முகமட் நூர், கல்விச் சட்டம் 1996 அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதா?

-சி.பசுபதி, தலைவர், தமிழ் அறவாரியம், ஜூன் 28, 2013.

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா தாய்மொழிப்பள்ளிகளுக்கு தேசிய கல்விAC Mohd Nor அமைவுமுறையில் இடமில்லை, ஏனென்றால் கூட்டரசு அரமைப்புச் சட்டம் அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆகவே, அவை மூடப்பட வேண்டும் என்று கடந்த மே 12 இல் ஒரு கலந்துரையாடலில் கூறினார்.

எஸ்ஜேகேகள் (சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள்) மூடப்பட வேண்டும் என்ற அவரின் கோரிக்கைக்கு ஆதரவாக கீழ்க்கண்ட கருத்துகளை அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது:

  1. அரசமைப்புச் சட்டப்படி இந்நாட்டில் ஒரே ஒரு கல்வி முறைதான் இருக்க வேண்டும்.
  2. தேசிய-மாதிரி பள்ளிகள் (எஸ்ஜேகேகள்) மூடப்பட வேண்டும் ஏனென்றால் அரசமைப்புச் சட்டம் அவற்றை அங்கீகரிக்கவில்லை.
  3. சீன, தமிழ் மற்றும் தனியார் பள்ளிகள் இருப்பது மக்களை பிளவுப்படுத்துகிறது.
  4. ஒரே ஒரு பள்ளி என்றால் என்ன? பிரிட்டீசார் ஆட்சி காலத்தில், அரசாங்க ஆங்கிலப்பள்ளிகள் இருந்தன. ஆகவே, இப்போது அரசாங்க தொடக்கப்பள்ளிகள் மற்றும் அரசாங்க இடைநிலைப்பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
  5. ஆகவே, இப்போது இருக்கும் எஸ்ஜேகேகளை (எஸ்ஜேகே (சீ) மற்றும் எஸ்ஜேகே (த)) நாம் அரசாங்க பள்ளிகளாக மாற்ற வேண்டும். “மாதிரி” பள்ளிகள் இருக்காது, தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகள் மட்டுமே இருக்கும்.
  6. இதனை எதிர்க்கும் பள்ளிகள் இருக்குமானால், இதற்கான வழி ஒரு நீதிமன்ற உத்தரவைப் பெற்று சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் இருப்பது சட்ட விரோதமானது மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிப்பதாகும்.
  7. சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசாங்க நிதி அரசமைப்புச் சட்டத்தில் வகைசெய்யப்படவில்லை.
  8. இஸ்லாமியப்பள்ளிகள் அமைக்கும் அல்லது அமைக்க உதவும் மற்றும் தேவைப்படும் செலவுகளை ஏற்றுக்கொள்வதற்கான கூட்டரசு அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் ஆகியவற்றின் உரிமைக்கு தடையில்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவு கூறுகிறது.

சமயப்பள்ளிகளைப் பொறுத்த வரையில், அப்பள்ளிகளை அமைப்பதற்கு அல்லது சமயப்பள்ளிகளை அமைப்பவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தலாம் என்று அரசமைப்புச் சட்டம் கூறுவதோடு தேவையான அளவுக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறது. அது (அரசமைப்புச் சட்டம்) சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை எங்கே குறிப்பிட்டுள்ளது?

 மேற்கூறப்பட்டுள்ள முகமட் நூரின் கருத்திற்கு சுறுக்கமாக எதிர்ச்சான்று அளித்தல் பொருத்தமாகும்:

கருத்து 1: முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் மலேசிய அரசமைப்புச் சட்டத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்றால், அந்த அரசமைப்புச் சட்டத்தின் எப்பகுதியிலும் “இந்நாட்டில் ஒரே ஒரு கல்வி முறைதான் இருக்க வேண்டும்” என்று வகைசெய்யப்படவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

கருத்து 2: எஸ்ஜேகேகளுக்கு (சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள்) அங்கீகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் எப்பகுதியிலும் கூறப்படவில்லை.

கருத்து 3: சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் இருப்பது மக்களைப் பிளவுப்படுத்தியுள்ளது என்ற கூற்றுக்கான ஆதாரம் எங்கே? இது சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை துடைத்தொழிக்க வேண்டும் என்ற அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கைக்கு மலாய்க்காரர்களின் கண்ணைக்கட்டி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான கூற்றாகும். தாய்மொழிப்பள்ளிக்களை துடைத்தொழிக்கும் கொள்கை 1950களில் பார்ன்ஸ் குழு அறிக்கையில் உருவானது. ஐந்து ஆங்கிலேயர்களையும் ஒன்பது மலாய்க்காரர்களையும் கொண்ட அக்குழு தாய்மொழிப்பள்ளிகளை அகற்றி விட்டு அவற்றின் இடத்தில் “ஒரே தேசிய-மாதிரி பள்ளி அமைவுமுறை” அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தது. அதனை எதிர்ப்பது மலாயாவுக்கு விசுவாசமின்மைக்குச் சமமாகும் என்று கூறப்பட்டது. இப்போது, முகமட் நூர் அப்துல்லாவுக்கும் யுஐடிஎம்மில் வேந்தராகப் பணி புரியும் அப்துல் ரஹ்மான் அர்ஷாத்துக்கும் அது “ஒற்றுமைக்கு எதிர்ப்பு” என்று பொருள்படும்.

