அரசியல் கறையைப் பூசிக் கொள்ள விருப்பம் இல்லை என்று, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பெங்களூரு பத்திரிகையாளர்கள் மன்றம், செய்தியாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
நடிகரும், எனது நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்கவிருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகத்தில் நடைபெறும். தமிழ்ப் படங்களை கர்நாடகத்தில் எடுப்பதற்கான சூழல் உருவாக வேண்டும்.
இந்திய திரைப்படத் துறையை பாலிவுட் என்று அழைப்பதை ஏற்கமாட்டேன். பாலிவுட் என்பது மும்பை திரைப்படத் துறையைக் குறிக்கும். இந்திய திரைப்படங்களில் 50 சதத்திற்கும் அதிகமான படங்கள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
ஹாலிவுட் என்பது சிறிய கிராமம். ஆனால், அது உலகப் புகழ் பெற்றுள்ளது. அதேபோல, நாமும் முயற்சித்தால் ஹாலிவுட்டை இந்தியாவுக்கு மாற்றிவிடலாம். விஸ்வரூபம்-2 என்ற திரைப்படத்தை தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. அதன் முன்னோட்டமும் தயாராக உள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதற்கு தொந்தரவு ஏற்பட்டதால், நாட்டைவிட்டு வெளியேறுவதாகக் கூறினேன். என் வார்த்தையை திரும்பப்பெற விரும்பவில்லை; எனக்கு ஏற்பட்ட தொந்தரவை எண்ணி கோபத்தில் அவ்வாறு குறிப்பிட்டேன். இந்தியாவைவிட்டு வெளியேறமாட்டேன்.
ஒரு வகையில் எல்லோரும் அரசியல்வாதிகள்தான். வாக்களிக்க மட்டுமே கைவிரலில் மை வைத்துக் கொள்வேன். அரசியல் கறையை கை முழுக்க பூசிக் கொள்ள விருப்பம் இல்லை. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து நான் கருத்துக் கூற முடியாது. ரஜினியையும், கமலையும் உங்களுக்கு பிடிப்பது போல, மகாத்மா காந்தியையும், பெரியாரையும் எனக்குப் பிடிக்கும். காந்தியின் அஹிம்சைக் கொள்கை என்னைக் கவர்ந்துள்ளது. எனக்குப் பிடித்த தலைவர் காந்திதான்.
ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை தட்டியெழுப்பிய சமூகப் போராளி என்பதால், பெரியாரைப் பிடிக்கும். பெரியாரும், ராமானுஜரும் வெவ்வேறல்ல. கடவுள் குறித்து இருவரது கருத்துகளும் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் இருவரின் பணி, நோக்கம், இலக்கு ஆகியவை ஒன்றாக இருந்தன என்றார் கமல்ஹாசன்.