ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம்: கமல் பெருமிதம்

cinema3திரைப்பட கலைஞர்களாகிய நாம், சினிமாத் துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம் என, கன்னட திரைப்படத் துறையினர் முன்பு நடிகர் கமல் பேசினார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை(செப்.22) கன்னடத் திரைப்படத் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:

“”தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து திரைப்பட விழாக்களும் தனித் தனி அல்ல; அனைத்தும் ஒன்றுதான். திரைப்பட கலைஞர்களாகிய நாம், சினிமா துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அதில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

நான் இந்த கன்னட திரைப்பட விழாவுக்கு வந்ததற்கு சிலர் நன்றி கூறினர். இந்த விழாவிற்கு என்னை நீங்கள் வரவேற்றதற்கு நான்தான் நன்றி கூற வேண்டும். நீங்கள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கண்டிப்பாக நான் இதில் கலந்து கொள்வேன். ஏனென்றால் இந்த சினிமா நூற்றாண்டு விழா கலைஞர்களாகிய நம் விழா என்றார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த நிகழ்ச்சியில் “லோகேஷன்’ என்ற 100 ஆண்டு கன்னட சினிமா தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தையும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

கர்நாடக அமைச்சர்கள் பங்கேற்பு: முன்னதாக கர்நாடக பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ, கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜெ.ஜார்ஜ் ஆகியோர் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

பழம்பெரும் தயாரிப்பாளர் ஆறுமுகம், முன்னாள் கன்னட திரைப்பட வர்த்தகத்துறையின் தலைவர் ஜெயமாலா,பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, லீலாவதி, ஹேமா செüத்ரி, பாரதி விஷ்ணுவர்தன், பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான வசந்த் குமார் பாட்டீல், “துளு’ மொழி திரைப்பட தயாரிப்பாளர் கே.என்.டெய்லர், தயாரிப்பாளர்கள் குருதத் முஷ்ரி, வி.என்.கங்காதர், பார்கவா, ராஜாராம், தர்ஷன், பெத்தன்னா, நவீன்கிருஷ்ணன்,

நடிகர்கள் ராஜேஷ், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீநாத், சிவராம், உமேஷ், முரளி, ஒய்.ஆர்.சாமி, பங்கஜ், வினோத் ராஜ், யோகேஷ், நடிகைககள் அனு பிரபாகர், ஜெயந்தி, ராகினி, ஹர்ஷிதா, லைலா, பாவனா பாடலாசிரியர் அம்சலேகா, நடனக் கலைஞர் மூகூர் சுந்தரம், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற கன்னடத் திரைத்துறையினர் 67 பேருக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

கன்னடத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தயாரிப்பாளர் விஜயகுமார், துணைத் தலைவர்கள் ராக்லின் வெங்கடேஷ், தாரா கோவிந்து, செயலாளர் கணேஷ், கன்னட நடிகர் சங்கத் தலைவர் அம்ரீஷ், செயலாளர் விஜய ராகவேந்திரா, கன்னட திரைப்படத் தொழிலாளர் சங்கத் தலைவர் அசோக் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.