கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்
13-ஆம் பொதுத்தேர்தல் முடிந்து நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது. 5.5.2013- இல் இருந்து இதுவரை நாட்டு நடப்பு, நாட்டின் அரசியல் எந்தத் திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நிர்ணயிப்பது சிரமமாகவே இருக்கும். இதற்குக் காரணம் என்னவெனில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்குத் திருப்தி இல்லாத நிலை; புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவோம் என்று உரக்கப் பேசிய மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பு பூரணமாகாமல் போனதால் எழுந்திருக்கும் ஏமாற்றம், விரசம் இவை யாவும் அரசியலில் ஏற்படுவது இயல்பே.
மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரையில் அதன் பங்குதாரர்களில் மக்கள் செயல்கட்சி அதிகபட்ச தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பது பலவிதமான வியாக்கினங்களுக்கு வழிவகுத்தாலும் அதில் இனவாரியாகப் பிரித்துப் பார்ப்பது மலேசிய அரசியலாகும், பல்லின நல்லெண்ணத்துக்கும் விவேகமான அரசியலாகக் கருத இயலாது. அப்படி நினைத்துச் செயல்படுவது ஆத்திரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துமே அல்லாது முதிர்வான அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்தாது.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சில நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அம்னோ தமது தனித்தப் பெரும்பான்மையைக் காட்டி தம்மால் எதையும் செய்ய முடியும், நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தோடு நடந்துகொள்வது போல் இருக்கிறது என்ற கருத்தும் பரவுவதை உதாசீனப்படுத்த முடியாது.
அதே வேளையில் அரசியல் கட்சிகளின் தேர்தல்கள் நடக்கவிருப்பதால் எந்த ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் நடவடிக்கையிலும் இறங்காமல் தவிர்க்கும் முறையை அம்னோவும், பாஸ் கட்சியும் கொண்டிருக்குமானால் அதுவும் விசித்திரமல்ல.
நாட்டின் பொதுத் தேர்தல் எந்தக் கட்சி நாட்டை ஆளவேண்டும் என்பதை நிர்ணயிக்கும். அரசியல் கட்சிகளின் தேர்தல்களை யார், யார் கட்சிகளின் தலைமையை ஏற்று அடுத்த ஐந்து ஆண்டுகாலத்தில் எப்படிப்பட்ட அணுகுமுறை அமைந்திருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும். எனவே, அம்னோ, மசீச, மஇகா போன்ற ஆளும் கட்சியின் பங்காளிகள் என்றாலும் கட்சி உறுப்பினர்கள் எப்படிப்பட்டத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதே நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும்.
கட்சித் தேர்தல்களும் சுவாரஸ்யமான செய்திகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. மஇகாவில் கட்சித் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. பொதுத் தேர்தலில் இனவாரி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் பார்த்தோம். மஇகா அரசியலில் ஜாதிப்பிரச்சினையில் ஆரம்பித்து “பஞ்சாபி”, “தமிழர்” என்று பிரித்துக் காட்டும் அரசியல் அணுகுமுறை அக்கட்சியின் ஆரம்பகால வரலற்றில் உதாசீனம் செய்வதாகும்.
ஜான்தீவி , லெட்சுமி ஆதிநாகப்பன் ஆகியோர் மலாயா இந்தியர் காங்கிரஸை ஆரம்பித்தார்கள் – மறுக்க முடியாது. ஜான்தீவிக்குப் பிறகு மஇகாவின் தலைமைத்துவத்தை ஏற்றார் பூத்சிங். துன் சம்பந்தன் மஇகாவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு முன் அக்கட்சியை வழிநடத்திச் சென்றவர் கே.எஸ்.தேவாசர். அவரும் பஞ்சாபியே எனவே, மொழிவாரியாகப் பார்த்து ஒருவகை வேறுபாட்டை கற்பிக்க முயலுவது தமிழக அரசியல் பாரம்பரியத்தை நினைவுறுத்துகிறது. எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வராக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது மு.கருணாநிதி அவரை மலையாளி என்று விவரித்ததும், அதற்கு முன் ராஜாஜி (ராஜ கோபாலாச்சாரியார்) தமிழக முதல்வராக தெரிவு செய்யப்பட்டபோது “அவர் பிராமணர்” என்று சொல்லப்பட்டது. இப்போது ஒரு பிராமணப் பெண் முதலமைச்சராக இருப்பதை, தமிழர்களுக்குத் தமிழர் உணர்வு இல்லை என்று சில தமிழ் நாட்டு அரசியல் இயக்கங்கள் விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல. இப்படிப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் இனதுவேஷ மனப்பான்மையை வளர்க்கவல்லது ஆனால் இன்றைய உலகில் அது ஏற்புடைய அரசியல் நாகரிகமாகக் கருதுவது அரசியல் பக்குவமின்மையை வெளிப்படுத்துகிறது.
