-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 10, 2013.
சிற்றூர்கள் உட்பட சிறிய, பெரிய எல்லா நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மலேசியாவின் முதல் நிலை பிரச்சனையாகியுள்ளது. சில நகரங்களில் காலை மணி ஆறு முதல் நள்ளிரவுக்குப் பின்னும் நெரிசல் நிரந்தரமாகிவிட்டது. சனி, ஞாயிறுகள், இதனை ஒட்டிக் கூடுதலாக வரும் விடுமுறை நாட்கள், விழாக் காலங்கள் இப்படி எல்லாக் காலங்களிலும் சாலை நெரிசலும் மலேசியப் பண்பாட்டில் ஒரு கூறு ஆகிவிட்டது.
சாலை நெரிசல் ஏற்படுத்தும் இழப்பு என்ன?
நாடு முழுவதும் இலட்சக் கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் நெரிசலில் சிக்கிக் கொள்ளும்போது ஏராளமான எரிபொருள் வீணாகிறது. இருபது நிமிடப் பயணம் நெரிசலின்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாகுமானால் வாகனங்கள் நகராமலேயே வீணாகும் எரிபொருளின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள். இப்படி எரிந்து கரியாகும் எண்ணெயோடு மக்கள் வரிப் பணத்திலிருந்து வரும் அரசின் உதவிப் பணமும் எரிந்து போவதைக் மனக்கணக்குப் போட்டுப் பாருங்கள்.
சாலை நெரிசலால் எரிபொருள் மட்டும் வீணாகவில்லை. ஆயிரக்கணக்கான மணி நேரம் வீணாகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை சாலை நெரிசலில் வீணாக்குகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் சில இலட்சம் பேர் என்றால் அத்தனை இலட்சம் மணி நேரம் மக்கள் வாழ்க்கையில் வீணாகிறது. இந்த நேரம் மக்கள் வாழ்க்கையில் பயன் தரும் போக்கில் செலவானால் அது பொருளாதார மேம்பாடு, உடல், உள்ள நல மேம்பாட்டைக் கொண்டு வரும் என்று ஏன் நாம் சிந்திக்கவில்லை?
சாலை நெரிசல், குறிப்பாகக் காலையும் மாலையும் ஏற்படும் நெரிசலால் சாலை பயனீட்டாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை. திரும்பும் போது வீடு சேர்வதற்குள் இருட்டிவிடுகிறது. இதனால் குழந்தைகளோடு வெளியில் செல்லவும் வேறு குடும்ப நலச் செயல்களில் ஈடுபடவும் முடியாத நிலை பெரும்பகுதி மலேசியருக்கு ஏற்படுகிறது. வெகு அருகில் இருக்கும் உறவினர் வீடுகளுக்குப் போய் வருவதற்குக் கூட விடுமுறை நாட்களை எதிர்பார்த்திருக்க வேண்டியுள்ளது.
அதிக கார்கள் சாலை நெரிசலை மட்டுமல்ல, விபத்துகளையும் காற்றுத் தூய்மைக் கேட்டையும் சுற்றுச் சூழலில் வெப்பத்தையும் கூட்டுகிறது.
சாலை நெரிசலுக்குக் காரணம் என்ன?
மோசமான பொதுப் போக்குவரத்து வசதிகள் முதன்மைக் காரணம் ஆகிறது. நமது பேருந்துகள், டாக்சிகள், இரயில்கள் போன்றவை தரத்தையும் முறையான பயணத்திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
ஒரு காலத்தில் சிறந்த போக்குவரத்துத் துணைவனாக இருந்த பேருந்துகள் இன்று சிறு நகர்களிலும் சிறு ஊர்களுக்கு இடையிலும் ஓடக் காணோம். ஓடுகின்றவை எப்போது வரும் போகும் என்று சொல்ல முடியாது.
இரயில் சேவையைச் சொன்னால் நாம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். கோம்யுடர், நகருக்கு நகர் செல்லும் இரயில்கள் எதுவும் குறித்த நேரத்தில் போய்ச் சேராது. போகிற வேகமும் நம்ப முடியாத நத்தை வேகம். எ.டு: எக்ஸ்பிரஸ் ராக்யாட்டில் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் போய்ச் சேர ஏறத்தாழ 400 கி.மீ. தூரம். பயண நேரம் 7 மணி 30 நிமிடம். ஒரு மணி நேரத்தில் 360 கி.மீ. தூரம் போகும் மிகை வேக இரயில்கள் வந்து விட்ட காலத்தில் நமது இரயில்கள் ஒரு மணி நேரத்தில் 50 கி.மீ. போய்க் கொண்டிருக்கின்றன.
ஏன் இப்படி என்று ஓய்வு பெற்ற கே.டி.எம். அதிகாரி ஒருவரைக் கேட்டேன். அதிர்ச்சி தரும் தகவல்களை அதிராமல் தந்தார். ‘நமது என்ஜின்கள் எல்லம் மிகப் பழையவை. கொரியா, தைவான் போன்ற நாடுகளில் ஓடிக் களைத்தவற்றை வாங்கி வருகிறோம். பலவற்றுக்கு உபரிப் பாகங்கள் கிடைக்காது. சொந்தமாகச் செய்துதான் போடுவோம்’ என்றார்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வாரந்தோறும் சிங்கப்பூருக்கு இரயிலில் போய் வந்த நான் தாங்க முடியாத எரிச்சலோடு அதை விட்டுத் தொலைத்துப் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறேன். அண்மையில் ஈ.டி.எஸ் பயணச்சீட்டு கிடைக்காமல் ஈப்போவுக்குப் போக எக்ஸ்பிரஸ் ராயாட்டில் ஏறினேன். அது அரதைப் பழைய கோச்சுகளைக் கொண்டிருந்தது. தானியங்கிக் கதவுகள் தானே இயங்கவில்லை. இருக்கைகள் அழுக்கேறி ஆடிப் போயிருந்தன. நல்ல பராமரிப்பைப் பார்த்தறியாத இந்த வண்டிகளில் பயணம் செய்வது எத்துணைக் கொடுமையானது என்று அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
ஓராண்டுக்கு முன் வந்த கோலாலம்பூர் ஈப்போ ஈ.டி.எஸ் உச்சகட்ட வேகம் 140 கி.மீ.இல் 2 மணி நாற்பது நிமிடத்தில் ஈப்போ சென்றடைவது கொஞ்சம் ஆறுதல்.
