குருட்டுத் தனமாய் குருமார் வழிபாட்டில் ஈடுபடும் மூட பக்தர்கள்! இந்து சமயத்திற்கும் தமிழர் அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாய் ஆவார்கள்! (பாகம்-2)

meditationஇந்த குருமார் வழிபாட்டின் தத்துவம் என்ன? ஒரு மனிதர் தான் வாழ்ந்தக் காலத்தில் ஏதோ அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்காக (அதுவும் அதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சான்றுகள் கிடையாது) அவர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகிவிடுவாரா?

நம்முடன் பிறந்து வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்த ஒருவரை (இக்குருமார்களின் இறப்பை பல மாதிரி இட்டுக்கட்டிச் சொல்வது அவரின் சீடர்களின் தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்) எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்வது?

வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்தில் நிகழ்ந்ததைத்தான் ஐதீகம் புராணம் மரபு நம்பிக்கை என்று எந்த ஒரு சான்றுகளுமின்றி எங்களை நம்பவைத்தீர்கள்!

சைவ சமய போதனைப்படி இறைவன் ஒரு நாளும் ஒரு தாயின் கருப்பையில் உண்டாகி பிறக்க மாட்டான் என்பது முடிந்த முடிபு.

குருவானவர்(உண்மை குருவாக இருந்தால் மட்டுமே, ஆனால் இந்த குருமார் வழிபாட்டில் ஈடுபடும் அனைத்து பக்தகோடிகளும் தங்கள் குரு உண்மையானவர் என்று வாதிடுகின்றனர், நித்தியானந்தா ரஞ்ஜிதா கமலீலையில் ஈடுபட்டு பிடிபட்ட பின்னரும் அவரை அவதாரப்புருஷர் என்று அவரின் பக்தர்கள் கூறுகின்றனர் முன்பைவிட தற்பொழுது அவருக்கு பெண் பக்தர்கள் மிக அதிகமாகப் பெருகி விட்டனர், இதிலிருந்தே பக்தகோடிகள் குருவை தேர்ந்தெடுக்கும் லட்சணம் தெரிகிறது! நித்தியானந்தா மட்டுமல்ல இன்னும் நிறைய குருமார்களின் யோக்கியதை இப்படித்தான் இருக்கு) மிகுந்த மரியாதைக்கும் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

அப்படியிருக்க அடிப்படையில் சைவ சமயிகளான தமிழர்கள் எப்படி நம்முடன் பிறந்து வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்த மனிதர்களை கடவுளின் அவதாரம் என்றும் அவர் கடவுள் என்றும் நம்பி இந்த குருவழிபாட்டுக் கூட்டத்தில் போய் மாட்டிக் கொண்டனர்?

முன்பு ஒரு காலத்தில் நம் மலேசியத் தமிழர்கள் பெருந்தெய்வ வழிபாட்டோடு சிறு தெய்வ வழிபாட்டையும் கடைபிடித்து வந்தனர் பிறகு சைவ சமய அறிஞர் மற்றும் தொண்டர்களின் கடும் முயற்சியால் மலேசியத் தமிழர்கள்(இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றனர்) பெரும்பாண்மையோர் சைவ சமய நெறிகளுக்குத் திரும்பினர்.

சிறு தெய்வ வழிபாடும் அவற்றிக்கு உயிர் பலியிடுவதும் குறைந்தது. முனியாண்டியாக காட்டோரத்தில் இருந்த சிறு தெய்வம் முனீஸ்வரராக மாற்றங்கண்டு கோயில் உள்ளே ஒரு தனி சன்னதி அமைத்து சைவ முனீஸ்வரராக அருள் பாலித்தது. பிற்காலத்தில் இந்த முனீஸ்வரர் சிவனின் ஒரு அவதாரம் என்று மக்களால் நம்பப்பட்டு வழிபடப்பட்டார் (மலேசியத் தமிழர்களால்(இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றனர்)). சில பல முனீஸ்வரர் கோயில்கள் பிற்காலத்தில் சிவாலயங்களாக மாற்றம் கண்டது. அங்கு சைவ சமய முறைமைகள் கடைபிடிக்கப்பட்டது, உயிர் பலியிடுவது நிறுத்தப்பட்டது.

எது எப்படியோ மலேசியத் தமிழர்கள்(இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றனர்) சைவ சமயத்தை சார்ந்தவர்களாகவே வாழ்ந்தனர். எனக்குத் தெரிந்து தோட்டப்புரத்தில், மலாயாவில் குடியேறியது முதல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பிறந்து வாழ்ந்த தமிழர்கள் (நானும் தோட்டப்புரத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்) தங்களிடம் ஒருவர் வந்து நீங்கள் என்ன இனம், நீங்கள் என்ன மதம் என்று கேட்டால்: “நாங்க தமிளாலுங்க, நாங்க கும்படறது தமிள சாமிங்கள” என்றுதான் பதில் சொல்லுவார்கள், நானும் அப்படிதான் பதில் கூறினேன்.

இப்படித் தமிழ் மயமாக வாழ்ந்த மலேசியத் தமிழர்கள் பிற்காலத்தில் எப்படி தன்னிலை மறந்து இந்தியன் இந்து என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டனர்? இந்தியன் தமிழன் என்ற இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் மூடனானான்! இந்நாட்டில் வாழும் ஏனைய இனத்தோரெல்லாம் (பூர்வீகக்குடியினர் உட்பட) தங்களின் இன சமயத்தை சரியாக தெளிவாக அடையாளப் படுத்திக் கொள்ளும் போது தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த தடுமாற்றம் அறியாமை!

முன்பு தோட்டப்புரத்தில், தெளிவான இன அடையாளத்தோடு வாழ்ந்த தமிழர்கள் பிற்காலத்தில் எவ்வாறு தன்னிலை மறந்து இந்தியன் இந்து ஆனான்? அவனது தமிழ் அடையாளத்தை யார் மறக்கச் செய்தது? அவனது சைவ சமயத்தை யார் இருட்டடிப்புச் செய்தது?

இதற்கும் குருமார் வழிபாட்டிற்கும் என்ன சம்மந்தம்? அது இந்து சமயத்திற்கு அச்சுறுத்தலாய் அமையப் போவது எப்படி?
அடுத்தக் கட்டுரையில் தொடரும்…

-கதிர்

________________________________________________________________________________________________________

22/07/2013 Article (Part – 1)

மலேசியாவில் சிறுபான்மையினராய் வாழும் தமிழர்கள் (இந்து(சைவசமயம்) சமயத்தை சார்ந்துள்ள தமிழர்களை மட்டுமே இக்கட்டுரை விவாதிக்கிறது) இந்நாட்டில் தங்கள் இன சமய அடையாளங்களை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் சவால்களை எதிர் நோக்குகின்றனர்.

அண்மைய காலமாக வேற்று மதத்தினரின் மதமாற்றத் தாக்குதல்கலால் பெரும் இக்கட்டை நம்மினம் சந்தித்து வருவது உண்மையே! இது பெரும் சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் ஆளாகி வருவதும் நாம் அறிந்ததே.

அத்தோடு நம்மினத்தையும் சமயத்தையும் இழிந்தும் பழித்தும் பேசுவதும், நம் கோயில்களை ஆங்காங்கே இடித்துத் தள்ளுவதும் இந்நாட்டில் வாடிக்கையான நிகழ்வுகளே!

நம் இனத்தையும் சமயத்தையும் தற்காக்கும் பொறுப்பில் உள்ள நாம் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா இயக்கங்களும் தங்கள் கடமையை சரிவரச் செய்யவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இது இவ்வாறு இருக்க, நம்மிடையே சமீப காலமாகத் தோன்றி; (இந்தியாவிலிருந்து இறக்குமதியானவை) அசுரவேக வளர்ச்சி கண்டுவரும் குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்கள் இந்து(சைவசமயம்) சமயத்திற்கும் தமிழர் அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாய் மாறிவருகிறது!

ஆண்டாண்டு காலமாய் நம் மலேசியத் தமிழர்கள் முருகனையும் மாரியம்மனையும் வழிபட்டு தேவார திருவாசக திருமுறைகளை ஓதி நம் தமிழ் சைவ சமய அடையாளங்களை பேனி வந்த நிலை மாறி இன்று ஊர் தோரும் புற்றீசல்களைப் போல் தோன்றியுள்ள குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்களில் போய் சேர்ந்துக் கொண்டு பஜனைகளிலும்(இது பெரும்பாலும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் பாடப்படுகிறது) யோகாவிலும் தியானத்திலும் மூழ்கி நம் இன அடையாளத்தையும் சைவ சமய போதனைகளையும் இழந்து வருகிறார்கள்!

