நடிகர்கள்:விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா
இயக்கம்: மணிரத்னம்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்குத் திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். நாவலைப் படிக்கும்போது ஏற்படும் அதே அனுபவம் படத்தைப் பார்க்கும்போதும் ஏற்படுகிறது.
படத்தின் துவக்கம் சற்று மெதுவாக இருக்கிறது. முடி இளவரசர் ஆதித்த கரிகாலன்(விக்ரம்) தன் நண்பன் வந்தியத்தேவன்(கார்த்தி) மூலம் சோழ அரசு ஆபத்தில் இருக்கிறது என்று தன் தந்தையும், மன்னருமான சுந்தர சோழர்(பிரகாஷ் ராஜ்), தங்கை குந்தவை(த்ரிஷா) ஆகியோருக்கு தகவல் அனுப்புகிறார்.
பெரிய பழுவேட்டரையர்(சரத்குமார்), சின்னப் பழுவேட்டரையர்(பார்த்திபன்), அரசின் நிதி அமைச்சர், தளபதி, நந்தினி(ஐஸ்வர்யா ராய்), கரிகாலனின் முன்னாள் காதலி மற்றும் பெரிய பழுவேட்டரையரின் மனைவி உள்ளிட்டோர் அரசைக் கவிழ்க்க திட்டமிடுகிறார்கள்.
பல கதாபாத்திரங்கள், வரலாற்றைத் தெரிவிக்கும் அந்தக் காட்சிகள் சற்று மெதுவாகத் தெரிகிறது. குறுகிய நேரத்தில் நிறைய காட்டுவது போன்ற உணர்வு சில சமயம் ஏற்படுகிறது. நாவலைப் படிக்காதவர்களுக்குத் திரையில் வருவதை புரிந்து கொள்ள கஷ்டம். அடுத்தடுத்து கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.
ஒரு கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்வதற்குள் அடுத்த கதாபாத்திரம் வந்துவிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு படம் அழகாக நகர்கிறது. இடைவேளை வருவதற்குள் கதையுடன் ஒன்றிவிடுகிறோம். கரிகாலனின் தம்பி அருண்மொழி வர்மன்(ஜெயம் ரவி) இலங்கைக்கு சென்று அந்நாட்டு அரசனை சிறை பிடிக்க முயலும்போது படம் வேகம் எடுக்கிறது. அதிலிருந்து கடைசி வரை அந்த வேகம் குறையவே இல்லை.
கொலை செய்யப்பட்ட பாண்டிய மன்னனின் பாதுகாவலர்கள் அருண்மொழியை கொலை செய்ய வரும்போது தியேட்டரில் இருக்கும் அனைவரும் நகத்தைக் கடிக்கும் அளவுக்கு இருக்கிறது. இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஏங்க வைக்கும்படி முதல் பாகத்தை முடித்திருக்கிறார் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன்- மனதில் இடம்பிடித்துவிட்டார்