கருத்து 4: இது பிரிட்டீஷ் காலனித்துவ ஆட்சி காலத்தில் இதர மொழிப்பள்ளிகள் இல்லை என்பதைக் குறிக்குமானால், இது ஒட்டுமொத்த திரித்துக் கூறல் எனலாம். அக்காலத்தில் ஆங்கிலப்பள்ளிகளோடு மலாய், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளும் இருந்தன.  அவற்றுக்கு ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் அரசாங்க மானியங்கள் கீழே தரப்பட்டுள்ளவாறு, எடுத்துக் காட்டிற்கு 1949 ஆம் ஆண்டு, வழங்கப்பட்டன:

ஆங்கிலப்பள்ளி – $188.88; மலாய்ப்பள்ளி – $66.84; தமிழ்ப்பள்ளி – $55.84; சீனப்பள்ளி – $8.72.

இது போன்ற, இதே அடிப்படையில் மலேசிய அரசாங்கமும் மானியங்களை வழங்குகிறது. ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக கீழ்க்கண்டவாறு மானியங்கள் வழங்கப்பட்டன:

தேசியப்பள்ளி – ரிம33.30; தமிழ்ப்பள்ளி ரிம10.95; சீனப்பள்ளி ரிம4.50

கருத்து 5: இம்மியும் பிசகாத இதனைத்தான் பார்ன்ஸ் குழு பரிந்துரைத்தது. இதனைத்தான், அம்னோவின் இறுதிக் குறிக்கோள் சாதிக்க விரும்புகிறது. இச்சூழ்ச்சித் திட்டம் (தாய் மொழிப்பள்ளிகளை அழிக்கும் திட்டம்)  இப்போது மிகச் சாதுர்யமாக மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் பின்னப்பட்டுள்ளது.

கருத்து 6: கல்விச் சட்டம் 1996 இல் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் இயங்குவதற்கு வகைசெய்யப்பட்டிருக்கையில், அவை எப்படி சட்டவிரோதமானதாகும்? அரசமைப்புச் சட்டம் பிரிவு 12 (1) (a) மற்றும் (b) ஆகியவற்றில் அரசுத்துறையால் பராமரிக்கப்படும் எந்த ஒரு கல்விக்கூட நிருவாகம்  அல்லது எந்த ஒரு கல்விக்கூடத்தின் பராமரிப்பு மற்றும் மாணவர்களின் கல்விக்காக பொதுத்துறையின் நிதியிலிருந்து வழங்கப்படும் நிதி உதவி ஆகியவற்றில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று வரையறுக்கப்பட்டிருக்கையில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் எப்படி அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்? இப்பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இருப்பது முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூருக்கு தென்படவில்லையோ?

கருத்து 7: “அரசுத்துறையால் பராமரிக்கப்படும் எந்த ஒரு கல்விக்கூடத்திற்கும்” எவ்விதப் பாகுபாடுமின்றி நிதி வழங்கப்படுவதற்கு அரசமைப்புச் சட்டம் பிரிவு 12 இல் வகைசெய்யப்பட்டுள்ளது.

கருத்து 8: முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நோர் அரசமைப்புச் சட்ட பிரிவு 12 இல் இஸ்லாமியப்பள்ளிகளை மட்டும் காண்கின்றார். அதனால், அவை நிதி பெற தகுதி பெறுகின்றன. அவர் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை அதில் காணவில்லை. அதனால், அவை அரசு நிதிக்கு தகுதி பெறவில்லை! அரசு நிதி பெறுவதற்காக தேசியப்பள்ளிகள் அதில் கூறப்பட்டுள்ளதை அவர் கண்டாரா? அவை அதில் கூறப்படவில்லை. ஆனால், அவை அரசு நிதிக்கு தகுதி பெறுகின்றன, ஏனென்றால் அவை “எந்த ஒரு கல்விக்கூடங்கள்” என்றவற்றில் அடங்கியுள்ளன. சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளும் அப்படித்தான் தகுதி பெறுகின்றன!

pasupathi_tamil_foundationமுன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் கூறியவற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்படாத அல்லது வெளிப்படையாக விளக்கிக் கூறப்படாத எதுவாயினும் அது சட்டப்பூர்வமானதல்ல என்பதோடு அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகும்.

சட்டம், ஆட்சி மற்றும் நீதி ஆகிய மூன்று உறுப்புகள் அடங்கிய அரசாங்க அமைப்பை மலேசிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ளது. அவ்வுறுப்புகளின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் அந்த அரசாங்க உறுப்புகள் செயல்படுவதற்கான வழிமுறைகளை நிர்ணயிக்கும் கோட்பாடுகள் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயல்பாடும் இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக நிர்ணையித்து எழுதப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டம்  இந்த உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லை. மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கும் இது பொருந்தும். நமது அரசமைப்புச் சட்டம் எப்படி மற்றும் எப்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்று துல்லியமாகக் கூறவில்லை. அத்துடன், அப்பதவிக்கு முகமட் நூர் அப்துல்லா என்ற ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் ஒரு சட்டவிதியாக கூறவில்லை. இது மலேசிய அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள வரையறைக்குள் நாடாளுமன்றம் இயற்றும் ஒரு சாதாரண சட்டத்திற்குட்பட்ட விவகாரமாகும்.

கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கும் இதே முறையில்தான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மலேசிய அரசமைப்புச் சட்டம் பிரிவு 74, கல்வி சம்பந்தமாக பெடரல் பட்டியலில் (Federal List), அதாவது, ஒன்பதாவது அட்டவணையின் பட்டியல் 1, செக்சன் 13, விவரிக்கப்பட்டுள்ள அனைத்து விவகாரங்கள் குறித்தும் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ளது. செக்சன் 13 “தொடக்க, இடைநிலை மற்றும் பல்கலைக்கழக கல்வி; தொழில்திறன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி; ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்; ஆசிரியர்கள் பதிவு மற்றும் கட்டுப்பாடு; நிருவாகிகள் மற்றும் பள்ளிகள்; சிறப்புக் கல்வி மற்றும் ஆய்வுகள்; அறிவியல் மற்றும் இலக்கியம் சார்ந்த அமைப்புகள்”  கல்வி என்பதில் அடங்கும் என்று விவரிக்கிறது.

நமது அரசமைப்புச் சட்டம் பிரிவு 74 இன் கீழ் மலேசிய நாடாளுமன்றம் கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் கல்விச் சட்டம் 1996.

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா எதனைச் “சட்டப்பூர்வமானதல்ல” மற்றும் “அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என்று கூறியுள்ளாரோ,  அவை அனைத்தும் கல்விக்கான உரிமைகளாக கல்விச் சட்டம் 1996 இல் இடம் பெற்றுள்ளன.

கல்விச் சட்டம் 1996 அதன் முன்னுரையில் (Preamble) “பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும் என்ற பொதுக் கோட்பாட்டிற்கு” அங்கீகாரம் அளித்துள்ளது.

அச்சட்டம் “தேசியப்பள்ளிகள்” மற்றும் “தேசிய-மாதிரி பள்ளிகள்” ஆகியவற்றை அமைத்து அவற்றை பராமரிக்கும் அதிகாரத்தை கல்வி அமைச்சருக்கு அளித்துள்ளது. (செக்சன் 28)

அச்சட்டம் தேசியப்பள்ளிகள், தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி ஆகிய இரண்டும், அரசாங்க மற்றும் அரசாங்க-உதவி பெறும் பள்ளிகள் என்று வரையறுத்து அப்பள்ளிகளில் தேசியமொழி முக்கியமான போதனா மொழியாகப் பயன்படுத்தப்படும் என்பதோடு அப்பள்ளி மாணவர்களில் குறைந்தபட்சம் 15 பேரின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டால் சீன மற்றும் தமிழ் மொழிகள் போதிப்பதற்கான வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுகிறது. (செக்சன் 2)

மேலும், தேசிய-மாதிரி பள்ளிகள் “சீன மற்றும் தமிழ் மொழிகளை முக்கிய போதனா மொழிகளாகப் பயன்படுத்தும் அரசாங்க மற்றும் அரசாங்க-உதவி பெறும் பள்ளிகள்” என்று இக்கல்விச் சட்டம் வரையறுத்துள்ளது. (செக்சன் 2)

ஆக, மலேசிய அரசமைப்புச் சட்டம் பிரிவு 74 இன் கீழ் இயற்றப்பட்ட கல்விச் சட்டம் 1996 தேசியப்பள்ளிகள் மட்டுமல்லாது சீன மற்றும் தமிழ் ழொழிகளை முக்கியமான போதனா மொழிகளாகக் கொண்ட தேசிய-மாதிரி பள்ளிகளையும் அமைத்து அவற்றை பராமரிக்கும் அதிகாரத்தையும் கல்வி அமைச்சருக்கு அளித்துள்ளது.

கல்வி சம்பந்தப்பட்ட சட்டம் இவ்வாறு இருக்கையில், முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கூறுவாரா?:

(அ) நாடாளுமன்றம் சீன மற்றும் தமிழ் மொழிகளை முக்கிய போதனா மொழிகளாகப் பயன்படுத்தும் தேசிய-மாதிரி பள்ளிகளை அமைக்க வகைசெய்யும் கல்விச் சட்டம் 1996 ஐ இயற்றியது அவர் கூறிக்கொண்டபடி நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் உள்நோக்கத்தைக் கொண்டதா?

(ஆ) அரசமைப்புச் சட்டத்தில் வகைசெய்யப்படாத அல்லது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறப்படும் தேசிய-மாதிரி பள்ளிகள் மற்றும் அவற்றை பராமரிப்பதற்கான நிதிகள் போன்றவற்றுக்கு வகைசெய்யும் இக்கல்விச் சட்டம் 1996 அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதா? அதன் காரணமாக அது செல்லுபடியாகதோடு அமலாக்கக் கூடாததா?