ஆட்சியாளர்களை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்திய அம்னோ

-ஜீவி காத்தையா.

பேராசிரியர் அசிஸ் பாரியும் மலேசியாகினியும் சிலாங்கூர் சுல்தானையும் மலாய் அரச அமைப்புகளையும் அவமானப்படுத்தி விட்டதாகவும் அவர்களை தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியிலிருக்கையில் ஓர் அமைச்சருக்கு எதிராக 362 பக்க ஊழல் புகாரை முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியிடம் வழங்கியவரும் அதன் பின்னர் அம்னோவுக்குத் தாவி இப்போது செனட்டராகியிருக்கும் எஸாம் முகமட் நூர் போலீஸ் புகார் செய்துள்ளார்.பாரிசான் பங்காளிக் கட்சிகளின் ஆதரவோடு அம்னோ மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புரிமையைப் பறிப்பதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மலாய் ஆட்சியாளர்களை அம்னோவினர் அவமானப்படுத்தியது எஸாமுக்கு தெரியாதோ?

ஜொகூர் மாநில ஹாக்கி விளையாட்டு பயிற்றுனர் டக்ளஸ் கோமஸ் ஜொகூர் சுல்தானால் தாக்கப்பட்ட சம்பவத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் அம்னோவினர் மலாய் ஆட்சியாளர்களுக்கு அளித்த “மரியாதை”  இதோ:

ஜோகூர் மாநில மாக்தாப் சுல்தான் அபு பாக்கர் ஹாக்கி விளையாட்டு பயிற்றுநரான டக்ளஸ் கோமஸ் ஜோகூர் அரண்மனைக்குத் திங்கள்கிழமை அதாவது 30.11.1992 ஆண்டில் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜோகூர் அரண்மனைக்குச் சென்று வந்த பின்னர், டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி கோமஸ் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருடைய முகம் மற்றும் வயிற்றில் காணப்பட்ட காயங்களுக்கு வைத்தியம் செய்து கொண்டார்.

டிசம்பர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோமஸ் தாம் அரண்மனையில் இருந்தபோது தாக்கப்பட்டதாகவும், அப்போது பலர் அங்கு இருந்தபோதிலும், தனக்கு ஏற்பட்ட காயங்களுக்குப் பொறுப்பான ஒருவர் சுல்தான் மட்டுமே என்று அவர் ஒரு போலீஸ் புகார் செய்தார்.
 

வன்முறைக்கு எதிராகக் கண்டனம்

கோமஸ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாளிதழ்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. ஜோகூர் சுல்தான் மற்றும் ஜோகூர் அரச குடும்பத்தினர் புரிந்த இதர தகாதச் செயல்களும் வெளியிடப்பட்டன. இதர மாநில சுல்தான்களின் தகாதச் செயல்களும் சுட்டிக் காட்டப்பட்டன.

இம்மாதிரியான சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில் சுல்தான்களுக்கு விலக்கு அளிக்கும் சிறப்புச் சலுகைகள் (immunity) அகற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
 

அரசாங்கத்தின் உடன் நடவடிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி கோமஸ் போலீஸ் புகார் செய்தார். அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையில் இறங்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் டிசம்பர் 9 ஆம் தேதியிலிருந்து வெளிவரத் தொடங்கின. 

“கோமஸ் விவகாரம் குறித்து அம்னோவின் கூட்டம்”, “கபார் பாபா நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்வார்”, “அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படலாம் என்ற பிரதமரின் அறிவிப்பு”, “நாடாளுமன்ற மக்களவைக்கு எப்போது அறிவிப்புச் செய்வது பற்றி அமைச்சரவை முடிவு செய்யும்”, “அரசமைப்புச் சட்டத்திருத்த வரைவு கிட்டத்தட்ட தயார்”, “அம்னோ அவ்வரைவைப் பரிசீலிக்கிறது”, “முன்மொழியப்படவுள்ள சட்டத்திருத்தங்கள் ஜனவரி 6, 1993இல் வெளியிடப்படும்” போன்ற செய்திகள் டிசம்பர் 9, 1992லிருந்து ஜனவரி 5, 1993 வரையில் வெளிவந்து கொண்டிருந்தன.

அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் செய்திகளும் இதே காலக்கட்டத்தில் தொடர்ந்து வெளிவந்தன.

அரசியல் கட்சிகளான ஜசெக, பாஸ், பார்டி ரக்யாட் மலேசியா ஆகியவையும் கோமஸ் சம்பவம் போன்ற ஒன்று மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன.

