இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

kolly100இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் சனிக்கிழமை (செப்.21) தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை தொடங்கி வரும் 24-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவை, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவில் தென்னிந்திய திரை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்த் திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கன்னடம், ஆந்திரம், கேரளம்: வரும் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு கன்னடத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் கர்நாடக அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ ஆகியோர் பங்கேற்கிறார்கள். கன்னடத் திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

தெலுங்கு திரைப்பட விழா 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்மா, சுற்றுலா துறை இணை அமைச்சர் சிரஞ்சீவி, ஆந்திர செய்தித்துறை அமைச்சர் டி.கே.அருணா ஆகியோர் பங்கேற்கிறார்கள். தெலுங்குத் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மலையாளத் திரையுலகம் சார்பில் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் வயலார் ரவி, கேரள அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அன்றைய தினம், மலையாள நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் இறுதி நாள் விழாவில் தென்னிந்தியத் திரையுலகில் சாதனை புரிந்த கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள், மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.