இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்!

tamil cinema 100சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

முதல்வர் பேசுகையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்று உங்களுடன் உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா கண்டுபிடிப்புக்கு முன் கலைஞர்கள், நாடகம், இசை, நாட்டியம் மூலம் மக்களை மகிழ்வித்தனர். பின்னர் காலத்தின் மாற்றத்தினால் ஊமைப்படங்கள், பேசும் படங்கள் என சினிமாவின் வளர்ச்சி மாற்றம் அடைந்தது. முன்பு நான் நடிக்கும் காலத்தில் ஒரு படம் 100 நாட்கள் ஓடினாலே அதை மிகப்பெரிய சாதனையாக கருதி விழா எடுத்து அதில் நடித்த நடிகர், நடிகையரை விருது வழங்கி கவுரவிப்பார்கள். இப்போது இந்திய சினிமாவுக்கே நூற்றாண்டு விழா என்று எண்ணும் போது அது நமக்கு மட்டுமல்லாது, இந்த உலகத்துக்கே கிடைத்த பெருமை. அப்படிப்பட்ட சினிமா துறையில் நானும் இருந்தது எனக்கு கிடைத்த பெருமை.

பிறகலைகளை விட மக்களை வெகுவாக ஈர்க்கும் திறன் சினிமா துறைக்கு உண்டு. நாகிரெட்டி, ஸ்ரீராமுலு நாயுடு, சின்னப்பதேவர், பீம்சிங், விட்டலாச்சாரியார், தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, நாகேஷ், சாவித்திரி, மதுரம், கண்ணாம்பாள், பானுமதி, மதுரம், பத்மினி, சாவித்திரி, அஞ்சலிதேவி, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, லதா மங்கேஷ்கர், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட திரையுலகினரின் பங்கு மகத்தானது.

வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ்நாடு. இங்கு தமிழ்நாட்டு கலைஞர்கள் மட்டுமல்லாது பிறமாநில கலைஞர்களும் வெற்றி பெற்று முன்னணி நடிகராக ஜெயித்து வருகிறார்கள். எனது ஆட்சி காலத்திற்கு முன்னர் திரைத்துறை எப்படி செயல்பட்டது என்று உங்களுக்கே தெரியும். ஒருசிலரின் லாபத்திற்காக திரைத்துறை சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சி காலத்தில் திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனது ஆட்சி காலத்தில் திரையுலகிற்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது அரசு தொடர்ந்து செய்யும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

பின்னர் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவினை நினைவுபடுத்தும் விதமாக காளிதாஸ் தொடங்கி தற்போதைய சினிமாக்களான சூதுகவ்வும் வரை உள்ள படங்களின் தொகுப்பு அகன்ற திரையில் திரையிடப்பட்டது.

சாதனையாளர்களுக்கு விருது

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமல்ஹாசன், சிவக்குமார், ரஜினிகாந்த், பிரபு, இயக்குநர் மகேந்திரன், பி.வாசு, தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.செளத்திரி, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள், சரோஜாதேவி, மனோரமா, எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ‌செளகார்ஜானகி, மீனா, சிம்ரன், த்ரிஷா, ஜெயசுதா, ஜெயபிரதா, ரமேஷ் பிரசாத், விஜயா புரொடக்ஷ்ன் வெங்கட்ராம் ரெட்டி, விநியோகஸ்தர் துறை சார்பாக எல்.சுரேஷ், வெளியீட்டாளர்கள் துறை சார்பில் ஜவஹர், சி.வி.ராஜேந்திரன், இசையில் முத்திரை பதித்த இளையராஜா, என்.ராமசுப்ரமணியம், பின்னணி பாடகர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, கவிஞர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.வர்மா, படத்தொகுப்பாளர் பாபு, அபிராமி ராமநாதன், ஸ்டில் கேமிராமேன் சங்கர்ராவ், பின்னணி குரல் கொடுத்த ‌கே.எம்.காளை, அனுராதா, லைட்மேன் சுந்தரம், ராமாராவ், பசி துரை, நடன அமைப்பாளர் சுந்தரம் சார்பாக அவரது மகன் ராஜூ சுந்தரம் உள்ளிட்ட பலருக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி கவுரவித்தார்.

விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் கல்யாண் வரவேற்பு உரையாற்றினார்.