அரசியல் கட்சிகளைத் தவிர இதர அமைப்புகளும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தன. மலாய் அறிவார்ந்தவர்கள் காங்கிரஸ் கோமஸ் சம்பவம் குறித்து அதன் அதிர்ச்சியைத் தெரிவித்ததோடு வன்முறையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது. அரண்மனையைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டதுடன், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவித்தது தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் (என்யுடிபி). தேசிய உலாமாக்கள் மன்றம், மலாயா பல்கலைக்கழகக் கல்விமான்கள் அமைப்புப் போன்றவை சுல்தான்களுக்கு விலக்கு அளிக்கும் சிறப்புச் சலுகையை அகற்ற அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன.

அரச குடும்பத்தினருக்கான அம்னோவின் நன்னடத்தைக் கோட்பாடு அரச குடும்பத்தினரில் சிலர் பொதுமக்களைத் தாக்குதல் போன்ற தகாத செயல்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

இந்நாட்டு ஆட்சியாளர்கள் பிரான்ஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் மன்னர்கள் மக்களால் அகற்றப்பட்டதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் மேலும் கூறினார்.

இந்நாட்டுப் பின்னணியில், ஹிக்கயாட் அப்துல்லா முன்ஷி, சில மலாய் ஆட்சியாளர்கள் அவர்களுடைய மாநிலங்களை நிருவாகம் செய்வதில் கவனம் செலுத்தாமல் இதர நடவடிக்கைகளில், கஞ்சா புகைப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருந்ததைக் குறைகூறியிருந்தார் என்று அம்னோவின் உதவித் தலைவருமான அன்வார் சுட்டிக் காட்டினார்.

முன்னாள் சட்ட அமைச்சரும் சட்டத்துறை தலைவருமான ஹம்சா அபு சாமா, “சட்டம் எவருக்கும், ஆட்சியாளருக்கும்கூட, விதிவிலக்கு அளிக்கக்கூடாது”, என்றார்.

“ஆட்சியாளர்கள் பொருட்காட்சியகத்திற்கு அனுப்பப்படுவதை விரும்பவில்லை என்றால், அவர்கள் தங்களுடைய நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்”, என்று 1981ஆம் ஆண்டில் ராஜா அஸ்லான் ஷா கூறியிருந்தது மேற்கோள் காட்டப்பட்டது.

ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மகாதிர், “அரச குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளில் மக்களைக் கொல்வதும் அடிப்பதும் அடங்கா”, என்றார். “கடன்கள் போன்ற வழக்குகளில் மட்டுமே ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்”, என்று விளக்கம் அளித்த மகாதிர், அரச குடும்பத்தினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் புகார் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த அதே நேரத்தில் சுல்தான்களின் பல்வேறு நடவடிக்கைகள், நடத்தைகள் குறித்து அரசாங்கம் அறிக்கைகளையும் தகவல்களையும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. இதற்குமுன் பொதுமக்களுக்கு இவ்வாறான தகவல்கள் கிடைத்ததில்லை. அவற்றைப் பின்னர் காண்போம்.
 

“திருடர்கள், சோரம் போகிறவர்கள், குடிகாரர்கள், குண்டர்கள்,” ஆட்சியாளர்களா?

கோமஸ் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வலுவான ஆதரவு மக்களிடமிருந்தும் பொது அமைப்புகளிடமிருந்தும் வந்து கொண்டிருக்கும் வேளையில், 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாத நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் துணைப்பிரதமர் கபார் பாபா, ஜோகூர் சுல்தான் அவருடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் உன்னதத்திற்கு முரணாக நடந்து கொண்டார் என்று அறிவிக்கும் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

அம்மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகக் கடுமையான கருத்துகளைக் கூறினர்.

செமங்காட் 46 மற்றும் பார்டி பெர்சத்து சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கபார் பாபா தாக்கல் செய்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அவ்வாறே, ஜசெகவும் பாஸ் கட்சியினரும் ஆதரவு வழங்கினர்.
“தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத்தை அரசாங்கம் திருத்தும்”, என்று மகாதிர் கூறினார்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தக் கோரினர். சிலர் இத்தொடரிலேயே அதனைச் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

ஆராவ் தொகுதி பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர் சகிடான் காசிம், “1972ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஜோகூர் அரச குடும்பத்தினர் பொதுமக்களை அடித்தல், கடுமையாகக் காயப்படுத்துதல், கற்பழித்தல் போன்ற 23 குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள்” என்று கூறினார்.

