தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே ஆஸ்கர் விருது என்பது நீண்டகாலமாகவே எட்டாக்கனியாகத்தான் இருந்து வந்தது.
ஆனால், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரே படத்துக்கு இரண்டு ஆஸ்கர் வாங்கி அந்த எட்டாக்கனியை எட்டிப்பிடித்தார்.
அதே படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்த கேரள ஒளிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டிக்கும் ஒரு விருது கிடைத்து. அதனால் ஒரே படத்துக்காக மூன்று ஆஸ்கர் விருது இந்தியர்களுக்கு கிடைத்தது. அதைத்தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் கமல்ஹாசன் உள்பட பலருக்கு ஆஸ்கர் விருது பெற்று விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, யுத்தம் செய் உள்பட பல படங்களை இயக்கிய மிஷ்கினுக்கும் ஆஸ்கர் விருது ஆசை தற்போது தலைதூக்கியுள்ளது.
தற்போது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தை இயக்கியுள்ள அவர், நேற்று முன்தினம் அப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், நான் பேசினாலே பிரச்னையாகி விடுகிறது. காரணம் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவேன். அதையே மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதனால்தான் இப்போதெல்லாம் மேடைகளில் நான் அதிகமாக பேசுவதில்லை.
மேலும், 6 வருடங்களுக்குப்பிறகு இந்த படத்தைதான் நான் சுதந்திரமாக இயக்கியிருக்கிறேன். இதற்கு முன்பு இயக்கிய படங்களில் தயாரிப்பளார்களின் ஆதிக்கத்தினால் கதையில் திருத்தம் செய்வது மட்டுமின்றி, குத்துப்பாடல்களெல்லாம் என் படத்தில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டுமின்றி பாடலே இல்லை என்பதுதான் சிறப்பு.
காரணம், இந்த திகில் நிறைந்த க்ரைம் கதைக்கு பாடல் தேவைப்படவில்லை. அதனால் பின்னணி இசையை அற்புதமாக வடிவமைத்து படத்துக்கு பெரிய பலம் சேர்த்துள்ளார் இளையராஜா. அதோடு, இந்த படம்தான் இந்த மிஷ்கின் யார் என்பதை முழுசாக சொல்லப்போகிற படம். சர்வதேச தரத்தில் சுதந்திரமான கலைஞனாக இயக்கியிருக்கிறேன் என்றார்.
அதையடுத்து பேசியவர்கள், மிஷ்கின் இயக்கும் படங்கள் ஹாலிவுட் தரத்தில் உருவாகின்றன. அதனால் எதிர்காலத்தில் அவரது படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என்ற வகையில் பேசினர். அதற்கு மிஷ்கினும், அதற்கான முயற்சியை அடுத்தடுத்து எடுப்பேன் என்பது போலவே அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.