நடிகர்கள்:சிம்பு, ராதிகா, சித்தி இத்னானி
இயக்கம்: கவுதம் மேனன்
வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோவான முத்துவீரனுக்கு (சிம்பு) வாழ்க்கையில் கஷ்டங்களைப் பார்த்துப் பழகிவிட்டது. அவரின் வாழ்க்கை மிகவும் கரடுமுரடானது. அம்மா லட்சுமி(ராதிகா), சகோதரி கோமதியை நல்லபடியாக வைத்துக் கொள்ள நிழல் உலகிற்கு செல்லவும் தயாராக இருக்கிறார் முத்துவீரன்.
நிழல் உலகில் இருக்கும் ஆபத்துகுறித்து அங்குச் செல்வதற்கு முன்பே தெரிந்து கொள்கிறார். தன் உறவினர் ஒருவரின் மரணத்தால் அவருக்கு நிழல் உலகின் ஆபத்துகள் தெரிய வருகிறது.
நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தமிழகத்திலிருந்து மும்பைக்கு சென்று தாதா கார்ஜிக்கு சொந்தமான பரோட்டா கடையில் வேலைக்குச் சேர்கிறார் முத்துவீரன். கார்ஜி மற்றும் குட்டி கிருஷ்ணன் நாயருக்கு(சித்திக்) இடையேயான மோதலில் சிக்கிக் கொள்கிறார் முத்துவீரன்.
இதற்கிடையே முத்துவீரனுக்கு பாவை(சித்தி இத்னானி) மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்கு பிறகாவது நிழல் உலக ஆபத்திலிருந்து வெளியே வருவாரா முத்துவீரன்?.
வெந்து தணிந்தது காடு படம்மூலம் கேங்ஸ்டர் கதையைக் கையாண்டிருக்கிறார் கவுதம் மேனன். பாவப்பட்ட ஜென்மங்களை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் இருக்கும் நிழல் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார்.
நிழல் உலகை அப்படியே காட்டியிருக்கிறார். பரோட்டா கடையை முதல் முறையாக நமக்குக் காட்டியபோது அது சிறை போன்று இருந்தது. அதற்குள் தான் முத்து செல்லப் போகிறார் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஒரு கொலை செய்வதிலிருந்து தடுத்து நிறுத்த முத்துவை அவரின் அம்மா மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.
ஆனால் முத்துவின் கைக்குத் துப்பாக்கி வந்தபோது அவர் அதைக் கையாண்ட விதம் அருமை.
முத்துவை போன்றே மலையாளியான ஸ்ரீதரனும்(நீரஜ் மாதவ்) வேலை தேடி மும்பைக்கு வந்து குட்டியின் கும்பலில் சேர்ந்துவிடுகிறார். நிழல் உலகிலிருந்து வெளியே செல்ல விரும்பினால் வழி உண்டு என்று காட்டியிருக்கிறார் கவுதம்.
பிற கதாபாத்திரங்களை விரிவாகக் காட்டவில்லை. கார்ஜி, குட்டியைவிட அதிகாரம் படைத்தவர் இருக்கிறார், அந்த இருவரும் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதை தாண்டிப் பெரிதாக எதுவும் தெரியவில்லை. கவுதம் மேனனுக்கு கை வந்த கலையான காதல் காட்சிகள் கைக்கொடுக்கவில்லை.
கவுதமுடன் சேர்ந்து ஜெயமோகன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். இருவரும் ஆளுக்கொரு பக்கம் செல்ல விரும்பியது போன்று உள்ளது.