அடுத்து, ஜனநாயக செயல்கட்சி தன் உள்கட்சி தகராற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டு அமைப்புகளின் பதிவதிகாரியின் உத்தரவுபடி கட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதைப் பலவிதமாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. முதலில், அக்கட்சியின் நிலைபாட்டை கவனிக்க வேண்டும். முதலில் அமைப்புகளின் பதிவதிகாரியின் முடிவு சரிதானா என்பதை கண்டறிய வேண்டுமானால் அந்த முடிவிற்கான காரணத்தை பதிவதிகாரி வெளிப்படுத்தவேண்டும். அது சட்டப்படி ஏற்புடையதாக இருக்கலாம் அல்லது மாறாகவும் இருக்கலாம். நீதிமன்றத்துக்கு கட்சி சிக்கலைக் கொண்டுச் செல்லும்போது தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது. இழுபறி நிலை நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் மனக்குழப்பம் ஏற்படலாம். இது கட்சிக்கும் நல்லதல்ல. அதன் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. அதே சமயத்தில் அரசியல் கட்சிகள் செய்யும் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகக் கூடாது என்ற சட்டமும் இருக்கிறது. இந்த சட்டப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணாமல் இருப்பது முன்னாள் பிரதமர் துன் மஹாதீர் விட்டுச் சென்ற அரசியல் பாரம்பரியமாகும்.
முதலில் பதிவதிகாரியின் முடிவைத் தெரிந்து நீதிமன்றம் செல்ல தயாரான ஜசெக அதன் முடிவை மாற்றிக்கொண்டு கட்சித் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டுவிட்டது. இதை, சிலர் கடந்த டிசம்பர் 2012 -இல் நடந்த கட்சித் தேர்தலில் முறை கேடுகள் இருந்ததை ஒப்புக்கொள்வதாகும் என்ற வியாக்கியானம் அர்த்தமல்லாததாகும். பதிவதிகாரியின் முடிவைப் புறக்கணித்துவிட்டால் கட்சியின் கதி என்ன? அதுவே முக்கியம். பதிவதிகாரி மட்டுமல்ல, கட்சியின் உறுப்பினர்கள் சிறப்புப் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பித்தால் அதை நடத்தும் பொறுப்பு கட்சிக்கு உண்டு. எனவே இதில் கவுரவப்பிரச்சினை ஏதும் இல்லை.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மன்னர்களைவிட தத்துவஞானிகளே உயர்ந்தவர்கள் என்று ஒரு தத்துவஞானி சொன்னாராம். அதுமட்டுமல்ல, மன்னருக்கு அடிபணிந்து போக வேண்டிய கட்டாயம் தத்துவஞானிகளுக்கு இல்லை; காரணம் தத்துவஞானிகள் ஆய்ந்து பார்த்து முடிவு சொல்வார்கள் ; மன்னர்கள் அப்படி இல்லை. உணர்சிவசப்பட்டு தீர்ப்பு வழங்குவர் என்றாராம்.
இது மன்னரின் காதுகளுக்கு எட்டிவிட்டது. சபையைக் கூட்டினார். தத்துவஞானி சபைக்குக் கொண்டுவரப்பட்டதும் அவர் நேரே மன்னரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டாராம். மன்னருக்கு மகிழ்ச்சி. கூடியிருந்த மற்ற தத்துவ ஞானிகளுக்கு கோபம். மன்னிப்பு கேட்டவரைத் திட்டி, “நீ தத்துவஞானிகளின் பெருமைக்கு களங்கம் விளைவித்துவிட்டாய்”. என்றார்களாம். அதற்கு அவர் “நான் என்ன செய்வது? மன்னனுக்கு கால்களில் தானே மூளை இருக்கிறது. அதனால் அவர் காலில் விழுந்து சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்” என்றாராம்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அதிகாரத்தைப் பிடிக்க நினைப்பவர்களுக்கும், பிறரைப் பற்றி விமர்சனம் செய்வோருக்கும் மூளை எங்கே இருக்கிறது – தலை மண்டலத்திலா அல்லது கால்களிலா? என்ற கேள்வியை மக்கள் கேட்கத் தயங்கமாட்டார்கள்.
அரசியல் கட்சிகளின், தலைமைத்துவத்தை உறுதிப் படுத்தும் உட்கட்சித் தேர்தல்கள் முடியும்வரை அரசு யாதொரு ஆக்ககரமான செயல்திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் என்று சொல்லமுடியாது. மௌனத்தைக் காத்து, ஒருவகை அரசியல் அமைதியைக் காணும் தலைவர்களைத்தான் நாம் பார்க்கிறோம். எனவே 5.5.2013இல் இருந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி செய்தவை, செய்யாதவை முக்கியமல்ல. கட்சி தேர்தலுக்குப் பிறகு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்ன செய்யும்? எதைச் செய்யாது? அதுவே முக்கியம். அரசியல் மூளை எங்கே இருக்கும்- தலை மண்டலத்திலா? கால்களிலா? பொறுத்திருந்து பார்ப்போம்.
migavum arthamulla alasal
நாம் என்ன சொன்னாலும் இங்கு அவன்கள் தான் எல்லாமே. நம் மக்கள் எக்காலத்திலும் ஒன்று பட மாட்டார்கள். காலம்தொட்டு நாம் அடிமைகள் தான் — நம்மை விற்று விட்டான்கள். ஏன் நம்மவர்கள் இவ்வளவு கீழ்த்தரமானவர்களாக இருக்கின்றனர்? மலாய்க்காரனையும் சீனரையும் பார்த்தாவது திருந்த வேண்டாமா?
அம்னோவும் பாசும் இணைந்து ஒரே கட்சியாகிவிட்டது என்று சொல்லுங்கள். நம்புவேன். ஆனால் இந்த ம.இ.கா இந்தியர்களை கரையேற்றிவிடும் என்றால் எப்படி நம்புவது? MIED யையும் AIMST யையும் ம.இ.காவின் சொத்து என்று டத்தோ சிரி உத்தாமாவை பகிரங்கமாக அறிவிக்கச் சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்