டூப் இல்லை; நஸ்ரியாதான் நடித்தார்- இயக்குநர் சற்குணம்

sargunam“நய்யாண்டி’ படத்தின் ஒரு காட்சியில் கூட டூப்பை பயன்படுத்தவில்லை; எல்லா காட்சிகளிலும் நஸ்ரியாவே நடித்தார் என தெரிவித்துள்ளார் இயக்குநர் சற்குணம்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: குறிப்பிட்ட பாடல் காட்சி ஒன்றில் நஸ்ரியாவுக்குப் பதில் வேறு ஒரு பெண்ணை டூப் வைத்து ஆபசாமாகக் காட்டியிருப்பதாகவும், அதில் குறிப்பிட்ட காட்சி ஒன்றை படத்தின் டிரெய்லரில் வைத்திருப்பதாகவும் நஸ்ரியா புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் “”இனிக்க இனிக்க…” எனத் தொடங்கும் அப்பாடலில் ஒரு இடத்தில் கூட டூப் பயன்படுத்தப்படவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாதான்.

ஒரு குறிப்பிட்ட காட்சி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக

குளோசப் காட்சி டிரெய்லரில் தேவைப்பட்டது. ஒரு வேளை டிரெய்லரில் வரும் அந்த காட்சி நஸ்ரியாவுக்கு உறுத்தலாக இருந்தால், அந்த காட்சியை நீக்கவும் தயாராக இருக்கிறேன்.

ஆனால் அந்தப் பாடல் காட்சியில் நடித்தது தான் இல்லை என்று நஸ்ரியா கூறுவது முழுக்க முழுக்க விளம்பர யுக்தி. “களவாணி’, “வாகை சூட வா’ என எனது முந்தைய படங்கள் இரண்டுமே குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டவை. “வாகை சூட வா’ படத்துக்கு தேசிய விருது அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதனால் என்னுடைய படத்தில் ஆபாசம் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது என்பது ரசிகர்களுக்கு தெரியும்.

“நய்யாண்டி’ படத்துக்கு தணிக்கைக் குழு “யூ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதில் எப்படி ஆபாசம் இருக்க முடியும்? இந்த விஷயத்தில் நஸ்ரியா தனக்கு விளம்பரம் தேட முயற்சிக்கிறார் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார் இயக்குநர் சற்குணம்.

திரைப்பட இயக்குநர் சற்குணம் மீது நடிகை நஸ்ரியா காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த விவரம்:

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நஸ்ரியா நடித்த “நய்யாண்டி’ திரைப்படம் இம் மாதம் 11-உம் தேதி திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், இத் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் ஒரு பாடல் காட்சியில் வேறு ஒரு பெண்ணை தன்னைப் போன்று நடிக்க வைத்து ஆபாசமாகக் காட்டியிருப்பதாக இயக்குநர் சற்குணம் மீது நஸ்ரியா புகார் தெரிவித்தார்.

இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜியிடம் நஸ்ரியா செவ்வாய்க்கிழமை ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் நடித்த “நய்யாண்டி’ திரைப்படத்தின் டிரைலர் காட்சியை அண்மையில் பார்த்தேன். அதில் ஒரு பாடல் காட்சின் சில பகுதிகளில் நான் ஆபாசமாகக் காட்டப்பட்டுள்ளேன்.

நான் அப்படியொரு காட்சியில் நடிக்கவில்லை. என்னைப் போன்று வேறு ஒருவரை நடிக்க வைத்து அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து படத்தின் இயக்குநர் சற்குணத்திடம் நான் கேட்டபோது, அவர் என்னை திட்டி மிரட்டினார். மேலும் அவர் என் குடும்பத்தினரையும், எனது சமூகத்தையும் அவமானப்படுத்தும் வகையில் பேசினார். இது குறித்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனிடம் செல்போனில் பேச முயன்றபோது, அவர் என்னிடம் பேச மறுத்துவிட்டார். எனவே, சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி இருக்கும் வரை அந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுளளது.