ரஜினிக்கு பாஜக அழைப்பு

rajiniபாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 2014 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிலையில் அவர், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, பயங்கரவாதம் ஆகியவை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுவிட்டன.

இந்த மோசமான நிலையில் இருந்து நாட்டை மீட்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். எனவே, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். அவருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

ரஜினிகாந்த நடிகர் மட்டுல்ல. தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டவர். நாட்டு மக்கள் அனைவரையும் மதிக்கும் சிறந்த மனிதர். நல்லவர்கள், திறமையானவர்கள் நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. எனவே நரேந்திர மோடியை ரஜினிகாந்த் ஆதரிக்க வேண்டும்.

வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.