நம் சைவ சமய போதனைகள் சமயத்தோடு நம் தமிழையும் வழியுறுத்தி நம் அடையாளத்தை காத்தது. தேவார திருவாசக திருமுறைகளை ஓதும் போது நம்முள் ஆன்மீகத்தோடு தமிழும் தமிழ்ப் பற்றும் வளர்ந்தது! முருகக் கடவுளை நாம் வணங்கி வந்த போது, முருகன் தமிழ்க் கடவுள் என்ற அடையாளமும் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் போன்ற தெய்வீகப் பாடல்களை நாம் ஓதும் போது தெய்வீகமும் தமிழும் நம்மோடு பேனிக் காக்கப்பட்டது.

ஆனால் இன்று ஊர் தோரும் புற்றீசல்களைப் போல் தோன்றியுள்ள குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்கள் அறுசமய கூட்டான வைதீக சமயத்தில் (ஆதிசங்கரரால் ஒருங்கினைக்கப்பட்டு வகுக்கப்பட்டது. இதையே பிற்காலத்தில் இந்து சமயம் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. நம் தமிழர்கள் இந்த அறுசமயக் கூட்டில் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்.) எந்தப் பிரிவை சார்ந்தவர்கள்? இவர்களால் நம் தமிழர் மற்றும் சைவ சமய அடையாளத்தை வளர்க்க முடியுமா? வளர்த்தார்களா?

இன்று இந்நாட்டில் வாழும் பெரும்பான்மையான இந்துத் தமிழர்கள் ஊர் தோரும் புற்றீசல்களைப் போல் தோன்றியுள்ள இந்த குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதன் பக்தகோடிகளாய் மாறியுள்ளனர்!

இது மாதிரியான இயக்கங்களில் சைவசமய கோட்பாடுகளோ தமிழ் இன மற்றும் மொழியை அடையாளப்படுத்தும் சயல்களோ கிடையாது! இது மாதிரியான இயக்கங்களில் மயக்கம் கொண்டு சேரும் இந்தத் தலைமுறையினர் நமது அடுத்த சந்ததியினருக்கு எப்படி நம் இன மொழி அடையாளத்தோடு சேர்த்து ஆன்ம கடைத்தேற்றத்திற்கு திறவுகோலாய் அமைந்துள்ள சைவசமயத்தை விட்டுச் செல்வது?

இது மாதிரியான இயக்கங்களை வழிநடத்துபவர்கள் பல இடங்களில் தமிழ் இன மற்றும் மொழி முக்கியத்துவத்தை பின்தள்ளி ஆங்கில மற்றும் சமஸ்கிருத மொழி ஆளுமையை நம் மேல் தினிக்கின்றனர்! நம்மை தமிழர் என்று சிந்திக்க விடாமல் இந்தியர் இந்தியர் என்றச் சிந்தனையை நம் மேல் தினித்து நம் பிறப்புரிமையை மறக்கச் செய்கின்றனர். நம்மைத் தமிழராய் சிந்தித்து தமிழர் அடையாளத்தில் செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தும் புல்லுருவிக் கூட்டம் நம்முடனேயே இருப்பதை அப்பாவித் தமிழர்கள் உனர்வதில்லை!

சரி நம் கதைக்கு வருவோம், இது மாதிரியான இயக்கங்களை வழிநடத்துபவர்கள் பெரும்பாலோர் தமிழர் அல்லாதவரே! இவர்களை நம்பி இன்று இந்நாட்டில் வாழும் பெரும்பான்மையான இந்துத் தமிழர்கள் ஊர் தோரும் தெருவுக்குத் தெரு தோன்றியுள்ள இந்த குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதன் பக்தகோடிகளாய் சரனடைந்துள்ளனர்! இதனால் நாமும் நம் எதிர்காலத் தலைமுறையினரும் இழக்கப்போவது நாம் தமிழர் என்ற இன அடையாளத்தையும் நம் இன மொழி அடையாளத்தோடு சேர்த்து ஆன்ம கடைத்தேற்றத்திற்கு திறவு கோலாய் அமைந்துள்ள சைவசமயத்தையும்!

நம்மை தமிழர் என்று சிந்திக்க விடாமல், ஒருங்கினைய விடாமல், அடையாளப்படுத்த விடாமல் பல காலமும் நம் மூளையை மழுங்கடித்து வைத்திருக்கும் புல்லுருவிக்கூட்டம் இப்போது தமிழர்கள் தங்களை சைவ சமயிகள் என்று சிந்திக்க விடாமல், ஒருங்கினைய விடாமல், அடையாளப்படுத்த விடாமல் தடுத்திட கிளம்பிவிட்டனர்!

– கதிர்