நடிகர் கமல்ஹாசன் தனது திரை வாழ்க்கையின் 50–வது வருடத்தை சமீபத்தில் பூர்த்தி செய்தார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மும்பையில் அடுத்த மாதம் நடைபெறும் மும்பை திரைப்பட விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மும்பை திரைப்பட அகாடமி
தலைவர் ஷியால் பெனல்,’’மும்பையில், மும்பை திரைப்பட அகாடமி(மும்பை அகாடமி ஆப் மூவிங் இமேஜ்) சார்பில் 15–வது திரைப்பட விழா வருகிற அக்டோபர் மாதம் 17–ந்தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் திரைப்பட துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரெஞ்ச் பட தயாரிப்பாளர் கோஸ்டா கவ்ராஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க தீர்மானித்துள்ளோம். ஒரு வாரம் நடைபெற உள்ள இந்த விழாவின்போது 65 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிட்டு காட்டப்படுகின்றன.
விழாவில் மறைந்த திரையுலக பிரபலங்கள் யாஷ் சோப்ரா, ரிதுபர்னோ கோஷ், வில்லன் நடிகர் பிரான் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிரமாண்டமான இந்த திரைப்பட விழா மும்பை மெரின் லைனில் உள்ள லிபெர்ட்டி சினிமா, மெட்ரோ பிக் சினிமா தியேட்டர்களில் நடக்கிறது’’என்று கூறியுள்ளார்.