ஓர் இந்து, முஸ்லிமுடன் குடும்பம் நடத்துவது குற்றமா?

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்  (சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 6  – இதற்கு முன்பு வெளியான பகுதிகள் இப்பகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன).

s3ஷியாமளாவும்  டாக்டர்  ஜெயகணேசனும்   1998ஆம்  ஆண்டு  இந்து   ஆச்சாரப்படி   திருமணம்  செய்து   கொண்டனர்.  அவர்களுக்கு   இரண்டு   பிள்ளைகள்   இருக்கிறார்கள்.  19.11.2002-இல்   ஜெயகணேஷ்   இஸ்லாத்தைத்  தழுவினார்.  25.11.2002-இல்   தம்  இரு  பிள்ளைகளையும்   இஸ்லாத்திற்கு  மாற்றிவிட்டார்.  கணவன்  மனைவிக்கு  இடையே  தகராறு   முற்றிவிட்டதால்   அவர்களுடைய  திருமணம்  முறிவு  நிலையை   அடைந்துவிட்டது.   18.12.2002-இல்   ஷியாமளா  தன்  கணவரை  விட்டுப்   பிரிந்து  செல்லும்  போது   தமது   இரு   பிள்ளைகளையும்  கூடவே   தன்  பெற்றோரின்   இல்லத்திற்குக்  கொண்டு  சென்றார்.

 

31.12.2002-இல்  தம்  இரு   பிள்ளைகளுக்கான  பாதுகாப்பு   உரிமையைக்  கோரி  உயர்   நீதிமன்றத்தில்   வழக்கைத்   தொடுத்தார்.  இந்த  வழக்கு   16.1.2003-இல்  விசாரணைக்கு  வந்தபோது     கணேஷ்  முன்னிலையாகி   தமக்கு   வழக்குரைஞரை  நியமிக்க   அவகாசம்  தேவை  என்று  விண்ணப்பித்ததை   நீதிமன்றம்   அனுமதித்து   விசாரணையை 25.2.2003-ஆம்  தேதிக்கு   ஒத்திவைத்தது.

 

ஜெயகணேசின்   வழக்குரைஞர்களின்   மீண்டுமொரு  ஒத்திவைப்பு  விண்ணப்பத்தை   ஏற்றுக்  கொண்ட  நீதிபதி  வழக்கை 17.3.2003ஆம்  தேதிக்கு   ஒத்திவைத்தார்.   இதற்கு   இடையில்  7.1.2003இல்  ஜெயகணேஷ்   சிலாங்கூர்  ஷரியா  உயர்  நீதிமன்றத்தில்  பிள்ளைகளின்   பாதுகாப்பு  உரிமையைத்  தமக்கு  வழங்க   வேண்டுமென்ற   மனுவைத்   தாக்கல்  செய்து   இருந்தார்.  இந்த   மனுவின்  நகல்   9.2.2003இல்   ஷியாமளாவுக்குக்   கொடுக்கப்பெற்றது.  27.3.2003ஆம்  தேதி  ஷியாமளா   ஷரியா  உயர்   நீதிமன்றத்தில்   முன்னிலையாகாதலால்  பிடிவாரண்ட்   பிறப்பிக்கப்  பெற்றது.  17.4.2003ஆம்  தேதி  ஷியாமளாவின்   மனுவை  உயர்  நீதிமன்றம்  விசாரித்தது.  அந்த  வழக்கில்  கூறப்பட்டத்   தீர்ப்பானது  சில  முக்கியமான  சட்டப்    பிரச்சினைகளை  வெளிக்கொணர்ந்தது.

(1)  ஜெயகணேஷ்  இஸ்லாத்தைத்  தழுவிய   போதிலும்   அவருடைய  கணவன்,   தந்தை என்ற   பொறுப்பு  இன்னும்  முற்றுப்   பெறவில்லை.

(2)  ஜெயகணேஷ்   இஸ்லாத்தைத்   தழுவிய   போதிலும்  ஷியாமளா   அவரின்  மனைவி  என்ற   அந்தஸ்தை   இன்னும்   இழந்துவிடவில்லை.

(3)  ஜெயக்ணேசனுக்குப்   பிள்ளைகளின்  பாதுகாப்பு  உரிமை  வழங்கிய   சரியா  உயர்   நீதிமன்றம்  அந்த  ஆணையை  அமலாக்கும்  அதிகாரத்தைப்   பெற்றிருக்கவில்லை,  காரணம்  ஷியாமளா  ஒரு  முஸ்லிம்  அல்லாதவர்.

