சின் பெங்: நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டாரா அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டதா?

 

-ஜீவி காத்தையா, செம்பருத்தி .கோம்

தடை செய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் நாடு திரும்பும் வாய்ப்பை Hanif Omarநழுவவிட்டு விட்டார்.என்று மலேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் ஹனிப் ஒமார் நேற்று கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது.

சின் பெங் செப்டெம்பர் 16 இல் பேங்கோக் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

மலேசியா, தாய்லாந்து அரசாங்கங்களுடன் மலேயா கம்யூனிஸ்ட் கட்சி டிசம்பர் 2, 1989 இல் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் மலாயா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட கட்சியின் உறுப்பினர்கள், சின் பெங் உட்பட, மலேசியாவிற்கு திரும்பி வந்து நிரந்தரமாகத் தங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு நாட்டிற்குத் திரும்புவதற்கு விருப்பம் உடையவர்கள் அமைதி ஒப்பந்தம் கையொப்பமிட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் அதற்கான விண்ணப்பம் செய்திருக்க வேண்டும் என்றும் அந்த அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி 300 க்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ஹனிப் ஒமார், “ஆனால், அந்த ஒரு வருடத்திற்குள் சின் பெங் நாட்டிற்கு திரும்புவதற்கு எந்த ஒரு விண்ணப்பமும் செய்யவில்லை. நாங்களும் அவரிடமிருந்து எந்த ஒரு விண்ணப்பத்தையும் பார்க்கவில்லை”, என்று அவர் விளக்கமளித்திருக்கிறார்.

ஆகவே, சின் பெங் அவருக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார் என்றார் ஹனிப்.

Chin Peng passed away2

“அலுத்துப் போய் விட்டேன்”

ஹாட்ஜாய் அமைதி ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளவாறு தாம் நாடு திரும்புவதற்கு விண்ணப்பம் செய்திருந்ததை டிசம்பர் 1, 2009 இல் சின் பெங் உறுதிப்படுத்தினார்.

நாடு திரும்புவதற்காக மனு செய்திருந்ததாகவும், மலேசிய அதிகாரிகள் அவரைச் சந்திப்பதற்கு நாள் குறிந்திருந்ததாகவும், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று மொத்தம் மூன்று மணி நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் அங்கு எவரும் வரவில்லை என்று சின் பெங் விளக்கம் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தை நினைவு கூர்ந்த சின் பெங், “நான் அலுத்துப் போய்விட்டேன். நான் ஏமாற்றப்பட்டேன். நான் முட்டாளாக்கப்பட்டேன். பிறகு, நான் அவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை”, என்றார்.

ஹட்ஜாய் அமைதி ஒப்பந்தத்தில் 12 மாத கால கெடு விதிக்கப்பட்டுள்ளதை அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மலேசியEx-Police chief Rahim Nor அதிகாரிகளில் ஒருவரான முன்னாள் ஐஜிபி அப்துல் ரஹிம் நோர் உறுதிப்படுத்தினார்.

“ஆனால், அவ்வாறு செய்யத் தவறியவர்கள் அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக திரும்பி வர (நிரந்தரமாக) விரும்பாதவர்கள் சமூக வருகை (Social visit) எந்நேரத்திலும் மேற்கொள்ளலாம், ஆனால் நிரந்தரமாக இந்நாட்டில் குடியேறுவதற்காக அல்ல”, என்று விளக்கம் அளித்துள்ளார்.

“ஒப்பந்தத்தின் இந்த அடிப்படையில்தான் பெரும்பாலானோர், இளைஞர்களும் முதியவர்களும், (நாட்டிற்கு திரும்ப) அனுமதிக்கப்பட்டனர் என்று நான் நினைக்கிறேன்”, என்று ரஹிம் நோர் கூறினார்.

“சின் பெங் மட்டும்தான் திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை”, என்று கூறிய அந்த முன்னாள் ஐஜிபி ரஹிம் நோர், “நான் ஒரு தொழிலியலாளர் (professional man) என்ற தகுதியுடன் பேசுகிறேன் என்பதோடு நான் அமைதி ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டுகிறேன் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்”, என்றார்.

 

TAGS: