முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவலை மறுஆய்வு நிலுவையில் உள்ளதால் ஒத்திவைக்க வேண்டும் என்ற சட்டத்துறைத் தலைவரின் (AGC) பரிந்துரையைத் தொடர்ந்து, நஜீப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், நிபந்தனை மன்னிப்பு உத்தரவு தெளிவானது, வெளிப்படையானது மற்றும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாதது என்றும், முன்னாள் பிரதமர் தொடர்பான வேறு எந்த வழக்குகளுடனும் அதற்குத் தொடர்பில்லை என்றும் சுல்தான் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதன் விளக்கத்தில் எந்தக் குழப்பத்திற்கும் இடமளிக்கக் கூடாது; மேலும், ஒப்புதல் அளிக்கப்பட்ட முடிவைச் செயல்படுத்துவதில் நீண்டகால நிச்சயமற்ற தன்மையும் இருக்கக் கூடாது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிபந்தனை மன்னிப்பு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து முன்வைக்கப்படும் எந்தவொரு வாதமும் மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஆணையை மீறுவதற்குச் சமமாகும், என்று அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பு வழங்கும் மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரம், அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்ப மதிக்கப்பட வேண்டும் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
நிபந்தனை மன்னிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் கூட்டரசு பிரதேச அமைச்சர் மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு, மாமன்னருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியதையும் அரண்மனை சுட்டிக்காட்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நஜீப் 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க மாமன்னர் ஒப்புக்கொண்டார், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிபந்தனை மன்னிப்பு மற்றும் விடுதலை உத்தரவு ஆகியவை மறுஆய்வு செய்யப்படும் வரை நஜீப்பின் வீட்டுக் காவலை ஒத்திவைக்க வேண்டும் என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் நேற்று பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரச மன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய “சிக்கலான சட்டக் கேள்விகள் இந்த இரண்டு விவகாரங்களிலும் அடங்கியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
வீட்டுக் காவலுக்குச் செல்வதற்கான நிபந்தனையான 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியது, தண்டனையின் ஒரு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்துள்ளதாகச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது. சிறைத் தண்டனையானது 2028 ஆகஸ்ட் 23 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்த விளக்கத்தின் கீழ், வீட்டுக் காவல் என்பது சிறைத் தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக, எஞ்சிய சிறைத் தண்டனையைக் கழிப்பதற்கான ஒரு மாற்று வழியாக அல்லது இடமாக மட்டுமே அமையும் என்று அது தெரிவித்துள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்துவது மன்னிப்பு முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கான ஒரு நிபந்தனையாக இருந்ததாகவும், அதன் விளைவாக எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் (SRC International) வழக்கில் சிறைத் தண்டனை உட்பட முழுத் தண்டனையும் நிறைவடைந்ததாகக் கருதப்படும் என்ற மற்றொரு சட்ட அம்சமும் இதில் உள்ளதாகச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.
அபராதத் தொகை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அபராதம் செலுத்தியதற்கான விடுதலை உத்தரவின்’ சட்ட ரீதியான தாக்கங்களே இரண்டாவது விவகாரம் என்று அது தெரிவித்துள்ளது.
நஜீப்பை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த உத்தரவு பணிக்கும் அதே வேளையில், அவரது எஞ்சிய தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறது.
2028-ஆம் ஆண்டில் தொடங்கவுள்ள 1எம்.டி.பி வழக்கின் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனையிலும் இந்த வீட்டுக் காவல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.
-fmt
