இவை   மூன்றும்   நியாயமான   முடிவுகள்  என்ற   போதிலும்  நீதிபதி  கூறிய   மேலும்  சில  கருத்துக்கள்ன்   நடைமுறைக்கு   ஒத்துவராத   போல்  இருக்கின்றன.

அதில்  முக்கியமாக,  இஸ்லாத்தைத்  தழுவிய  கணவர்   மணவிலக்கு   கோரி   மனுதாக்கல்   செய்யமுடியாது.  ஆனால்   இஸ்லாத்தைத்   தழுவாத  மனைவி   மணவிலக்குக்   கோரி   மனுதாக்கல்  செய்யலாம்.  அப்படி  மனைவி  மணவிலக்கு   கோராவிட்டால்   இந்து   ஆச்சாரப்படி  செய்து   கொள்ளப்பட்ட   திருமணம்   நிலைத்திருக்கும்.  இப்படிப்பட்ட   சூழ்நிலையில்   முஸ்லிம்  அல்லாத  மனைவியும்  முஸ்லிம்   கணவரும்   இணைந்து   வாழ   முடியாது   என்பதை   உயர்  நீதிமன்றம்  கவனத்தில்  கொள்ளாதது   ஆச்சரியமே.

மலேசியாவைப்  பொறுத்தவரையில்   முஸ்லிமும்  முஸ்லிம்   அல்லாதாரும்  இணைந்து  தம்பதிகளாகக்   குடும்பம்  நடத்துவதை  அந்தச்  சமயத்தின்  இலாகா   வன்மையாக   கண்டிக்கும்,  தடுக்கிறது.  பல   நாடுகளில்,  இந்தோனேஷியா  உட்பட,   முஸ்லிமும்  முஸ்லிம்  அல்லாதார்   இணைந்து   குடும்பம்  நடத்துவதை   ஒரு   குற்றமாகக்  கருதவில்லை  என்ற   போதிலும்   இந்நாட்டில்   அப்படிப்பட்ட   நடத்தையை  இஸ்லாமிய    இலாகாவும்,  ஷரியா   நீதிமன்றமும்   ஏற்றுக்  கொள்ளாது.

 மனைவி அனுமதியின்றி மதமாற்றம் முடியுமா?

s2மேற்  குறிப்பிடப்   பெற்ற   தம்பதிகளுக்கு (ஷியாமளா  ஜெயகணேஷ்)   இடையே  மேலும்  ஒரு   வழக்கு   உயர்   நீதிமன்றத்துக்கு   வந்தது.  இந்த  வழக்கில்  தம்  இரு   பிள்ளைகளையும்   இஸ்லாத்துக்கு  தம்  அனுமதியின்றி  மதமாற்றம்   செய்தது  சட்டப்படி   செல்லாது  என்று   பிரகடனப்படுத்தப்பட   வேண்டுமென்று   கோரினார்  ஷியாமளா.  இந்த  வழக்கில்   ஜெய்கணேஷ்   ஒரு  ஆட்சேபணையை  முன்  வைத்தார்.  அதாவது  121(1A)சரத்தின்படி   உயர்  நிதிமன்றத்திற்கு   இந்த   வழக்கை  விசாரிக்க   அதிகாரம்   கிடையாது, சஷிரியா நீதிமன்றத்துக்கு  மட்டுமே  அந்த  அதிகாரம்   உண்டு  என்றார்.

இந்த  ஆட்சேபணையை  ஏற்றுக்  கொண்டு  வழக்கைத்  தள்ளுபடி  செய்தார்  நீதிபதி. இந்த  முடிவுக்கான   காரணத்தைத்  தந்த  நீதிபதி 121(1A)  சரத்து  மதச்சார்பற்ற   உயர்  நீதிமன்றத்தின்  ஷரியா  நிதிமன்றங்களுக்கு  உட்பட்ட  விசயங்களில்  தலையிட   அதிகாரம்   இல்லை என்ற   காரணத்தைக்   காட்டியது.  எனவே,  அந்த இரு  பிள்ளைகளும்  முறையாக   இஸ்லாத்துக்கு   மாற்றப்பட்டார்களா  என்பதை  விசாரிக்கும்  அதிகாரமும்,  ஆற்றலும் ஷரியா   நீதிமன்றத்திற்கு  மட்டுமே  உண்டு  என்றார்.

