‘ஜீவி-2’

இந்தப் படத்தில் வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘ஜீவி’ படத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும், இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்து கொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் முதல் பாகத்தின் கதை.

இந்தத் தொடர்பியல் விதி அத்துடன் முடிந்துவிட்டதா… இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.

மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா…? அதன் மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின…? அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதைச் சரி செய்தாரா…? என்பதுதான் இந்த ‘ஜீவி-2’ படத்தின் கதை.

முதல் பாகத்தில் குடியிருக்கும் வீட்டிலேயே நகைகளைத் திருடி அந்த நகைகளும் கடைசியில் கிடைக்காமல் போக… நகைகள் காணாமல் போனதால் திருமணம் நின்று போன அதே வீட்டுப் பொண்ணான நாயகியை நாயகன் வெற்றி, பாவமன்னிப்பு கேட்பதுபோலத் திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த 2-ம் பாகம் நாயகனின் இல்வாழ்க்கையில் 10 மாதங்கள் முடிந்த பின்பு தொடர்கிறது. இப்போது வெற்றி, ஷேர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். திடீரென்று கருணாகரனை திரும்பவும் சந்திக்கிறார். கருணாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து காட்டுகிறார் வெற்றி.

நாயகி அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்காக 8 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதனால் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க நினைக்கும் வெற்றி கையில் இருக்கும் 1 லட்சம் ரூபாயை வைத்துச் செகண்ட் ஹேண்ட்டில் கார் வாங்கி ஓட்டுகிறார். அதே நேரம் கருணாகரனுக்கு ஒரு டீக்கடையை வைத்துத் தருகிறார் வெற்றி.

ஆனால் விதி விளையாடத் துவங்க… அஸ்வினியின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப் போவதாகத் தாய் மாமனான மைம் கோபி வந்து கதறுகிறார். இந்த வீட்டுப் பத்திரத்தை வைத்து அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்கான பணத்தைக் கடனாக வாங்க நினைத்த வெற்றிக்கு இது பேரிடியாகிறது.

கார் திடீரென்று மக்கர் செய்ய அதைச் சரி செய்ய முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தேவையாகிறது. அதே நேரம் வெற்றியின் அக்கா மகளுக்கு உடல் நலம் இல்லாமல் போகிறது. இந்தப் பிரச்சினைகளால் வெற்றி நிம்மதி இழந்திருக்கும் சூழலில், இவர்களுடன் கூட்டணி சேர்கிறார் முபாஷிர்.

பெரிய பணக்கார வீ்ட்டுப் பையனான முபாஷிரின் வீட்டுக்குச் செல்லும் வெற்றியும், கருணாகரனும் வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இப்போது தனக்கிருக்கும் பணப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமெனில் முதல் பாகத்தில் செய்தது போலவே கொள்ளையடித்தால்தான் முடியும் என்று நம்புகிறார் வெற்றி.

கருணாகரனும் இதற்கு ஒத்துழைக்க… முபாஷிரின் வீட்டிலேயே பணம், நகைகளைக் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார் வெற்றி. இந்தக் கொள்ளை முயற்சி நடந்ததா இல்லையா… இதன் பின் என்னவானது… முதல் பாகம் போலவே இதிலும் தப்பித்தாரா இ்ல்லையா என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதை.

இப்படி தொடர்பியல்… விதி, கர்மா, முன்வினைப் பயன் என்று பல விஷயங்களையும் தொடர் கதையாக நம் காதில் ஓதி, ஓதி… “என்னதான்யா சொல்ல வர்றீங்க…?” என்று ஒரு கட்டத்தில் நமக்கு அலுப்பைக் கூட்டிவிட்டார் இயக்குநர்.