சமூகத்தை சகிப்புத்தன்மை மிக்கதாக சினிமாக்கள் மாற்ற வேண்டும்

cinema1அறநெறிகளும் சகிப்புத்தன்மையும் மிக்கதாக சமூகத்தை மாற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து சென்னையில் நடத்திய இந்திய சினிமா நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் பங்கேற்று, சினிமாத் துறையில் சாதனை புரிந்ததற்காக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 41 பேருக்கு நூற்றாண்டு விழா பதக்கங்களை பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

அதன் பிறகு, அவர் பேசியது:

Pranab-Mukherjeeசினிமா மிகவும் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சாதனமாக உள்ளது. நமது நாட்டில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். எனவே, அதை முழுவதும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல் சமூகத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும்.

நமது நாட்டில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. நாட்டில் அவ்வப்போது நடைபெறும் மத ரீதியான மோதல்கள் வருத்தத்தை அளிக்கின்றன.

இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க நாம் வழிகாண வேண்டும். நமது சமூகத்தில் மறைந்து வரும் அறநெறிகளை மீண்டும் கொண்டுவர சினிமாத்துறையினர் முயற்சிக்க வேண்டும்.

மிகவும் சக்திவாய்ந்த இந்த ஊடகத்தின் மூலம் சமூகத்தில் நல்ல கருத்துகளைப் பரப்ப வேண்டும். சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயம் மிக்க அமைதியான சமூகத்தை உருவாக்க வேண்டும்.

அதேவேளையில் சமூகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் பணியில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. சமூக நலனுக்காகவும் அறநெறிகளை வளர்ப்பதற்காகவும் சினிமாத்துறையினர் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் நேரத்தில், நமது சினிமா பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

முதல் முழுநீள மௌனத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா’வை எடுப்பதற்காக தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார் தாதாசாகேப் பால்கே. அவரது முயற்சியால்தான் நூறாண்டுகளுக்கு முன்பு திரைப்படம் எடுத்த பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்தது.

இப்போது உலகின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இந்திய சினிமாத்துறை உள்ளது. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக அது உள்ளது. இந்திய சினிமாக்கள் உலக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு தென்னிந்திய சினிமாத் துறையினர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், பிரேம்நசீர், ராஜ்குமார், எஸ்.எஸ். வாசன், நாகிரெட்டி உள்ளிட்டோர் இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியத் திரைப்படங்கள் அதிக அளவில் பெறுகின்றன என்றார் பிரணாப் முகர்ஜி.

இந்த நிகழ்ச்சியில் இந்திய சினிமா நூற்றாண்டு மலரை ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்டார்.

முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக அமைச்சர் சந்தோஷ் எஸ். லாட், இந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் விஜய் கேம்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் வரவேற்றார்.