மேலும்,  இஸ்லாத்தைச்  சார்ந்த   கணவர்   தன்னிச்சையாக  இரு  பிள்ளைகளையும்   இஸ்லாத்துக்கு  மதம்  மாற்றம்   செய்யலாம்.   அவருடைய   மனைவியின்   அனுமதி   தேவை   இல்லை  என்றும்    தீர்ப்பளித்தார்.  இந்த   வழக்கில்   தீர்ப்பளித்த   நீதிபதி   ஷியாமளா   ஷரியா   நீதிமன்றத்திற்குப்    போக   முடியாது    என்பதை   ஒப்புக்கொண்டதோடு,  கூட்டரசு   வட்டார   இஸ்லாமிய   மன்றத்தின்   துணையை  நாடும்படி   ஆலோசனை   வழங்கினார்   என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றம் கை கழுவியது

s4முஸ்லிம்  அல்லாத   பெற்றோரின்   பரிதாபமான   நிலைக்கு   உயர்  நீதிமன்றங்கள்   எந்தப்  பரிகாரமும்    வழங்க   முற்படவில்லை  என்பதோடு   சில   நீதிபதிகளும்   முன்னாள்   மலாயா   தலைமை   நீதிபதி   உட்பட   இந்தப்  பிரச்சினைக்குப்   நாடாளுமன்றம்தான்   தீர்வு காண   வேண்டுமென   கருத்து  தெரிவித்தனர்.  இந்த  நிலை   முஸ்லிம்  அல்லாதாருக்கு   ஒரு  சட்ட   நெருக்கடியை   ஏற்படுத்தி  அவர்களைத்  தீராத   துயரத்தில்   ஆழ்த்திவிட்டிருப்பதை   எல்லோரும்  உணர்ந்த  உண்மையாகும்.

சமீபத்தில்   ஒரு  அம்மையார் (ஞோஞ்யா – nonya)  தமது  அடையாளக்  கார்டில்   இஸ்லாத்தைச்  சேர்ந்தவர்  என்று   குறிப்பிட்டிருந்தது.  அவர்   இறந்ததும்  இஸ்லாமிய   இலாகா   ஷரியா  நீதிமன்றத்தில்  மனு  தாக்கல்   செய்து   இறந்த   அந்த   அம்மையாரின்  உண்மையான   மதம்  என்ன  என்பதை   உறுதிப்படுத்தும்படி   வேண்டியது.  ஷரியா   நீதிமன்றம்

அப்துல்லா படாவியின் கருத்து

1m badawiஅந்த  அம்மையார்   முஸ்லிம்  அல்ல  என்று  தீர்ப்பளித்தது.  அந்த  அம்மையாரின்   பிள்ளைகளின்   சாட்சியத்தை   வைத்து  முஸ்லிம்  அல்லாதார்  ஷரியா  மன்றத்துக்குப்   போகலாம் என்று  பரவலாகச்   சொல்லப்பட்டது.  முன்னாள்  பிரதமர்   டத்தோ  ஸ்ரீ  அப்துல்லா  படாவியும்  (இப்போது  துன் அப்துல்லா  படாவி) இந்தக்   கருத்தை  வெளியிட்டார்.  இது  ஆறுதல் தருவதாக   இருப்பினும்   பெரும்  மகிழ்வுக்கு  உரிய   செய்தியாக  கருத   முடியாது.

முஸ்லிம்   அல்லாதார்   ஷரியா   நீதிமன்றத்தில்  சாட்சியம்    வழங்கவேண்டுமானால்   சத்திய   பிரமாணம்  செய்ய   வேண்டும்.   கிறிஸ்தவர்கள்   விவிலியத்தின் (Bible) மீது  சத்தியம்  செய்யலாம்.  இந்துக்கள்   பகவத்  கீதயைப்   பயன்படுத்தலாம்.  இந்த  சமய   நூல்களை  ஷரியா   நீதிமன்றம்   ஏற்றுக்கொள்ளுமா  என்பது   சந்தேகமே.  இது   சிந்திக்க   வேண்டிய   விசயம்.

– தொடரும்..

பகுதி 1  ; பகுதி 2 ; பகுதி 3 ; பகுதி 4  ; பகுதி 5