மஇகா வேண்டுமா? அது எதிர்க்கட்சியாக உருவாகட்டும்!

mic-logoகா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013

கடந்த 56 வருடங்களாக ஆளுங்கட்சியில் பெயர் போட்ட மஇகா, அடுத்த தவணையில் எதிர்கட்சியாக இருந்து போராட வேண்டும். நமது நாடு விடுதலையடைந்தது முதல் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா-தான் இருந்து வருகிறது. அதன் பிரதிநிதித்துவம்தான் அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்தது. அவ்வாறாக இருந்தும், குடிமக்களாக இருக்கும் இந்தியர்கள் மலேசிய நாட்டின் மக்கள் என்ற அந்தஸ்து அற்ற நிலையில்தான் வாழ வேண்டி உள்ளது.

இந்த நாடு மலாய்க்காரர்களின் நாடு என்ற ஆளுமைக் கருத்து பரவலாக ஊடுருவியுள்ளது. அரசாங்க அமைப்பு முறை, அமுலாக்க முறை, அரசாங்க கொள்கைகளை தீர்மானம் செய்வதும், கல்வி, சமூக பொருளாதார திட்டங்கள் சார்புடைய முடிவுகளை எடுக்கும் அதிகாரம்  இப்படி அனைத்திலும் மலாய்க்காரர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கியுள்ளது.  இனம் மற்றும் மதம் என்பதை பயன் படுத்தி அனைத்தையும் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் மலாய்க்காரர்கள்  கொண்டு வந்துள்ளனர்.

அம்னோ மிகவும் திறமையாக இனவாத அரசியலை பயன்படுத்தி, சனநாயகம் என்பதை மலாய்காரர் இனவாத அரசியல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். அம்னோவுக்கு தலையாட்டும் நபர்கள் மட்டுமே பங்காளிகட்சிகளில் தலைவராக முடியும். இதன் விளைவாக இந்தியர் மற்றும் சீனர் அரசியல் கட்சிகளின் சம உரிமை கோரும் கோரிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. அதைப்பற்றி பேசுவதும் மலாய் இனத்தைப்பற்றி கேள்வி கேட்பதும் தேச நிந்தனை குற்றங்களாக கருதப்பட்டன. 1987-இல் அம்னோ நடத்திய ‘ஓப்பராசி லாலாங் ‘என்ற அரசியல் களையெடுக்கும் போலிஸ் நடவடிக்கையில்  எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆய்வாளர்கள், கல்விமான்கள் உட்பட 106 நபர்கள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதோடு நான்கு பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன.

ம்னோதான் எல்லாம் என்ற நிலையில் அரசாங்கம் அமைய வேண்டும், அதுதான் பாதுகாப்பு, அதுதான் நிலைதன்மை, அதுதான் பரிவு. மற்ற இனங்களின் தலைவர்கள் வாய் பொத்தி கைகட்டி தலையாட்ட வேண்டும். இந்த நிலைப்பாடுதான் ‘சமூக ஒப்பந்தம்’  என்ற அம்னோவாதிகளின் விவாதமாகும்.

சமூக ஒப்பந்தம் என்பது மலாய்காரர்கள்தான் இந்த நாட்டின் பூர்வக்குடிகள் அவர்களுக்குத்தான் இந்த நாடு சொந்தமானது, மற்றவர்கள் வந்தேறிகள் என்ற உபதேசத்தை கொண்டுள்ளது. எனவே, அரசமைப்புச்  சட்டம் என்பது மலாய் இனத்திற்கான சிறப்பு சலுகைகளை உரிமைகளாகவே கொண்டிருக்கும். அதற்கு ஈடாகத்தான் வந்தேறிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என்பது அதன் வாதமாக உள்ளது. இதைப்பற்றி கேள்வி எழுப்புவது குளவிக்  கூட்டில் கை வைப்பதற்குச் சமமாகும் என்று மிரட்டி வருகிறார்கள் அம்னோ இனவாதிகள்.

இது ஒரு வரலாற்றுத் தவறு. உண்மை என்பது வேறு. அரசமைப்பு பலமுறை மாற்றம் கண்டு, கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்பதுபோல் இன்று சம உரிமை கொண்ட நம்மை போன்ற நாட்டு மக்கள் அந்த உரிமை மீறப்பட்ட நிலையிலும், வழியற்ற நிலை என்று நினைத்து சிக்குண்டு தவிக்கின்றோம். ஆனால், வழியுள்ளது என்பதை மக்கள்தான் உணர்த்த வேண்டும்.

மலேசியாவில் மலாய்க்காரர் அல்லாதவர் வாழ வேண்டுமானால் அவர்கள் அம்னோவின் தயவில்தான் வாழ வேண்டும். இதுதான் தேசிய முன்னணி உருவாக்கிய கூட்டு அரசியல் சித்தாந்தம். குறிப்பாக, மகாதீரின் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட கொள்கைகள் மலேசியாவை முழுமையாக மலாய்க்காரர் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தது.

அம்னோவழி, இந்தியர்களுக்கு அரசியல் விமோசனம் அறவே கிடைக்காது. அம்னோவால் விட்டுக்கொடுக்கவும் இயலாது. அப்படி செய்வது அம்னோவின் இனவாத அரசியல் கொள்கைக்கு முரண்பாடானது. மலாய் ஆதிக்கத்தின்வழி மலேசியாவை ஒரு முழுமையான மலாய்க்காரர்களின் நாடாக உருவாக்குவதுதான் அம்னோவின் இலட்சியம், குறிக்கோள், கனவு, கடப்பாடு எல்லாம். அதைப்பற்றி விசுவாசமாகவும் விரசமாகவும்  பேசினால்தான் அம்னோவின் தலைவராக முடியும். அதில் மாற்றம் செய்ய முற்படும் எந்த அம்னோ தலைவரும் பதவி இழப்பர். அப்படிபட்டதுதான் அம்னோ.

பாஸ் கட்சிக்கும் இதேநிலைதான்.  மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆனால் அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்தால் உருவாகும் சூழல் ஓரளவுக்கு குறைந்த பட்ச பெரும்பான்மையை மலாய்க்காரர்களுக்குக் கொடுக்கும். ஆனால் இவர்களுக்கிடையே உள்ள பிளவுகள், கொள்கை, அமைப்பு, அதிகார முறை வேற்றுமைகளைக்  கொண்டுள்ளன. மேலும், பொருளாதார வளத்தைத் தனது அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அம்னோவாதிகள் அதை அவ்வளவு சுலபமாக இழக்கவோ, பகிர்ந்துக் கொள்ளவோ முன்வர மாட்டார்கள்.

mic_picஇந்தியர்களைப் பொருத்தமட்டில், இந்தத் தேர்தல்தான் மிகவும் முக்கியமானதாக இருக்கும். காரணம், பிளவுபட்டுள்ள  மலாய்க்காரர்களின் நிலைதான் சிறுபான்மை இனத்தின் வலிமை. அதிலும் சீனர்கள் மிகவும் தெளிவாக இருக்கும் இந்த நிலைதான் மலேசியாவை அரசியல் வழி மறு சீரமைப்பு செய்ய கிடைத்திருக்கும் சிறந்த தருணமாகும். இதை நழுவ விடுவது ஒரு மாபெரும் வரலாற்று தவறாகும்.

மஇகா தேவை என பலர் நினைக்கலாம்; அதில் தவறில்லை. ஆனால், அம்னோ தேவை என்று நினைப்பது தவறாகும்.

காலத்தின் கட்டாயம் என்ற இக்கட்டான நிலையில் நாம் உள்ளோம். மஇகா தேவையென்று இந்தியர்கள் அம்னோவின் தேசிய முன்னணியை ஆதரிக்க முற்படுவது வியூகமற்ற ஓர் அரசியல் முட்டாள்தனமானதாகவும் அமையும்.

மஇகாவும் வேண்டும், அதேவேளை மாற்றமும் வேண்டும் என  நினைப்பவர்கள் முதலில் மாற்றம் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாற்றத்தை மஇகாவால் தர இயலாது என்பதையும் உணர வேண்டும்.

எனவே, அம்னோ தேசிய முன்னணியைப்  புறக்கணிப்பதன் வழி இந்தியர்கள் மஇகா ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவாக துணை புரிவார்கள். உரிமை வேண்டும் என்பதை ஒரு புதிய வியூகத்தில காண நாம் தயாராக வேண்டும். மஇகா, ஐபிஎப், பிபிபி போன்றவை ஒரு தவணை காலம் அரசியலில் எதிர்கட்சிகளாக செயலாற்றி அதன் வழி இழந்த நமது உரிமையை மீட்கப்  போராட வேண்டும்.

TAGS: