இந்தப் படத்தை அமீர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்துள்ளன.
படத்தில் அமீர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங், மானவ் விஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளது.
அமீர்கான் என்னும் லால் சிங் சத்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வாழ்கிறார். இவரது அப்பா, தாத்தா, பாட்டன் என்று அனைவருமே ராணுவ வீரர்கள். அப்பா பங்களாதேஷ் போரிலும், தாத்தா 2-ம் உலகப் போரிலும், பாட்டன் 3-ம் உலகப் போரிலும் ஈடுபட்டு உயிரை விட்ட தியாகிகள்.
சிறு வயதில் இருந்தே அமீர் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவர். கால்களிலும் லேசான ஊனம் இருந்ததால் இவருக்காகவே ஸ்பெஷலான இரும்பாலான ஸ்டேண்ட் பொருத்தி அதன் மூலமாக நடந்து நடந்து காலப்போக்கில் மற்றவர்களைப் போல நடக்கலானார் அமீர்.
பள்ளிப் பருவத்தில் சக மாணவர்கள் இவரைக் கிண்டல் செய்து கொண்டிருக்கும்போது அன்பும், தோழமையும் காட்டுகிறாள் ரூபா. ரூபாதான் அமீர்கானின் சிண்ட்ரெல்லா. அமீர்கான் ரூபாவை தனக்கென்றே நினைத்துக் கொண்டிருக்கிறார். ரூபா தன் குடும்பச் சூழலால் ஊரைவிட்டுப் போக… தனி மரமாகிறார் அமீர்.
பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வரும்போது ரூபாவும் அதே கல்லூரியில் படிக்க மீண்டும் இருவருக்குள்ளும் நட்பு தொடர்கிறது. ஆனால் ரூபாவோ பெரிய பணக்காரியாக வேண்டும் என்ற கொள்கையில் இருப்பதால் வேறொரு பணக்கார மாணவனைக் காதலிக்கிறாள். இந்தக் காதல் அமீர்கானால் ஒரு நாள் உடைகிறது.
கல்லூரி படிப்பு முடிந்து அமீர்கான் ராணுவத்தில் சேர்ந்து கார்கில் போரில் கலந்து கொண்டு அடிபட்ட இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றுகிறார். இதனால் அவருக்கு ராணுவத்தில் பெரிய பெயர் கிடைத்தாலும் மருத்துவ ரீதியாக மேலும் அவரால் ராணுவத்தில் இருக்க முடியாமல் போகிறது.
ராணுவத்தில் இருந்த சமயத்தில் உற்ற தோழனாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த பாலன் என்ற நாக சைதன்யா சொல்லிக் கொடுத்த பனியன், ஜட்டி பிஸினஸை தனது ஊருக்கு வந்து துவக்குகிறார்அமீர்கான். முதலில் அது தோல்வியடைந்தாலும் பின்பு அவர் காப்பாற்றிய பாகிஸ்தான் பிரஜையால் சக்ஸஸாகிறது. ரூபா இண்டஸ்ட்ரீஸ் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாகி பங்குச் சந்தையிலும் நுழைந்து வெற்றியடைகிறது. இடையில் அவரது அம்மாவும் காலமாகிறார். ஆனாலும் ரூபாவை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கிறார் அமீர்.
இந்த நேரத்தில் ரூபா மாடலிங் அழகியாகி, பின்பு சினிமாவில் ஹீரோயினாக ஆசைப்பட்டு… அது நடக்காமல் போய் ஒரு தயாரிப்பாளரின் சின்ன வீடாகி… சில சட்ட விரோத செயல்களுக்குத் துணையாக நின்றதால் சிறைக்குச் சென்று தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வந்து தற்போது சண்டிகரில் அமைதியாய் ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ரூபா இடையில் ஒரேயொரு நாள் மட்டும் அமீரை சந்திக்க ஊருக்கு வந்து தன்னையும் அமீருக்குத் தந்துவிட்டு மறுநாளை விடிந்தும், விடியாத பொழுதில் தன்னை தேடி வந்த போலீஸூடன் அமைதியாய் சென்றுவிட்டார்.
இது தெரியாத அமீர் கடைசியாகச் சில வருடங்கள் கழித்து ரூபாவை கண்டறிய… ரூபாவும் அவரைத் தன்னுடைய முகவரியைக் கொடுத்துத் தன்னைப் பார்க்க வரும்படி அழைக்கிறார். இப்போது ரூபாவை பார்க்க்ததான் சண்டிகருக்கு ரயிலில் செல்கிறார்.
அடுத்து என்ன நடக்கிறது… ரூபாவை அமீர் சந்தித்தாரா… அவரது காதல் என்னவானது… ரூபா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் என்ன ஆனது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
ஒரிஜினல் படத்தில் இருந்த சில காட்சிகளை நீக்கிவிட்டு இந்திய சினிமாவுக்காகச் சில காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் முக்கியமாக நீக்க வேண்டிய காட்சிகளை வைத்ததுதான் ஏன் என்றுதான் தெரியவில்லை.
படத்தின் முதல் பாதி ஜிவ்வென்ற வேகத்தில் பறந்து போக இடைவேளைக்குப் பின்பு படம் தொய்வானது தவிர்த்திருக்க வேண்டிய செயல். அமீர்கான் தனது அம்மாவின் மரணத்திற்குப் பின்பு ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஓடுகின்ற காட்சிகளை அறவே நீக்கிவிட்டு இந்தியாவுக்கு ஏற்றதுபோல மாற்றியிருக்கலாம். அதுவே பார்வையாளர்களுக்கு அலுப்பைத் தந்து சோர்வடைய வைத்துவிட்டது.
அதோடு இதோ ரூபாவோடு சேர்ந்துவிட்டார் என்ற நாம் சந்தோஷப்பட்ட நேரத்தில், இயக்குநர் மீண்டும் அமீரை நிர்க்கதியில் நிற்க வைக்க… இவ்வளவு பெரிய சோகத்தை நம்மால் தாங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
அமீர்கானின் முந்தைய வெற்றிப் படங்களான ‘டங்கல்’, ‘பிகே’, வரிசையில் இந்தப் படமும் இடம் பெறவில்லையென்றாலும் நடிப்பில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் ஆல் டைம் மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கும் ஒரு இடம் உண்டு என்பதுதான் இந்த ‘லால் சிங் சத்தா’ படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பெருமை.
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்…!