நடிகர்: அஸ்வின் குமார் நடிகை: தேஜு அஸ்வினி டைரக்ஷன்: ஹரிஹரன் இசை : விவேக் – மெர்வின் ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்முக்கோண காதல் கதையை புதுமாதிரியாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர். காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.
ரேடியோ ஜாக்கி வேலை பார்க்கும் அஸ்வினுக்கு பெண் எழுத்தாளர் அவந்திகாவை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பேசி முடிக்கிறார்கள். கணவராக வருபவருக்கு ஏற்கனவே காதலித்து தோற்ற அனுபவம் இருந்தால் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வார் என்பது அவந்திகாவின் நம்பிக்கை.
அவரை சந்தோஷப்படுத்த தானும் காதலித்து தோற்றதாக அஸ்வின் பொய் சொல்கிறார். போலியாக தேஜு அஸ்வினியை காதலியாக தயார் செய்து அவந்திகா முன் நிறுத்தவும் செய்கிறார். தேஜு அஸ்வினியும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் தாத்தாவின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க அஸ்வினை காதலிப்பதாக பொய் சொல்கிறார். பிறகு தேஜ் அஸ்வினியை அஸ்வின் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் அமைய அவர் மீது நிஜமாகவே காதல் வயப்படுகிறார். இன்னொரு புறம் அவந்திகாவுடன் திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கிறது.
அஸ்வின் யாரை திருமணம் செய்தார் என்பது கிளைமாக்ஸ். அஸ்வினுக்கு இரண்டு காதலிகள் மத்தியில் சிக்கி தவிக்கும் கனமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்து இருக்கிறார். காதலிகளாக வரும் அவந்திகா, தேஜு அஸ்வினி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். அவந்திகா சென்டி மெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். தேஜு அஸ்வினி காதல் தவிப்புகளை முகத்தில் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். புகழ், லொள்ளுசபா சாமிநாதன் சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். நீளமான வசனங்கள் படத்துக்கு வேகத்தடை போடுகின்றன.
முக்கோண காதல் கதையை புதுமாதிரியாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஹரிகரன். விவேக், மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும் நேர்த்தியாக உள்ளது.
Dailythanthi