டாக்டர் அ•பிபியூடின் ஒமார் (பிஎன் – பாடாங் தெராப்) “ஆட்சியாளர்கள் தேவர்களின் மறுபிறப்பல்லர் என்று அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். அப்பதவிகளில் அவர்களை வைத்தவர்கள் மக்கள்”, என்றார்.

“திருடர்கள், சோரம் போனவர்கள், குடிகாரர்கள் மற்றும் குண்டர்கள் என்று அறியப்பட்ட ஆட்சியாளர்களை நாம் எப்படித் தொடர்ந்து ஆதரிக்க முடியும்?” (“How can we continue to uphold Rulers who are known to be robbers, adulterers, drunkards and kaki pukul (thugs)?”), என்று அவர் வினவினார்.

சுல்தான்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து அவர்களைக் கொன்ற சம்பவங்களை அவர் மேற்கோள் காட்டினார். சில சம்பவங்களில் ஒழுக்கமற்ற ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் நாகரிகமான முறைகளைப் பயன்படுத்தினர் என்று அவர் மேலும் கூறினார்.

“அம்னோவும் டத்தோ ஓன் பின் ஜாபாரும் இல்லாதிருந்தால், மலேசியா இன்று ஒரு குடியரசாகி இருக்கும்”, என்று அ•பிபியூடின் ஒமார் சுட்டிக் காட்டினார்.

“மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நாட்டில் கிளர்ச்சி ஏற்படலாம் என அஞ்சுகிறேன்”, என்று பாசிர் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராகிம் அலி எச்சரித்தார்.

அரசாங்கம் தாக்கல் செய்திருக்கும் மசோதாவை ஆதரித்த கர்பால் சிங், இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டது மற்றும் ஒரு கோல்ப் விளையாட்டு உதவியாளர் (கேடி) கொல்லப்பட்டது சம்பந்தமாக ஜோகூர் சுல்தான்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மகாதிரைப் பார்த்து அவர் கேள்வி எழுப்பினார்.

“ஆட்சியாளர்களின் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் முழும¨யான ஆதரவு வழங்குவதாக”, ஹாடி அவாங் (பாஸ் – மாசாங்) கூறினார்.

மேலும், “ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரம் இல்லை என்பதோடு அவர்கள் தெய்வத்தன்மையான ஒழுக்கத்தைக் கொண்டிருக்கவில்லை”, என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களுக்குப் பதில் அளித்த துணைப்பிரதமர் கபார் பாபா, இது சம்பந்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் ஆட்சியாளர்களின் மாநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்றார்.

அரசாங்கத்தின் சார்பில் கபார் பாபா தாக்கல் செய்த இம்மசோதாமீது நடந்த விவாதத்தில் பாரிசான் மற்றும் மாற்றரசுக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இறுதியில், மசோதா ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுல்தான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மசோதா ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை “நாடாளுமன்றத்தின் வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவம்” என்று நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் முகமட் ஜக்கீர் இஸ்மாயில் வருணித்தார்.
 

அம்னோ உச்சமன்றக் கூட்டம்

கபார் பாபா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதா ஏகமனதாக நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணி நேரத்திற்குள் அம்னோவின் உச்சமன்றக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், ஆட்சியாளர்கள் அனுபவித்து வரும் கிரிமினல் வழக்குகள் சம்பந்தப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அக்கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மகாதிர், “சில சலுகைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது, சட்டத்தை வரைந்தவர்கள் இச்சலுகைகள் குற்றங்கள் – கொலை, சித்தரவதை மற்றும் தாக்குதல் உட்பட – புரிவதற்குத் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கவில்லை”, என்று விளக்கமளித்தார்.
 

ஆட்சியாளர்கள் மாநாட்டின் ஒப்புதல்

அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை மாற்றவோ, திருத்தவோ வேண்டுமென்றால், அவற்றுக்கு ஆட்சியாளர்கள் மாநாட்டின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

அம்னோ முன்மொழிந்துள்ள சட்டத்திருந்தங்கள் எந்த வகையிலும் ஆட்சியாளர்கள் அனுபவித்து வரும் சலுகைகளைப் பாதிக்கவில்லை என்று அம்னோவின் சார்பில் பிரதமர் மகாதிர் வாதிட்ட போதிலும், இப்பிரச்னைக்குச் சுமுகமான தீர்வு காணும் பொருட்டு, ஆட்சியாளர்கள் மாநாட்டின் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநில ஆட்சியாளர்களில் சிலர் முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். சிலாங்கூர் சுல்தான் அவருடைய ஆதரவைத் தெரிவித்தார். ஆனால், அதற்கு எதிர்ப்புகளும் இருந்தன. முதல் கட்டத்தில், ஆட்சியாளர்கள் அம்னோ முன்வைத்த சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்க ஆட்சியாளர் மாநாடு மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து அரசாங்கம் ஆட்சியாளர்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியது.

