திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக, “இராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற திரைப்படத்துக்கான பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
அறிமுக இயக்குநர் ஆர்.எஸ். அமுதேசுவர் இயக்கத்தில்,கவிஞர் சினேகன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்துக்கான பூஜை, கரூர் கல்யாண பசுபதீசுவரர்கோவில் அருகிலுள்ள கருவூரார் சந்நிதி அருகே புதன்கிழமை நடைபெற்றது.
பட பூஜையைத் தொடக்கிவைத்து, “ஊசிமணி பாசிமணி என் உள்ளத்திலே பாசமணி’ எனத் தொடங்கும் பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்த இளையராஜா தெரிவித்தது:
திரைப்படத்துக்கான பாடலுக்கு இசையமைக்கும் பணியை பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்வது புதுமையாக இருக்கிறது. சிலர் இந்த இயக்குநர், இசையமைப்பாளர் இருக்கும் கூட்டணி வெற்றி பெறும், அந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்பார்கள். எனக்கு கூட்டணி கிடையாது; எப்போதும் தனி ஆள்தான், எதற்கும் கவலைப்பட மாட்டேன் என்றார் இளையராஜா.
படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான கவிஞர் சினேகன் பேசியது:
இந்தப் படத்துக்கான பூஜையை கரூரில் தொடங்கக் காரணம், ராஜராஜசோழனின் குரு கருவூரார். அவருடைய சன்னதி அமைந்துள்ள பகுதியில் பட பூஜையைத் தொடங்குவது என்பது பொருத்தமே என்றார் சினேகன்.
திரைப்பட இயக்குநர் அமுதேசுவர் கூறியது:
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தஞ்சாவூர்,திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும். பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதால் இந்தப் படத்தை எப்போது திரையிடுவது என்பது குறித்து முடிவு செய்யவில்லை. படத்தில் நடிகை சினேகா, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோரும் இதில் நடிக்க உள்ளனர் என்றார்.