சினிமா நூற்றாண்டு விழா: கருணாநிதி, விஜயகாந்துக்கு அழைப்பு இல்லை

DMKDMDKஇந்திய சினிமாவுக்கு இது நூறாவது ஆண்டு. இதனை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறது.

வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தமிழக முதல்வர் உள்ளிட்ட தென்மாநில முதல்வர்கள், இந்திய ஜனாதிபதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள், இந்தி சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் விழாக்கள் பற்றிய விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை தனது வசனங்கள் மூலம் அடுத்த தளத்திற்கு எடுத்து வந்ததோடு 50 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதி 70 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்படவில்லை என்கிறார்கள்.

அதோடு 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்து அதன் கடனை தீர்த்தவர் விஜயகாந்த். அவருக்கும் அழைப்பு அனுப்பவில்லை.

இருவரும் அரசியல் கட்சிகளின் தலைவராக இருப்பதால் அவர்களை அழைப்பதில் சில தர்மசங்கடங்கள் இருக்கிறது என்று விழா தரப்பினர் காரணம் சொல்கிறார்களாம்.

அப்படியென்றால் விழாவை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவரான சரத்குமாரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்தானே என்று சில நடிகர்கள் தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.