ஸ்ரீ முருகன் நிலையம் சரியான பாதையில் செல்லுகிறதா?

sri-muruganஸ்ரீ முருகம் நிலையம் சரியானப் பாதையில் செல்லுகிறதா என்னும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்னும் நோக்கம் நமக்கில்லை.

டாக்டர் தம்பிராஜா அவர்களும், அவர் தம் குழுவினரும், ஸ்ரீ முருகன் நிலையத்தை ஆரம்பித்த போது நிச்சயமாக அவர்களிடையே ஒரு பொது நல நோக்கம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அதுவும் அந்தக் காலக் கட்டம் இந்திய மாணவர்கள் மிகவும் அவதிப் பட்ட ஒரு நேரம். எந்த வித ஆதரவும் அவர்களுக்கு இல்லாத ஒரு நேரம். டியூஷன் வகுப்புக்கள் என்று எதுவும் இல்லாத ஒரு நேரம்.

யோசித்துப் பாருங்கள். பட்டணங்களில் படித்தவர்கள், வசதிப் படைத்தவர்கள் அவ்வளவாகப் பிரச்சனைகளை எதிர் நோக்கவில்லை. ஆனால் தோட்டப் புற மாணவர்கள், கிராமத்து மாணவர்கள்,  பட்டணங்களில் வாழ்ந்த ஏழை மாணவர்கள் இவர்களுடைய நிலை என்ன.  நிச்சயமாக அவர்கள் பிரச்சனைகளை எதிர் நோக்கவே செய்தனர்.

ஓர் ஆதரவற்ற நிலையிலிரிந்த மாணவர்களுக்கு சரியான நேரத்தில் உதவிக் கரம் நீட்டியவர்கள் டாக்டர் தம்பிராஜா குழுவினர்.

ஆனாலும் காலப் போக்கில் அனைத்தும் தடம் புரண்டுவிட்டதாகவே தொன்றுகிரது.

டாக்டர் தம்பிராஜா என்று ம.இ.கா.வின் தலைமைத்துவத்தின் உதவியை நாடினாரோ அன்றே ஸ்ரீ முருகன் நிலையத்தின் சருக்கல் ஆரம்பித்து விட்டது.

அதன் பிறகு பல்வேறு குற்றச்சாட்டுக்களை அந்த நிலையம் எதிர் நோக்கி வருகிறது.

குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களை கேலியும் கிண்டலும் செய்வது. அவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது போன்றைவைகளும் இதில் அடங்கும்.

ஆனால் இதை விட பெரிய குற்றச்சாட்டு அரசாங்க மானியங்கள் தவறாகப் பயன் படுத்தப்படுகின்றது என்பது தான்.

சாமிவேலுடன் கைக் கோர்த்தவர்கள் அனைவரும் இது போன்ற குற்றச் சாட்டுக்களை எதிர் நோக்குவது இது ஒன்றும் புதிது அல்ல! இருந்தாலும் மிகக் கற்றவர் ஒருவர், சமுதாய நோக்கம் உடைய ஒருவர், இப்படித் திசை திருப்பட்டு விட்டாரே என்று நினைக்கும் போது மனம் கவலை அடைகிறது.

ம.இ.கா.வின் உதவி இல்லாமல் இப்போது அரசாங்கத்தின் மானியங்கள் நேரடியாகவே ஸ்ரீ முருகன் நிலையதிற்குக் கொடுக்கப்படுவது  அவர்களின் சேவை மதிக்கப்படுகின்றது என்பதால் தான். நிச்சயமாக அது தொடர வேண்டும். நாமும் அதனை வரவேற்கிறோம்.

அந்த மானியங்கள் இந்திய மாணவர்கள் நலன்களுக்காக பயன் படுத்தப்படும் என்பதையும் நாம் நம்புகிறோம். ஒரு தலை சிறந்த கல்வியாளர்க் குழுவினரால் நடத்தப்படும் அதுவும் தமிழ்க்கடவுள் பெயரைக் கொண்ட ஒரு நிலையம் நேர்ப் பாதையில் செல்லும் எனவும் நம்புவோம்.

இந்த நேரத்தில் ஒரு சில ஆலோசனைக் கூறவும் கடமைப் பட்டுள்ளோம்.

எவ்வளவு காலம் தான் நீங்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?

கொஞ்சம் மாறுங்கள். நமது மாணவர்கள் பல்கலைக்கழகம் போக வேண்டும் என்பது உங்கள் நோக்கம் மட்டும் அல்ல. எங்கள் நோக்கமும் கூட. ஆனால் அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறும், அவர்கள் தெர்ந்தெடுக்கும் பாடங்களும் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா என்பதை நீங்கள் உறுதிப் படுத்த வேண்டும்.

அது மட்டுமல்ல. நீங்கள் விளம்பரப் படுத்துவது போலவே நிறைய மாணவர்கள் மெற்றிகுலேஷன் கல்வி பயில தகுதி பெறுகின்ரனர். ஆனால் அவர்களுக்கு மெற்றிக்குலேஷன் கல்வி பயில உங்களுடைய பங்கு என்ன என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

நீங்கள் பிரதமர் நஜிப்புடன் சேர்ந்து கைக் கோர்த்து செயல் பட ஆரம்பித்திருக்கிறீர்கள்.

இதை ஒரு நல்ல நேரமாக எடுத்துக் கொண்டு, ஒரு வாய்ப்பாகக் கருதி இந்திய மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள். பிரதமர் உங்களைத் தேடி வருகிறார். அதனை நல்ல முறையில் நீங்கள் பயன் படுத்த வேண்டும் என்பதே நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை.

நீங்கள் பாதை மாற வேண்டாம். உங்கள் பாதை இந்தச் சமுதாயத்தின் உயர்வாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதுவே எங்களின் வேண்டுகோள்.

– கோடிசுவரன்