வெட்கமில்லை! வெட்கமே இல்லை!!

-முனைவர் ஆறு. நாகப்பன், செப்டெம்பெர் 29, 2013.

aru nagappanநாடு விடுதலையடைந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்னோ என்ற ஒரே கட்சி தொடர்ச்சியாக ஆட்சி செய்து அற்புதமான அனுபவம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளிலும் உலக இஸ்லாமிய நாடுகளின் வரிசையிலும் அதி முன்னேற்றம் அடைந்த நாடு மலேசியா என்று நமது தலைவர்கள் முழங்கி வருகின்றனர். என்றாலும் வெட்கமில்லை! இங்கு யாருக்கும் வெட்கமில்லை!!

 

கல்வி, அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூக அமைப்பு இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் உலகின் ஆகக் கடைசி பத்து நாடுகளில் ஒன்றாகவே மலேசியா இருந்து வருகிறது. எல்லாவற்றையும் விளக்க வேண்டியதில்லை. எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

 

ஓர் இரயில் பயணத்தில் வெளி நாட்டவர் ஒருவர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். சிறிது நேர அமைதிக்குப் பின் நாங்கள் அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தோம். ‘மலேசியா எப்படி’ என்று கேட்டேன். கலவையாக சில விஷயங்களைச் சொன்னார். ‘இங்கு யாரைக் கண்டு நீங்கள் அதிகமாகப் பயப்படுகிறீர்கள்’ என்று கேட்டேன். சற்றும் தாமதிக்காமல் ‘டாக்சி ஓட்டிகள்’ என்று சொன்னவர் அவரது சில அனுபவங்களைச் சொன்னார். அவர் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்குமா என்று எனக்குச் சந்தேகமே வரவில்லை. ஏனென்றால் எனக்கும் அப்படியான அனுபவங்கள் நிறைய உண்டு.

 

பிரிக்பீல்ட்சில் நான் குடியிருக்கும் அடுக்ககத்திற்கு எதிரில் குடியிருப்பாளர்களுக்கான சாலை எந்த ஏற்பாடும் இல்லாமல் கனரக வாகனங்களுக்கும் பேருந்துகளுக்கும் உரியதாக மாற்றப்பட்டது. நாங்கள் பல முறை செய்து கொண்ட முறையீடுகளுக்குப் பின் சாலையைக் கடக்கும் மஞ்சள் வரிக் கோடும் குறி விளக்கும் அமைக்கப்பட்டன.

 

ஒரு நாள் குறி விளக்கில் நான் கடப்பதற்கான பச்சை விளக்கு வந்தபோது கடக்கத் தொடங்கினேன். பாதி நிலை அடைந்தபோது சர்ரென ஒரு டாக்சி என்னைக் கடந்து சென்றது. ஒரு வினாடி, சில அங்குல இடைவெளியில் இதை நான் எழுதும் வாய்ப்பைப் பெற்றேன். வேடிக்கை! இதைப் பார்த்துக் கொண்டு சாலை பாதுகாப்பு போலீசார் இருவர் அந்த குறிவிளக்கு மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர். ‘பார்த்தீர்களா அந்த டாக்சியை’ என்று பதற்றத்தோடு அவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் மிகுந்த அமைதியோடு ‘என்ன செய்ய முடியும், நாங்கள் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்’ என்றனர். ‘யாராவது செத்த பின்னால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா’ என்று கத்திவிட்டு நான் நடந்தேன்.

 

மற்றொரு நாள், செண்டரல் இரயிவே நிலையத்திற்குப் போக வேண்டும். எப்போதும் நடந்தே போவேன். அன்று கடுமையான மழை. குறித்த நேரத்திற்குப் போய் இரயிலைப் பிடித்தாக வேண்டும். ஒன்றுக்குப் பின் ஒன்றாக மூன்று டாக்சிகளை நிறுத்தினேன். ‘நான் அங்கே போகவில்லை’ என்ற பதிலையே ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு போனார்கள். கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு இரயில் நிலையம் சென்று அடையும்போது நான் கட்டியிருந்த வேட்டியும் சட்டையும் முக்கால் வாசி நனைந்து போயிருந்தது.

