அனைத்துலக நிலையில் மலேசியத் தமிழர்களைத் தலைக்குனிய வைத்த மலேசியா

Tunku-Najib with Rajapakseமுதன் முதலாய் மலேசியத் தமிழனாய்ப் பிறந்ததற்காய் வருத்தப்படுகிறேன். தொடர்ந்து அதே அடையாளத்துடன் மட்டுமே வாழவேண்டும் என்ற அச்சத்துடன் இதை எழுதுகிறேன்.

கடந்து இரு நாள்களாக உலகெங்கும் வாழும் நண்பர்களின் ஒரே கேள்வி இதுதான். “என்ன அக்கா. மலேசிய அரசாங்கம் இப்படி செய்துவிட்டார்களே என்பதுதான்.”

சோமாலியா முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீன முஸ்லீம்களுக்கும் உரத்துக் குரல் கொடுக்கும் மலேசியா – பிலிப்பைன்ஸ் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடனான பேச்சு வார்த்தைகளில் பங்கெடுத்து உள்நாட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்த மனிதநேயமிக்க மலேசியா – மியன்மார் ரொயிங்யா (Rohingya) இஸ்லாமியர்களின் உள்நாட்டுப் பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து பெருமளவிலான மியன்மார் அகதிகளுக்கு மலேசியாவில் அடைக்கலம் கொடுத்தும் அவர்களின் மீள்குடியேற்றத்திற்குத் தொடர்ந்து உதவி வரும் மலேசியா – இப்படியாக உலகின் எந்த மூலையில் முஸ்லீம்களுக்கு ஒரு சிறிய சிக்கல் என்று வந்தாலும் வரிந்து கட்டி கொண்டு கிளம்பும் மலேசியா இதுவரை தான் காட்டி வந்தது மனிதநேயமல்ல… வெறும் இனவாத மதவாத அடிப்படையிலான ஆதரவு மட்டும்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நம் இதயத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது.

இதைத்தான் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம் என்பதை மலேசிய அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாகத் தானே சொன்னோம். பக்கத்தில் போய் சொன்னால் தெளிவாக விளங்கும் என்று நாடாளுமன்ற கட்டத்தில் போய் அறிக்கை கொடுத்தோமே. அரசாங்கத்தின் கையில் கிடைக்கவில்லையா? அதுபோதாது என்று ஒரு வெயில் கொளுத்திய ஞாயிற்றுக்கிழமை காலையில் லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் சாலையில் ஊர்வலம் போனோமே. இராஜ பக்சேவை தூக்கில்போட்டு கொளுத்தினோமே. அப்போது கூட நமது உணர்வு என் கொள்ளுத் தாத்தனும் பாட்டனும் ஏன் என் அப்பனும் கூட உழைத்துப் போட்ட இந்த அரசாங்கத்தின் மரமண்டைக்கு ஏற வில்லையே ஏன்…

மலேசியாவின் பல பகுதிகளில் – இந்திய தூதரகம்,  சிறீலங்கா தூதரகம்,  ஐக்கிய நாட்டு சபை அலுவலகம் என மக்கள் கூடினார்களே… 4 பேர் கூடினாலே உன் மூக்கில் வேர்த்து விடுமே. எந்தவொரு வேறுபாடுமின்றி எல்லா தமிழ் நாளிதழ்களும் பக்கம் பக்கமாக செய்தி போட்டார்களே! மலேசிய அரசே உனக்கு எங்கள் உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைக்க எப்படி மனசு வந்தது.

இந்தமுறை கண்டிப்பாய் மலேசிய தமிழர்களின் உணர்வை அரசாங்கம் புரிந்துக் கொள்ளும் என்ற  ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு என்னிடம் இருந்தது. ஆனால்,  முதலீடுகள் மட்டுமே முக்கியமானவை – ஈழத் தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கு பெறுமதி இல்லை என்பதை  நீங்கள் தெளிவாக உணர்த்தி விட்டீர்கள். கண்டிப்பாக இனி எங்கள் வீதிகளுக்கு உங்கள் ஒரே மலேசியா – பரிவுமிக்க மலேசியா என்ற கூப்பாடோடு உங்கள் அம்னோ இனவாத தலைவர்களை அனுப்பி விடாதீர்கள். பரிவும் மனிதநேயமும் மதம் இனத்திற்கு அப்பாற்பட்டது. தயதுசெய்து அந்த உன்னத பண்புகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

உங்கள் பிச்சைப் பொருள்களையும் சலுகைகளையும் கொடுத்து இப்போதும் கூட எங்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கால்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் உங்கள் உறுப்புக் கட்சிகள் வேண்டுமானால் உங்கள் துரோகத்தை மன்னித்து விடலாம். உங்கள் துரோகத்தை இளைஞர்கள் நாங்கள் மன்னிக்க மாட்டோம். இந்த தேர்தல் பரப்புரையில் முக்கிய செய்தியே இதுதான்.

மஇகா, பிபிபி,  ஐபிஎப் இன்னபிற கட்சித் தலைவர்களே எங்கே போனீர்கள்? இந்த முடிவிற்கு எதிர்ப்பாக எங்கே உங்கள் அறிக்கைகள்?
தமிழன் உயிர் கூட உங்களுக்கு அரசியல் தானா… உன் தாயின்,  தங்கையின்,  சகோதரியின் மானம் கூட அரசியல்தானா!  இதற்கு மேல் எனக்கு எழுத தோன்றவில்லை.

நாளையே தேர்தல் வரவேண்டும். எங்கள் உணர்வை மதிக்காத, காலில் போட்டு மிதித்த இந்த  இனவாத அரசு மண்ணைக் கவ்வ வேண்டும். அப்போது நான் மீண்டும் எழுத வேண்டும் – ஒரு துரோகத்திற்கு இதுதான் விலையாக வேண்டும் என!

-தமிழினி