பின்னர், இரு தரப்பினருக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தத்திற்குச் சில மாற்றங்களுடன் அவற்றுக்கு ஆட்சியாளர் மாநாடு ஒப்புதல் வழங்கியதாகப் பிப்ரவரி 11இல் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பிரச்னை தலைதூக்கியது. ஜனவரி 17 ஆம் தேதி சட்டத்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள ஆட்சியாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்வதாகக் கூறினர் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஜனவரி 18 ஆம் தேதி நடந்த சிறப்புக் கூட்டத்தில் சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ள சில திருத்தங்களுக்கு மேலும் ஆய்வுகளும் ஆலோசனைகளும் இல்லாமல் அவற்றுக்கு ஒப்புதல் வழங்க இயலாது என்று ஆட்சியாளர்கள் மாநாடு முடிவெடுத்தது.
 

சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன

அம்னோ முன்மொழிந்த ஆட்சியாளர்களின் சலுகைகள் சம்பந்தப்பட்ட சட்டத்திருத்தங்கள் ஆட்சியாளர்களின் ஒப்புதல் இன்றியே நாடாளுமன்றத்தில் 18.1.1993இல் தாக்கல் செய்யப்பட்டது.

ஏன் அவ்வாறு செய்யப்படுகிறது என்பதற்கு மகாதிர் அளித்த விளக்கம்: “இப்பிரச்னை குறித்து ஆட்சியாளர்களிடம் மேலும் பேசுவது பயனற்றது என்று அரசாங்கம் கருதியது. ஏனென்றால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படுவதில்லை. உதாரணத்திற்கு, அரசாங்கம் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பின்னர் அதை ஏகமனதாக நிராகரித்தனர்.”

ஆட்சியாளர்கள் எதிர்ப்புகளிலிருந்து பாதுகாப்பதும் அரசமைப்பு முடியாட்சி முறையை அழிவிலிருந்து காப்பாற்றுவதும்தான் நோக்கம் என்று அம்னோ இச்சட்டத்திருத்தங்களை நியாயப்படுத்தியது.

சட்டத்திருத்தங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மகாதிர், ஆட்சியாளர்களும் அவர்களுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு இருப்பவர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கடுமையானவையாக இருக்கின்றன. அவை இன்னும் மோசமாகலாம். “முன்மொழிந்துள்ளவாறு சட்டம் திருத்தப்படவில்லை என்றால், முடியாட்சி முறையை மக்கள் வெறுக்கக்கூடிய சம்பவங்கள் நிச்சயமாக நடக்கக்கூடும். “அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் கூறப்பட்டிருக்கலாம், ஆனால் முடியாட்சி முறையை அகற்ற வேண்டும் என்ற முன்மொழிதல்கள் என்றாவது ஒரு நாள் எழுவது சாத்தியமற்ற ஒன்றல்ல”, என்று கூறினார்.

“ஆட்சியாளார்களுக்கு எதிரான வெறுப்பு மேலோங்காமல் தடுப்பது அல்லது நிறுத்துவதுதான் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களின் நோக்கம். இல்லையென்றால், இது ஆட்சியாளர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இட்டுச் செல்லும்”, என்று மகாதிர் விளக்கம் அளித்தார்.

“முடியாட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருப்பவைக்கு மேலும் வலுவூட்ட முடியாட்சியை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம் அல்லது முன்மொழிதல் தேசநிந்தனையானது என்பதோடு அது சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்ற சட்டவிதி உருவாக்கப்பட்டுள்ளது”, என்று முடியாட்சி தொடர்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள சட்டவிதியை மகாதிர் சுட்டிக் காட்டினார்.

ஆட்சியாளர்களால் அரசாங்கத்திற்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் மகாதிர் கூறினார். “கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரதமரும், மந்திரி புசாரும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை அம்னோ உச்சமன்றத்திடம் கூறியிருந்தபோதிலும், பொதுமக்களுக்கு அவை தெரியப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக, அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மக்களுக்குத் தெரியாது”, என்றார் அவர்.

பிரதமர் மகாதிரின் உரைக்குப் பின்னர் நடந்த விவாதத்தில் பாரிசான், குறிப்பாக அம்னோ உறுப்பினர்கள், மற்றும் மாற்றரசுக் கட்சி உறுப்பினர்கள் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர்.

“அரசர் தவறு செய்வதில்லை” என்று கூறுவதன் அர்த்தம் அவர்கள் விரும்பிய எதனையும் செய்வதற்கான உரிமை ஆகாது”, என்று ருகானி அகமட் (பாரிசான் – பாரிட் சுலோங்) கூறினார்.

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாமுட் (பிபிபி – கோத்தா சமராகான்), “சலுகைகளை அகற்ற அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இசுலாத்திற்கு ஏற்புடையது ஏனென்றால் அது போன்ற சலுகைகள் அதில் வழங்கப்படவில்லை”, என்றார்.
 

கோழியை வெட்ட அதன் அனுமதியா?

இந்திய மகாராஜாக்கள் எப்படி வழிக்குக் கொண்டுவரப்பட்டனர் என்று வான் ஹனாபியா வான் மாட் சமான் ( பாரிசான் – கோத்தா செலாத்தார்) கூறினார்:

“1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மகா ராஜாக்களை அகற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை அவர்களுடன் நடத்தும் பொறுப்பு துணைப் பிரதமர் சர்தார் வி. பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

பட்டேல், மகா ராஜாக்களை வளைத்துப்பிடித்து ஒரு தங்கும் விடுதியில் தங்க வைத்தார். முதல் நாள் நடந்த பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் முன்மொழிதலை அவர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதில் அவர் தோல்வி கண்டார்.

இரண்டாவது நாள், அவர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியைச் சுற்றி இராணுவ வீரர்களை நிறுத்தினார். மூன்றாவது நாள், தங்கும் விடுத்திக்கான மின்சார விநியோகத்தைத் துண்டித்தார். நான்காவது நாள், தண்ணீர் விநியோகத்தை நிறுத்தினார். ஐந்தாவது நாள், உணவு கொண்டுவரப்படுவதை நிறுத்தினார்.

ஆறாவது நாள், தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆட்சியாளர்களும் அரசாங்கத்தின் முன்மொழிதலை ஏற்றுக்கொண்டனர்.”

வான் ஹனாபியா மேலும் கூறினார், “ஏன் ஆட்சியாளர்களிடம் வழக்கமான முறையில் ஒப்புதலைப் பெறவில்லை என்று பட்டேலிடம் கேட்கப்பட்டபோது, அதற்குப் பட்டேல், ‘கோழியை வெட்டுவதற்கு முன்பு அக்கோழியிடம் அனுமதி நீர் கேட்பீரா’, என்று பதில் கூறினார்.”

“ஆட்சியாளர்களுடன் இருக்கும் இப்போதையப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற அணுகுமுறையைப் பின்பற்றி இருக்கலாம்”, என்று வான் ஹனாபியா கருத்துத் தெரிவித்தபோது உறுப்பினர்களின் சிரிப்பால் நாடாளுமன்ற அவையே அதிர்ந்தது.
 

“மனிதன் பாதி, கடவுள் பாதி”

டாக்டர் அ•பிபியூடின் ஒமார் (பாரிசான் – படாங் தெராப்) ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு சிறப்புச் சலுகை அவர்களுக்கு “மனிதன் பாதி, கடவுள் பாதி” அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. இது பொறுப்பற்ற ஆட்சியாளர்கள் கடுமையான குற்றங்களைப் புரிய வழிவகுத்துள்ளது.

கிளந்தான் சுல்தான் அரசியலில் ஈடுபட்டது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது ஏனென்றால் ஆட்சியாளர்கள் அரசியலிலும் வாணிகத்திலும் ஈடுபட முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

ஜோகூர் சுல்தானால் இரு ஜனநாயகச் செயல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 1991ஆம் ஆண்டில் தாக்கப்பட்டனர். ஜனநாயகச் செயல் கட்சி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பேரரசருக்குக் கடிதம் எழுதியிருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கர்பால் சிங் கூறினார்.
 

வன்முறை, ஆணவம், கொடுங்கோன்மை: சைட் அல்பார் ஹமிட்

“பழங்காலத்தில் அரசர் “நீதியின் ஊற்று” என்று கருதப்பட்டார். ஆகவே, அரசர் தவறு செய்யமாட்டார் என்ற கருத்து நிலவியது. ஆனால், தற்போது அவ்வாறான கருத்துக் காலத்திற்கு ஒவ்வாததாகக் கருதப்படுகிறது. செமாங்காட் 46 மட்டுமே அக்கருத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது”, என்று சட்ட அமைச்சர் சைட் அல்பார் ஹமிட் கூறினார்.

வன்முறை, ஆணவம் மற்றும் கொடுங்கோன்மை வழி இறையாண்மையை நிலைநிறுத்த முடியாது. மெய்யறிவு மற்றும் மக்களின் அன்பு ஆகியவற்றிலிருந்து பிறப்பது இறையாண்மை”, என்று சட்ட அமைச்சர் மேலும் கூறினார்.
 

எகிப்திய மன்னர்களின் கதிதான்

ஆட்சியாளர்கள் இதர இடங்களிலிருந்து ஆலோசனை பெறுவதைத் தடுப்பதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கூறிய சகிடான் காசிம் (பாரிசான் – ஆராவ்), எகிப்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கதி ஒருநாள் இவர்களுக்கும் ஏற்படும் என்றார்.
எகிப்திய மன்னர் பரூக்கிற்கு 100 கார்கள், 600 அதிகாரப்பூர்வமற்ற மனைவிகள் மற்றும் 600 அரண்மனைகள் இருந்ததையும் சகிடான் சுட்டிக் காட்டினார்.

“ஆட்சியாளர்கள் சமூக ஒப்பந்தத்தை மீறியது இந்தச் சட்டத்திருத்த தேவைக்கு இட்டுச் சென்றுள்ளது”, என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், ஜோகூர் சுல்தான் குடும்பத்தினர் புரிந்த 23 கிரிமினல் குற்றச்சாட்டுகளை சகிடான் காசிம் பட்டயலிட்டார்.
 

மலாக்காவில் நடந்தது மீண்டும் நடக்கலாம், அனுவார் மூசா

மலாய்க்காரர்கள் ஆட்சியாளர்மீது எப்போதும் அன்பும் விசுவாசமும் கொண்டிருந்தனர். அவர்களுடைய கடந்த காலத் தகாதச் செயல்களே மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பின, மலாக்காவில் நடந்ததைபோல் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செனட்டர் அனுவார் மூசா மேலவையில் கூறினார்.

“ஆட்சியாளர்கள் இதனை உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும், இல்லையேல் வரலாற்றை மீண்டும் கொணர மலாய்க்காரர்கள் தூண்டப்படலாம்”, என்று அனுவார் மூசா மேலும் கூறினார்.

பிரதமர் மகாதிர் முன்வைத்த சட்டத்திருத்தத்தின் மீது மேலும் பல பரிசான் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக அம்னோ உறுப்பினர்கள், ஆட்சியாளர்களை கடுமையாக விமர்ச்சித்து உரையாற்றினார்.

நாடாளுமன்ற இரு அவையிலும் வெளியிலும் அம்னோ தலைவர்கள் கடுமையான கருத்துகளை வெளியிட்டனர்.

எடுத்துக்காட்டாக, சிரம்பானில் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இசா அப்துல் சமாட், “ஒரு பக்கம் இசுலாம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவர்கள் மிகுந்த உணர்ச்சிமிக்கவர்களாக இருக்கிறார்கள், ஆனால், இன்னொரு பக்கம் அவர்களுக்கு இன்னும் விலக்கு அளிக்கும் சிறப்புச் சலுகை வேண்டும் என்கிறார்கள். இச்சலுகை இசுலாத்தில் இல்லை”, என்றார்.
 

மாற்றரசுக் கட்சிகளின் நிலை

மகாதிர் முன்வைத்த சட்டத்திருத்தத்திற்குச் செமாங்காட் 46 கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. “சில நடவடிக்கைகள் தேவை, அவற்றின் வழி ஆட்சியாளர்கள் மக்களின் குறைகளைத் தெரிந்து கொள்ள முடியும்” என்பதை ஒப்புக் கொண்ட அக்கட்சி, முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் ஆட்சியாளர்களின் இறையாண்மையில் தலையிடுகின்றன. அத்துடன் அவை குடியாட்சி அமைப்பதற்கான முதற்படியாகும்”, என்று கூறியது.

செமங்காட் 46 ஒட்டுமொத்தமாகச் சட்டத்திருத்த மசோதாவை நிராகரித்தது.

ஜனநாயகச் செயல் கட்சி அரசாங்கம் முன்வைத்த சட்டத்திருத்தங்களை முழுமையாக ஆதரித்தது. ஆனால், அத்திருத்தங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க மறுத்துவிட்டது. இச்சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, அவை ஆட்சியாளர்யாளர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் நிலை. கர்பால் சிங் இதனை வலியுறுத்தினார்.

கர்பால் கூறினார், “While the Party supported the amendments, its MPs abstained from voting because of certain technical obstacles.”

கர்பாலின் வாதத்தை மறுத்த மகாதிர், ஆட்சியாளர்கள் மாநாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றார்.

இல்லாத ஒன்றை எப்படி அகற்ற முடியும்? என்ற அவர், அரசமைப்புச் சட்டம் மிகக் கவனமாக ஆராயப்பட்டதாகவும் அதில் “Immunity” என்ற சொல் காணப்படவில்லை என்று மகாதிர் திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், குற்றம் புரிவது ஓர் ஆட்சியாளரின் “சலுகை, நிலை, கௌரவம் அல்லது கண்ணியம் என்று அரசமைப்புச் சட்டத்தில் அர்த்தம் கூறப்படவில்லை” என்றும் மகாதிர் வாதிட்டார்.
 
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் ஹாடி அவாங் சட்டத்திருத்த மசோதாவை வலுவாக ஆதரித்துப் பேசினார். ஆனால், அக்கட்சி அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. அதற்கு அவர் இரு காரணங்களைக் கூறினார்: 1) சட்டத்திருத்தங்கள் மிகக் குறுகியதும்/குறுகியனவாகவும் இருக்கின்றன; 2) ஆட்சியாளர்கள் புரிந்த தகாத செயல்களை நாடாளுமன்ற அவையில் பகிரங்கப்படுத்திய விதத்தைக் கட்சி விரும்பவில்லை (“… the Party did not like the manner the wrong doings of the Rulers were exposed in the Dewan.”).

நாடாளுமன்ற இரு அவையிலும் நடந்த விவாதத்திற்குப்பின் அரசாங்கம் முன்மொழிந்த அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் பெரும்பான்மையான வாக்குகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
 

“ஆட்சியாளர்களின் பகிரங்கப்படுத்தப்பட்ட தகாதச் செயல்கள்”

டக்ளஸ் கோமஸ் ஜோகூர் சுல்தானால் தாக்கப்பட்ட புகார் வெளியான ஓரிரு தினங்களில் ஜோகூர் மற்றும் இதர மாநில சுல்தான்களின் “தகாதச் செயல்கள்” வெளிவரத் தொடங்கின.

தகாதச் செயல்கள் துங்கு அப்துல் ரஹ்மான் பிரதமராக இருந்த காலத்திலேயே அவருடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெளியாக்கப்படவில்லை.

“கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரதமரும், மந்திரி புசாரும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை அம்னோ உச்சமன்றத்திடம் கூறியிருந்தபோதிலும், பொதுமக்களுக்கு அவை தெரியப்படுத்தப்படவில்லை”, என்று மகாதிர் கூறியதை மேலே கண்டோம்.

ஆட்சியாளர்களின் தகாதச் செயல்கள் ஏராளம், ஏராளம் என்றாலும், பகிரங்கப்படுத்தப்பட்டவை ஒரு தினையளவுதான் (“tip of the iceberg”) என்று கூறப்படுகிறது.
 

அத்தினையளவானவற்றுள், சில:

வெட்டுமரச் சலுகை: 1988-1992 ஆண்டுகளுக்கிடையில் சுல்தான்களுக்கு 270 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 37,223.6 ஹெக்டர் வெட்டுமரச் சலுகைகள் வழங்கப்பட்டன. 1991-1995 ஆம் ஆண்டுகளுக்கு வெட்டுமர கோட்டா 30,000 ஏக்கர்தான். ஆனால், சம்பந்தப்பட்ட சுல்தானுக்கு 93,000 ஏக்கர் வழங்கப்பட்டது. ஆனால், இதனை பகாங் அரண்மனை மறுத்துள்ளது என்றும் கூறப்பட்டது.

காட்டு இலாகா அதிகாரிகளுக்கும் அரண்மனைக்கும் மோதல்கள் இருந்தன. ஒத்துழைக்காத இலாகா அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அனுமதி வழங்கப்பட்ட கார்கள்: சுங்கைவரி இலாகா அதிகாரிகள் மூன்று சொகுசு கார்களைக் கைப்பற்றினர். பகாங் சுல்தானுக்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பாவித்து இறக்குமதி வரி கட்டுவதைத் தவிர்க்க முயன்ற ஒரு வெட்டுமர முதலாளியின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்சியாளர்களுக்குக் கூடுதல் அனுகூலங்கள் கிடையா. சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள், நிதிகள் மட்டுமே கொடுக்கப்படும். கெடா அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கூடுதல் வருமானங்கள் நிறுத்தப்பட்டன.

