தமிழ்த் திரையுலக வரலாற்றில் டங்கனுக்கு அழிக்க முடியாத இடம் எப்போதும் உண்டு!

செல்வி.ஜெயலலிதாவின் திரையுலக சாதனைகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டியதுடன் கொண்டாடி முடித்துவிட்டார்கள் இந்திய சினிமா 100 விழாவை! உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய சாதனையாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் எல்லீஸ் ஆர் டங்கன். அவருக்கு தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாது. ஆனாலும் அவர்தான் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.வாசன், டி.எஸ்.பாலையா, எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட பலருக்குத் தமிழ்த் திரையுலகில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தவர்.

ellis01எல்லீஸ் ஆர் டங்கனின் படங்களில் தமிழகத்தின் பண்பாட்டு வடிவங்கள் அன்றிருந்த வேறெந்த இயக்குநருக்கும் குறைவாக இருந்ததில்லை. உருவாக்கத்தில் ஹாலிவும் படம் போலவும் உள்ளடக்கத்தில் இந்திய-தமிழ்த் தன்மையும் கொண்டதுதான் எல்லீஸ் ஆர் டங்கனின் படங்கள். ஐரிஷ்காரரான டங்கன் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவில். 1909ஆம் ஆண்டு மே 11-ம் தேதி அமெரிக்காவின் ஒஹியோவில் பிறந்தார். தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைத்துறையில் சேர்ந்து படித்தார். அப்போது அவருக்கு அறிமுகமானார் சக மாணவரும் இந்தியருமான மணிக்லால் தாண்டன். இருவரும் நண்பர்களானார்கள். கூடவே மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் இணைந்தார். தாண்டனுடன் எல்லீசும் ஆர்மலேவும் இந்தியாவுக்கு வந்தனர். மும்பையைச் சேர்ந்த தாண்டன் தமிழ்ப் படங்களை இயக்கினார். எல்லீஸ் ஆர் டங்கன் அவருக்குத் துணையாக இருந்தார்.

கே.பி.சுந்தராம்பாள் நடித்த ‘நந்தனார்’ படத்தின் இயக்குநர் தாண்டன் என்றாலும் பெரும்பாலான காட்சிகளை எடுத்தவர் டங்கன்தான். தமிழ் மண்ணுக்கே உரிய கதையான நந்தனாரை வெள்ளைக்காரரான எல்லீஸ் ஆர் டங்கன் எடுத்திருந்த விதமும், அதற்குக் கிடைத்த வரவேற்பும் அவரைத் தமிழ் இயக்குநராக்கியது.

ellis02அவரது முழுமையான இயக்கத்தில் வெளியான முதல் படம், ‘சதி லீலாவதி’(1936). தோட்டத் தொழிலாளர் பிரச்சினையையும், மதுவின் தீமையையும் அடிப்படையாகக் கொண்ட கதை. ஜெமினி பட அதிபரான ’ஆனந்தவிகடன்’ எஸ்.எஸ்.வாசன் கதை எழுதியிருந்தார். அவருக்கும் இதுதான் முதல் படம். இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர்,ஒரு சிறிய வேடத்தில் (இன்ஸ்பெக்டராக) அறிமுகமானார். என்.எஸ்.கே.வுக்கும் பாலையாவுக்கும்கூட இதுவே முதல் படம். எம்.கே.ராதாதான் படத்தின் நாயகன்(எம்.ஆர்.ராதா அல்ல). சதிலீலாவதி படத்தின் வெற்றி, எல்லீஸ் ஆர் டங்கனுக்குத் தொடர் வாய்ப்புகளை அளித்தது.

அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த ஹிட் படமான, ‘அம்பிகாபதி’யை இயக்கியவரும் டங்கன்தான். கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி திரை நட்சத்திரமாகப் பெரும்புகழ்பெற்ற ‘சகுந்தலை’, ‘மீரா’ ஆகிய இரண்டு படங்களையும் எல்லீஸ் ஆர் டங்கன்தான் இயக்கினார். தமிழ்ப்புலவரான ‘காளமேகம்’ பற்றிய கதையை அதே பெயரில் படமாக இயக்கிய டங்கன், அதில் புகழ்பெற்ற நாதசுர கலைஞரான டி.என்.ராஜரத்தினத்தை நாயகனாக்கினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘எதிர்பாராத முத்தம்’ காவியத்தை, ‘பொன்முடி’ என்ற தலைப்பிட்டு இயக்கினார் டங்கன். தமிழகத்தின் மிகப் பெரும் ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் டங்கன்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘குண்டலகேசி’யின் ஒரு பகுதியைத் தழுவி கலைஞர் மு கருணாநிதி எழுதிய ‘மந்திரிகுமாரி’ படத்தை இயக்கியவரும் எல்லீஸ் ஆர் டங்கன்தான். இந்தப் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், வீரமோகன் என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். திரையுலகில் எம்.ஜி.ஆர் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தவர் கலைஞர். ஆனால், எம்.ஜி.ஆரின் தாடையில் உள்ள வெட்டு போன்ற தோற்றத்தைக் ellis03(இரட்டை நாடி) காரணம்காட்டி டங்கனும் படத்தின் தயாரிப்பாளரான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரமும் மறுத்துவிட்டனர்.

மிக முக்கிய பாத்திரத்தில் நடிப்பவருக்கு இரட்டை நாடி இருந்தால் அது கேமரா கோணத்திற்கு சரியாக இருக்காது என்பது அவர்களின் வாதம். கலைஞரோ இந்தப் பாத்திரத்திற்கு எம்.ஜி.ஆர்தான் சரியாக இருப்பார் என வாதிட்டார். தயாரிப்பாளர் சுந்தரம் ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த இரட்டை நாடியை மறைக்கும் விதத்தில் ஒரு மெல்லிய தாடியை ஒட்டவேண்டும் என்றார். டங்கனும் இதற்கு சரி என்றார். கலைஞரின் முயற்சியால் எம்.ஜி.ஆர் வீரமோகன் பாத்திரத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் தாடையின் மீது ஒரு கருவண்டு உட்கார்ந்திருப்பதுபோல அந்த தாடி இருக்கும். எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய மந்திரிகுமாரி (1950) படம் வெற்றிபெற்றதுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் பெயர் வாங்கித் தந்தது.(கலைஞரை எம்.ஜி.ஆர்தான் முதல்வராக்கினார் என்று சொல்பவர்கள் யாரும் எம்.ஜி.ஆரை கலைஞர்தான் மந்திரிகுமாரியின் மூலம் திரையுலகில் முக்கிய இடம் கிடைக்கச் செய்தார் என்பதை மறந்தும் சொல்வதில்லை)

டங்கனின் கடைசி படம் மந்திரிகுமாரிதான். அதன்பின் அவர் தன் சொந்த நாட்டிற்குச் சென்றுவிட்டார். ellis04தமிழ்த் திரையுலகில் நவீன ஒப்பனை, நகரும் கேமரா காட்சிகள் ஆகியவற்றை டங்கன் அறிமுகம் செய்துவைத்தார். அத்துடன், அரங்க நடனங்களும் (ரெகார்டு டான்ஸ்), நெருக்கமான காதல் காட்சிகளும் இடம்பெற்றன. மேலைநாட்டு கலாச்சாரத்தை அவர் புகுத்துகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால், அவர் அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை.

இந்துக்கள் மட்டுமே கோவில்களுக்குள் நுழையமுடியும் என்ற காலகட்டத்தில் டங்கன் எடுத்த நந்தனார், காளமேகம், மீரா உள்ளிட்ட பல படங்களும் கோவில் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் கொண்டவைதான். ellis05அவற்றின் படப்பிடிப்பிற்காக, காஷ்மீர் பண்டிட்டாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிடுவாராம் அமெரிக்காவில் பிறந்த கிறிஸ்தவரான டங்கன்.

தி ஜங்கிள், பிக் ஹண்ட் உள்ளிட்ட ஆங்கிலப் படங்களையும் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கியுள்ளார். ஆனாலும் அவர் தமிழ்ப்பட இயக்குநராகவே பெயர் பெற்றார். 1990களில் இந்தியாவுக்கு மீண்டும் வருகை தந்த டங்கன், சென்னைக்கு வந்து தமிழ்ப்படவுலகின் வளர்ச்சியை ஒரு தாயின் பாசப்பரிவுடன் பார்த்துப் பாராட்டினார். 2001 டிசம்பர் 1ஆம் தேதி தனது 92வது வயதில் எல்லீஸ் ஆர் டங்கன் தனது சொந்த நாட்டில் காலமானார். தமிழ்த் திரையுலக வரலாற்றில் அந்த ஆங்கிலேயருக்கு அழிக்க முடியாத இடம் எப்போதும் உண்டு.

-கோவி.லெனின்