 

இன்னொரு நாள், பிரின்ஸ் கோர்ட் மெடிகல் செண்டரில் நண்பர் ஒருவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஒன்று, இரண்டு என்று ஆறு டாக்சிகளை நிறுத்தினேன். ஒன்றும் நிற்கவில்லை.  வேறு இடத்திற்குச் சென்று டாக்சி எடுப்போம் என்று இடம் மாறினேன். முக்கால் மணி நேரம் ஆகியும் வந்து போன எந்த டாக்சியும் நிற்கவில்லை. இடத்தை மாற்றி மாற்றி ஒன்றரை மணி நேரம் கழித்து புக்கிட் பிந்தாங் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து எனக்குத் தெரிந்த நண்பர் காரில் பிரிக்பீல்ட்ஸ் வந்து சேர்ந்தேன்.

 

இன்னுமொரு கதை வேண்டுமா? சிங்கப்பூருக்குப் பேருந்தில் போய்த் திரும்பிய ஒரு நாள் இரவு பதினோரு மணிக்கு புடு ராயா வந்து சேர்ந்தேன். வரிசையாக டாக்சிகள் நின்றன. ‘பிரிக்பீல்ட்ஸ்  போக வேண்டும்’ என்றேன். ‘இருபத்தைந்து ரிங்கிட் கொடுக்க முடியுமா’ என்றனர். மூன்று டாக்சிகாரர்களும் அப்படியே சொன்னார்கள். ‘நாசமாய்ப் போவீர்கள்’ என்று சபித்துவிட்டு  இருபது நிமிடத்தில் நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.

 

‘டாக்சி ஓட்டிகள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கான மலேசியாவின் தூதர்கள்’ என்று அழகாக அழைக்கப்படுகின்றனர். ஆனால் உள் நாட்டு, வெளி நாட்டு டாக்சி பயனீட்டாளர்களின் அனுபவங்களைத் தொகுத்துச் சொன்னால் இவர்கள் கொம்பு இல்லாத எருமையில் வரும் எம தூதர்களாகவே எனக்குப் படுகின்றனர். (இதற்கெல்லாம் விதிவிலக்கானவர்களை நான் இன்னும் சந்திக்கவில்லை)

 

நான் சிங்கப்பூர் உட்பட பல வெளி நாடுகளில் டாக்சிகளில் பயணம் செய்திருக்கிறேன். தில்லுமுல்லு இல்லாத கட்டணத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குப் போய்ச் சேர முடிந்தது. இவற்றுள் மிகச் சிறந்த முதல் நிலை பெறுவது சிங்கப்பூர். அண்டை நாட்டைப் பார்த்துக் கற்றுக் கொள்வதற்கு  நமது அரசியல்வாதிகளின் ஆணவம் இடம் தருவதில்லை என்பதால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் நமது நிலை இப்படித்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எந்த இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூரின் ஒரு வெள்ளிக்கு எல்லாம் வளமும் கொண்டுள்ள நாம் இரண்டு ரிங்கிட் அறுபது காசு கொடுக்க வேண்டியுள்ளதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரியும்.

 

நம் நாட்டுக்கு வரும் வெளி நாட்டினர் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக’ டாக்சி ஓட்டிகளைப் பதம் பார்த்துவிட்டுப் போனால் வெளிநாட்டில் நமது புகழ் எப்படிக் கொடி கட்டிப் பறக்கும் என்று எண்ணிப் பாருங்கள். என்னை ஒரு மலேசியன் என்று சொல்லிக் கொள்வதற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன். ஆனால் இதையெல்லாம் தெரிந்தே வைத்திருக்கும் நமது போக்குவரத்து அமைச்சருக்கும் மிச்சமுள்ள எந்த அமைச்சருக்கும் வெட்கமில்லை! வெட்கமே இல்லை!!