பகாங் சுல்தானின் ஜெட் விமானத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் திரும்பப்பெறப்பட்டன. பேராக் அரண்மனைத் திட்டச் செயல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஜோகூர் சுல்தானின் ஊதாரிச் செலவினங்களுக்கு முற்றுப்புள்ளி. மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு இனிமேல் கிடையாது. ஆட்சியாளர்களுக்குப் பங்கு ஒதுக்கீடுகள் இனிமேல் இல்லை. அரச குடும்பத்தினர் அவர்களுடைய சொத்துகளுக்கு வரி கட்ட வேண்டும். எதிர்கால அரச சுற்றுப்பயணங்களின்போது மருத்துவர் இருக்க மாட்டார்கள்.

கெடா சுல்தானுக்கு ஆண்டுக்கு 160 ஹெக்டர் வெட்டுமரச் சலுகை. சுல்தானின் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயண டிக்கட், தங்குமிடம் மற்றும் கைச்செலவிற்காக அரசாங்கம் 250,000 வெள்ளி வழங்கியது. அரச குத்தகையாளர்களுக்கு இனிமேல் வேலைகள் இல்லை. சிலாங்கூர் அரசு அரச குடும்பத்திற்குக் குத்தகைகள் வழங்கா. அரச குடும்பம் 264,000 வெள்ளி வீட்டு வரி கட்டவில்லை. பெர்லிஸ் அரச கும்பத்தினர் அவர்களுடைய வீடுகள், கடைகள், அங்காடிக்கடைகள் மற்றும் திரையரங்கம் ஆகியவற்றுக்கு வீட்டுவரி கட்டவில்லை.

“ஒரு சுல்தான் இராணுவப்படையினரிடம் தவறாக நடந்து கொண்டார்” என்று நஜிப் கூறினார். ஒரு சுல்தானின் பிக்னிக்கு இடையூறு விளைவித்து விட்டதற்காக ஒரு கடற்படை அதிகாரி அவருடைய கப்பலிலிருந்து கடலில் குதித்து கரைக்கு நீந்திப் போகுமாறு உத்தரவிடப்பட்டார்.

1989ஆம் ஆண்டில் பேரரசரின் அரண்மனை பழுதுபார்ப்பதற்கு 69.32 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது. சமையலறை பாத்திரங்களுக்காக 6.8 மில்லியனும், படுக்கை விரிப்புகளுக்காக 2.5 மில்லியனும், அவற்றை அடுக்கி வைப்பதற்கு 300,000 மும் செலவு செய்யப்பட்டது. ஒன்பது அரண்மனைகளைப் பராமரிப்பதற்கு 16 மில்லியன் தேவைப்படுகிறது.

1981ஆம் ஆண்டில் நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட 1600 ஹெக்டர் நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஜோகூர் அரச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் கட்டுமானத் தொழிலிருந்து, எண்ணெய், வாயு, செவன்லெவன் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளபோதிலும் இன்னும் அதிகமான அனுகூலங்களை நாடுகின்றனர்.

கிளந்தான் அரச குடும்பம் இறக்குமதி செய்த மெர்சடிஸ் 600 ரக காருக்கான இறக்குமதி வரி 1.15 மில்லியன் பற்றி கிளந்தான் அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது.

பெயர் குறிப்பிடப்படாத ஆட்சியாளரின் இஸ்தானா அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கேசினோவாக மாற்றப்பட்டது.

மேலே கூறப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் பகிரங்கப்படுத்தப்பட்ட தகாதச் செயல்கள் ஆட்சியாளர்கள்மீது நெருக்குதல் கொடுப்பதற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டவை. இவை வெளியிடப்பட்ட முறையைத்தான் பாஸ் கட்சியின் அவாங் ஹாடி ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

இது மட்டுமன்று. இன்னும் உண்டு. ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றம் செல்வார்களேயானால் நீதிமன்றத்தில் ஆட்சியாளர்களின் தகாதச் செயல்கள் மேலும் அம்பலப்படுத்தப்படும். இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர் சட்ட அமைச்சர் சைட் அல்பார் ஹமிட்.

இது ஒரு தினையளவுதான் (Only tip of the iceberg). நாளிதழ்கள் ஆட்சியாளர்களின் தகாத மற்றும் மிதமிஞ்சிய செயல்களில் ஒரு சிறிய பகுதியைத்தான் வெளியிட்டுள்ளன என்று சைட் அல்பார் ஹமிட் கூறினார்.

ஆட்சியாளர்களைப்பற்றி மேற்கூறப்பட்டவை அவர்களை அவமதிக்கும் தேசநிந்தனையாகாதா?