டுகளாக, இந்த அளவுக்கும் அதற்கு மேலும் நாட்டின் சொத்தை, இந்திய, சீன மலேசியர்களின் உழைப்பை, சொத்துகளை, வாய்ப்புகளை திருடிய அம்னோக்காரர்கள் இன்னும் ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காக மக்களின், குறிப்பாக இந்தியர்களின், வாக்குகளைத் திருட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

அதனையும் வழக்கம் போல் அம்னோக்காரர்கள் இந்தியர்களை முன்வைத்து, அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் கொடுத்து, திருடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை ஜெயக்குமாரிடமிருந்து திருடுவதற்கு அம்னோக்காரர்கள் சாமிவேலுவை களமிறக்கியுள்ளனர். அவரும் பஞ்சு மிட்டாய் கொடுக்கத் தொடங்கி விட்டார்.

“தேசிய முன்னணி இத்தொகுதியைக் கைப்பற்றினால், பல மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும்”, என்ற  அம்னோக்காரர்களின் 56 ஆண்டுகால  பல்லவியை  மீண்டும் பாடத் தொடங்கி விட்டார் சாமிவேலு.

ஆனால், அம்னோ திருடர்களிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடியும் எதுவும் கிடைக்காததால், இனிமேல் எதுவும் கேட்க மாட்டோம். “நாங்கள் கடையை மூடப் போகிறோம்”, என்று விரக்தியில் அன்று கூறிய சாமிவேலு, எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் “கடை” இருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.