கல்வியில் இந்தியர்களின் நிலை மோசமாகியுள்ளது

கா. ஆறுமுகம். செம்பருத்தி.காம்

aru eduமலேசியாவில் வாழும் மூன்று முக்கிய இனங்களில் இந்தியர்கள்தான் பலவீனமானவர்கள். அவர்களின் வாழ்வாதார உருமாற்றத்திற்குக் கல்வியால்   முக்கிய பங்காற்ற இயலும். இந்த நிலைபாட்டுடன் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பல வகையான திட்டங்களில் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளூம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நமது வளர்ச்சி மற்ற இனங்களுடன் ஒப்பிடுகையில் மோசமாகியுள்ளது. அதிலும் பெண்களின் கல்வி நிலை சரிந்துள்ளது.

மலாயா பல்கலைக்கழகத்தின் புல்பிரைட் வருகை பேராசிரியர் சார்ல்ஸ் ஹெர்ஸ்மன் மற்றும் இணை பேராசிரியர் இரா.தில்லைநாதன் அவர்களின் ஆய்வுகள் இந்தியர்கள் நிலை மோசமடைந்து வருவதைக் காட்டுகின்றன.

கடந்த மாதம் மலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை ஏற்பாடு செய்த சார்ல்ஸ் ஹெர்ஸ்மனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை சொற்பொழிவின் போது இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டன.

Charles Hirschmanஹெர்ஸ்மன் மேற்கொண்ட ஆய்வில் 1902-ஆம் ஆண்டுமுதல் 1984-ஆம் ஆண்டுவரை பிறந்தவர்கள் 1970 முதல் 2000 ஆண்டுவரையில் தங்களது கல்வியில் எந்த நிலைவரை எட்டியுள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கினார். அவரது முழு ஆய்வின் விபரத்தைக் காண  இங்கே சொடுக்கவும். (Hirschman Ethnic Imequality in Education). இதன் முக்கியத்துவம் என்னவென்றால் புதிய பொருளாதார கொள்கையின் பூமிபுத்திரவுக்கான கல்வி இலக்குகள் 2000 ஆண்டிலேயே பூர்த்தி அடைந்து விட்டது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. அது இன்றும் தொடர்வது அந்த கொள்கையை தவறாக பயன் படுத்துவதற்கு ஒப்பாகும்.         

அவரது ஆய்வு மூன்றாம் படிவம், ஐந்தாம் படிவம், உயர் கல்விவரை கல்வியை முடித்தவர்கள் எவ்வகையில் மலேசியாவின் வேலை வாய்ப்புகளை ஈடு செய்துள்ளனர் என்பதை காட்டியது.

2000-ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 28 விழுக்காட்டினர் ஆரம்ப கல்வியைக் கற்ற நிலையிலும், 20 விழுக்காட்டினர் மூன்றாம் படிவம் வரையிலும், 29 விழுக்காட்டினர் ஐந்தாம் படிவம் வரையிலும், 14 விழுக்காட்டினர் உயர் கல்வி வரையிலும், 9 விழுக்காட்டினர் பள்ளி செல்லாத நிலையிலும் இருந்தனர்.

1970-ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம் வரையிலான கல்வி நிலையை 2000-ஆம் ஆண்டு ஐந்தாம் படிவ வரையிலான கல்வி நிலையுடன் ஒப்பீடு செய்தால் மலாய்க்காரர்களின் வளர்ச்சி 25 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காட்டிற்கும், சீனர்களின் வளர்ச்சி 25 விழுக்காட்டிலிருந்து 45 விழுக்காட்டிற்கும் இந்தியர்களின் வளர்ச்சி 25 விழுக்காட்டிலிருந்து 41  விழுக்காட்டிற்கும் உயர்ந்துள்ளது. இனங்களுக்கிடையிலான வளர்ச்சியைக் கணிக்கும் போது இந்தியர்கள் மலாய்க்காரர்களை விட 2.8 மடங்கும், சீனர்களைவிட 1.25 மடங்கும் பின்தங்கியுள்ளனர்.

இதன் தாக்கம் இனங்களுக்கிடையிலான வேலை வாய்ப்புகளில் தாக்கத்தை உண்டு பண்ணுவதாக ஹிரிஸ்மன் கூறுகிறார். அதோடு ஐந்தாம் படிவத்திற்குப் பிறகு சீனர்களின் தேவைக்கேற்றவாறு மேல் நிலைக்கல்வியும் தொழில் திறன் கல்வியும் பிரச்சனைகள் அற்ற நிலையில் கிடைக்கின்றன. ஆனால், அது போன்ற வாய்ப்புகள் அற்ற நிலையில் இந்தியர்கள் இருப்பதால், நாடு வளர்ச்சியடைந்த நிலையிலும் பொருளாதார பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்றார்.

நாட்டில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கும் கல்வி தேர்ச்சிக்கும் நெருங்கிய உடன்பாடு இருப்பதால், குறைவான கல்வி தகுதி குறைந்த சம்பள வேலைகளுக்கே வழிவிடுகிறது என்றார். இதில் அதிகமான பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பது இந்தியர்கள் ஆவர். அதிலும் இந்தியப் பெண்களின் தரமான வேலை வாய்ப்புகள் மற்ற இனப்பெண்களை விட சரிந்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு காரணம் மலாய்க்காரப் பெண்களின் துரிதமான வளர்ச்சி என்கிறார்.

Thillaiஇது சார்பாக கருத்துரைத்த பொருளாதார நிபுணரும் தற்போது மலாயா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியருமான  இரா.தில்லைநாதன் அரசாங்கத்தின் புதிய பொருளாதார கொள்கையின் தாக்கம் தற்போது பலத்த ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியுள்ளது என்றார். பூமிபுத்திராக்கள் தற்போது தங்களது பின்னடைவு நிலையைச் சரிசெய்து இருப்பதால் அரசாங்கம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இந்திய சமூகம் பலதரப்பட்ட கல்வி மேம்பாடு சார்புடைய வகையில் சமூக இயக்கங்கள் வழி திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், அவை நாட்டின் நீரோட்ட வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இயலாது. அரசாங்கம் கல்வியைத் தனியார்  மயப்படுத்தும்  வழிமுறை இந்தியர்களின் கல்வி அடைவை மேலும் பலவீனமாக்கும். அதேவேளையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய அரசாங்கம் தொடர்ந்து கொண்டு வந்து குவிக்கும் அயல் நாட்டு தொழிலாளர் இறக்குமதி கொள்கை, மலேசியாவில் ஒரு தரமான சம்பள கொள்கை உருவாகுவதற்குச் சவாலாகவே இருக்கும்.

இந்திய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் இதற்கு எப்படியான மாற்றுவகை திட்டங்களை முன்னெடுப்பது என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். எதுவாயினும், அரசியல் தீர்வு வழிதான் நமது நிலையைச் சீரமைக்க முடியும்.