ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்பதனையே மக்களுக்கு சொல்ல வருகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
தனக்கென்று தனிபானி, தனி பாதை என்று பயணிக்கும் இயக்குனர்களில், தான் முக்கியமானவன் என்று தனது ஒவ்வொரு படங்களிலும் நிரூபிக்கும் மிஷ்கின் இந்த படத்தையும் அவ்வாரே இயக்கியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவரான ஸ்ரீ, நண்பருடைய வீட்டில் படித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் வேளையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை பார்க்கிறார்.
அவரை காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்க முயல்கிறார். ஆனால் அந்த உயிர் மீது அனைவரும் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால் தன் வீட்டிலேயே கொண்டு போய் அவருக்கு ஆபரேஷன் செய்கிறார். இதற்கு உதவியாக இவருடைய பேராசிரியரும் துணைபுரிகிறார்.
ஆபரேஷன் செய்த மறுநாள் மிஷ்கின் அங்கிருந்து தப்பித்து போய்விடுகிறார். அதன்பிறகு சிபிசிஐடி பொலிசார் ஸ்ரீயின் வீட்டிற்கு வந்து மிஷ்கின் ஒரு பயங்கர ரவுடி என்று சொல்கின்றனர்.
ஒரு கொலையாளிக்கு உதவி செய்தற்காக அவரது குடும்பத்தையே கைது செய்கிறது. பொலிஸ் காவலில் இருக்கும் ஸ்ரீயின் மொபைலுக்கு அழைப்பு வருகிறது. அதில் மிஷ்கின் பேசுகிறார்.
அதில் ஸ்ரீயை சந்திக்க வேண்டும் என மிஷ்கின் கூறுகிறார். இந்த சூழலை பயன்படுத்தி மிஷ்கினை என்கவுன்டர் செய்ய பொலிஸ் திட்டமிடுகிறது.
அதற்கு ஸ்ரீயிடம் துப்பாக்கியைக் கொடுத்து மிஷ்கினை நீயே சுட்டுவிடு என்று கூறுகின்றனர்.
ஸ்ரீ தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இந்த அசைன்ட்மென்டுக்கு ஒத்துக் கொள்கிறார்.
ஸ்ரீயை சந்திக்கும் மிஷ்கின் மிகவும் சாதுர்யமாக ஸ்ரீயை எலெக்ட்ரிக் ரெயிலில் கடத்திச் செல்கிறார்.
இறுதியில் பொலிஸ் ஸ்ரீயை மீட்டு மிஷ்கினை கொன்றதா? அல்லது மிஷ்கினை ஸ்ரீ கொன்றாரா? என்ற மீதிக்கதையுடன் படம் நகர்கிறது.
முகமூடி படத்திற்கு பின்பு மிஷ்கின் எழுதி இயக்கி, நடித்திருக்கும் படம் இது. தனது இயல்பான கதை, எதார்த்தம் குறையாத காட்சிகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தில் பாடல் இல்லாமல், கொமடி, நடிகர் கூட்டம் இல்லாமல் ஒரு ஆங்கில படத்திற்கு இணையான கதையையும், காட்சிகளையும் ரசிக்கும் படியாகவும், பிரமிக்கும்படியாகவும் அமைத்திருப்பது இவருக்கு உரிய பாணி.
குறிப்பாக படத்தில் ப்ளாஷ்பேக்கை காட்சிப்படுத்தாமல் ஒரு குழந்தைக்கு கதை சொல்வதுபோல் படம் பார்ப்பவர்களுக்கு தனது நடிப்பையும் சேர்த்து கதையை சொல்லும் விதம் மிகவும் சிறப்பு.
அதில் பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்திருப்பது காட்சியின் உச்சக்கட்டம்.
படத்தில் இதுபோன்ற காட்சிகள் எண்ணில் அடங்காமல் இடம்பெற்றுள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் மிஷ்கின் மின்னலென சுழல்கிறார்.
வழக்கு எண் 18/9 படத்திற்கு பின்பு ஸ்ரீ நடிக்கும் படம் இது. அப்படத்தில் இருந்து இதில் ஒரு மாறுபட்ட நடிகராக தெரிகிறார்.
இந்த படத்தின் விறுவிறுப்பை சுமக்கிற பொறுப்பு இவருக்கு. அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
இசைஞானியின் பின்னணி இசை தென்றல் போல் மனதை தொடுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய பின்னணி இசைதான்.
இதற்கு மிஷ்கின் டைட்டிலிலேயே முன்னணி இசை என்று இசைஞானிக்கு கௌரவம் சேர்க்கிறார்.
பாலாஜி வி ரங்காவின் ஒளிப்பதிவு மிக நுணுக்கமான உணர்ச்சிகளைக்கூட அவசரமில்லாமல் நிறுத்தி, நிதானமாக உள்வாங்குகிறது. இவருடைய கமெரா வியப்பை மட்டுமே அளிக்கிறது.
தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக கோடிகளை சம்பாதிக்க மிஷ்கின் தவறியிருந்தாலும், அவ்வபோது வழி தவறி பயணிக்கும் தமிழ் சினிமாவை சரியான பாதையில் பயணிக்க வைக்க தவறியதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
மொத்தத்தில் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் காத்திருந்த ரசிகர்களுக்கு த்ரில்லர் வேட்டை.
நடிகர்: ஸ்ரீ, மிஷ்கின், ஆதித்யா
நடிகை: நீலிமா ராணி
இயக்குனர்: மிஷ்கின்
இசை: இளையராஜா
ஓளிப்பதிவு: பாலாஜி வி ரங்கா