இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இன்றே அடித்தளமிட்டு செயல்பட்டால்தான் எதிர்காலத்தில் நல்ல நிலையில் நாம் சிறந்து விளங்க முடியும். நம் இன மாணவர்கள் கல்வித் தேர்வில் தேர்ச்சி நிலை குறைவாக இருந்தாலும் அவர்களை அப்படியே விட்டு விடுவது எதிர்கால சமுதாயத்திற்கு நன்மை பயக்காது.
அதன் மாற்று முயற்சியாக இந்திய சமுதாய மாணவர்களின் நிலையை எண்ணி சமுதாய நோக்கோடு மைஸ்கில் அறவாரியம் எனப்படும் மாபெரும் கல்வி அமைப்பு தொடங்கப்பட்டு வெற்றியுடன் செயல்பட்டு வருகிறது.
இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்களின் சிந்தனை வேறுபக்கம் திரும்பாமல் இருக்க தொழில்துறை கல்வி பயிலவும், மேற்படிப்பு தொடர வேண்டிய அடிப்படை கல்வியையும் கற்றுத் தருவதற்கும் மைஸ்கில் அறவாரியம் பூச்சோங்கில் தொழிற்கல்வி கல்லூரியை நடத்தி வருகிறது.
இந்த கல்லூரியில் பயில்வதற்கு இந்திய சமுதாயத்தின் மாணவமணிகள் முன் வர வேண்டும். அவர்களைக் கொண்டு வருவதற்கு பெற்றோர்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்கிறார் அக்கல்லூரியின் நிறுவனர் வழக்கறிஞர் பசுபதி.
தற்பொழுது இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேர்ச்சியில் குறிப்பாக எஸ்.பி.எம். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மனம் சோர்வடையாமல் இருக்க அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வாழ்க்கைக் கல்வியைப் பிரபலமான நிபுணர்களைக் கொண்டு கற்றுத் தருகிறோம்.
ஒரு மாணவர் வழக்கறிஞராக, மருத்துவராக, ஆசிரியராக, தொழில்துறை நிபுணராக வர வேண்டும் என்று சிறு வயது முதல் லட்சியம் கொள்கிறார். ஆனால் அந்த லட்சியம் நிறைவேறாமல் போய் விடுகிறது.
குடும்ப வறுமை சூழ்நிலைக் காரணமாக அவர்களால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடிவதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு மைஸ்கில் அறவாரியம் கைக்கொடுத்து அவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக உருவாக்குகிறது.
இந்த கல்லூரியில் பயின்று விரைவில் வழக்கறிஞர்களாக உருவாகும் மாணவர்கள் இங்கே இருக்கின்றனர். அவர்கள் ஒரு நிறுவனத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என்கின்ற அடிப்படை விஷயங்களையும் நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று பசுபதி சொன்னார்.
இக்கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்களின் கல்வி குறித்து வினவியபோது நம்மோடு பகிர்ந்து கொண்ட சில விஷயங்களை இங்கே தருகிறோம். இதைப் படிக்கின்ற மற்ற மாணவர்களும் இக்கல்லூரியில் சேர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
சிலாங்கூர், ரவாங் பத்து ஆராங்கைச் சேர்ந்த மாணவி ஜெயந்தி மனோகரன் கூறுகையில், நான் எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக எடுத்தேன். மீண்டும் படிப்பதற்கு என் குடும்ப வறுமை தடையாக இருந்தது என்றார்.
மைஸ்கில் அறவாரியத்தின் நிறுவனர் பசுபதி மூலமாக இக்கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு வழக்கறிஞராக உருவாக வேண்டும் என்ற எனது சிறுவயது எண்ணம் நிறைவேறவிருக்கிறது. அத்துடன் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் சேர்ந்தால் அங்கு என்னென்ன வேலைகள் உண்டு – எப்படி வேலை செய்ய வேண்டும் என்ற பணியையும் கற்றுத் தருகின்றனர் என்று ஜெயந்தி கூறினார்.
கிள்ளான், புக்கிட் திங்கி மாணவி மேனகா பத்துமலை கூறுகையில் படிப்பிற்கு இடையே வேலை செய்து கொண்டிருந்தேன். எஸ்.பி.எம். தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். சான்றிதழை கையில் வைத்து அழுது கொண்டிருந்த நேரத்தில் ஜஸ்டினா என்பவர் என்னை அழைத்து கல்லூரி ஒன்றில் மேற்கல்வித் தொடர வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் உடனே விண்ணப்பப் பாரத்தைப் பூர்த்தி செய்துக் கொடுங்கள் என்றார். வழக்கறிஞராக உருவாக வேண்டும் என்ற லட்சியத்தை மைஸ்கில் அறவாரியம் மூலம் நிறைவேறவிருப்பதாக மேனகா கூறினார்.
கிள்ளான், மாணவி பவித்ரா மணிவன்மன் கூறுகையில் கல்வி சமூக நல அறவாரியமான இடபிள்யுஆர்எப் மூலம் இங்கே பயில வாய்ப்புக் கிடைத்ததாகச் சொன்னார்.
எஸ்.பி.எம். தேர்வில் குறைந்த புள்ளி தான் கிடைத்தது. நான் இந்த கல்லூரியில் சேர்ந்து 4 மாதங்கள் தான் ஆகின்றன. கணினி இயக்கவும் சரளமாக ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொண்டேன்.
சிறந்த நிபுணர்களால் பாடம் போதிக்கப்பட்டு வருகிறது. சிறந்த வழக்கறிஞராக இந்த சமுதாயத்தின் முன் தோன்றவிருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவர்களைப் போன்று குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்திக் கொண்ட ரவாங், பத்து ஆராங்கைச் சேர்ந்த காயத்ரி ராஜூ, காப்பார் கிருஷ்ணவேணி சுப்பிரமணியம் ஆகியோரும் தங்களின் சட்டத்துறைக்காக அடிப்படை கல்வியினை கற்று வருவதாகத் தெரிவித்தனர்.
கல்வியைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்ட மாணவர்கள் உடனடியாக மைஸ்கில் அறவாரியத்துடன் தொடர்பு கொண்டு தங்களின் எதிர்கால வாழ்க்கைப் பிரகாசமாக இருக்க இன்றே தயாராகுங்கள் என்கிறார் வழக்கறிஞர் பசுபதி. தொடர்புக்கு தேவசர்மா: 012-3465212, 03-77853558
[தேவேந்திரன், மக்கள்ஓசை]