நடிகர் : ஜெய்
நடிகை: மீனாட்சி கோவிந்தராஜன்
இயக்குனர்: சுசீந்திரன்
இசை: ஜெய்
ஓளிப்பதிவு: வேல்ராஜ்
திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாயகி மீனாட்சி இவருக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது. தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார்.
இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் நின்று போன திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் அமைதியான கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஜெய்யின் தோற்றம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை நியாபகப்படுத்துகிறது. நாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அகன்ஷா சிங் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை காட்சிகளில் சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார் பாலசரவணன். ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுசீந்திரன். இவர் தானா இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்ற ஆச்சரியம் பார்வையாளர்களுக்கு எழுகிறது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பலமுறை பார்த்த பழிவாங்கும் கதையை தூசி தட்டி கொடுத்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கி இருக்கும் ஜெய்க்கு பாராட்டுகள். ஆனால், இவரது இசையில் பாடல்கள் பெரியதாக கவரவில்லை. அஜிஸின் பின்னணி இசை படத்திற்கு பலம். திண்டுக்கல் சுற்றுவட்டார கிராம அழகை தனக்கே உரிய பாணியில் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
மொத்தத்தில் ‘வீரபாண்டியபுரம்’ வீரம் குறைவு.