டாக்சிகள் ஏராளமாக இருந்தாலும் அவை போகிற திசையில் நாம் போனால்தான் அவர்கள் சேவையைப் பயன்படுத்த முடியும். ‘அந்தப் பக்கம் நான் போகவில்லை, அங்கே சாலை நெரிசல், திரும்பி வரும்போது ஆள் கிடைக்காது’ இப்படிப் பல காரணங்களைக் காட்டி நகர்ந்து போகும் டாக்சிகள் அதிகம்.
நல்ல எடுத்துக்காட்டாகச் சிங்கப்பூரைப் பார்ப்போம். பேருந்து சேவை தரமானதாகவும் கட்டுப்பாடான திட்டப்படியும் மக்கள் வாழுகின்ற எல்லப் பகுதிகளையும் அலுவலகங்களையும் இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அந்த இடத்திற்கு வரும் பேருந்துகளின் எண்கள் கொண்ட அறிவிப்புப் பலகை உள்ளது. இதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. நாம் ஏறவிருக்கும் எண் கொண்ட பேருந்து இன்னும் எத்தனை நிமிடங்களில் அந்த இடத்தை வந்து அடையும் என்பதை உங்கள் கைத் தொலைபேசியின் இணைய தளத்தில் பார்த்துக் கொண்டு நம் பயணத்தை வினாடி வீணாகாமல் திட்டமிட முடியும். இதைப் போலவே எம்.ஆர்.டி சேவைகளையும் அறிந்து கொள்ளலாம்.
நம் நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகள் திருத்தப்படாமல் இருப்பது திட்டமிட்டே செய்யப்படுவதாக இருக்கலாம். புரோட்டோன் தொடங்கி ப்ரொடுவ, வாஜா என்று கிட்டத்தட்ட 14 வகையான கார்கள் பல நிறுவனங்கள் வழி இலட்சக்கணக்கில் சாலைகளில் இறங்குகின்றன. ‘ஏழைகளும் கார் வாங்கலாம்’ என்ற தந்திரத்தின் அடிப்படையில் முன்பணம் இல்லாமல் முழுக்கடன் பெற்றுக் கார் வாங்கும் வசதிகளை வங்கிகள் வழங்குவதால் நமது சாலைகளில் எந்த நேரமும் கார்கள் நிரம்பி வழிகின்றன. இந்தக் கார் நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்கும் வங்கிகளுக்கும் பின்னணியில் இருக்கும் டத்தோ, டான்ஸ்ரீகள் சாலை நெரிசல் பற்றிக் கவலைப்படுவதில்லை.
மீண்டும் சிங்கப்பூரைப் பார்ப்போம். அங்கே சாலைக்கு வரும் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றனர். கார் வாங்குவதற்கு முன் வாங்கும் அனுமதியை ஏலத்தில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஏலத்தில் இருபதாயிரம் சிங்கப்பூர் வெள்ளிக்குச் சற்றுக் கீழும் மேலுமாக நிர்ணயிக்கப்படும் தொகையைச் செலுத்திக் கார் வாங்கும் அனுமதியைப் பெற வேண்டும். இது காரின் விலையோடு சேர்க்கப்பட்டுக் கடன் வழங்கப்படும். முக்கிய சாலைகளில் செல்லும் கார்களுக்குக் கூடுதல் சாலைக் கட்டணம் அவரவர் கார்களில் உள்ள தானியங்கிக் கருவிகள் வழி செலுத்த வேண்டும். சில சாலைகளில் ஒருவர் மட்டும் செல்லும் கார்கள் செல்ல முடியாது. சனி, ஞாயிறு மட்டும் சாலைக்கு வரும் கார்களும் உண்டு. இக்காரணங்களால் சாலை நெரிசல் வெகு அரிது.
நம் நாட்டுச் சாலைகளில் கார்களின் எண்ணிக்கை வீங்கி வெடிக்கும் நிலை அடைந்தபோதும் போக்குவரத்தை முறையாக நிர்வகிக்கும் நடவடிக்கைளைப் பார்க்க முடியவில்லை. சாலை நெரிசலுக்கான நிர்வாகக் கொள்கைகள், தொடர் செயல்பாடுகள் என்று எதுவும் காணோம். நகரங்களில் சில இடங்களில் அரை மணி, முக்கால் மணி நேரத்திற்குப் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காவலரைக் காண முடிகிறது. இதுவும் எல்லா இடங்களிலும் எப்போதும் இல்லை.
கொடுமையாக இருந்தாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மலேசியர் முன் வராததும் சாலை நெரிசலுக்கு ஒரு காரணம்தான். பல வண்டிகளில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வதை எப்போதும் பார்க்க முடிகிறது.
சாலை நெரிசலுக்குக் காரணமாக இன்னொன்றையும் சொல்லலாம். நெரிசல் மிக்க பகுதிகளில் மாற்றுச் சாலைகள் இல்லை. நகர் சார்ந்த சாலைகளில் கூட டோல்கள் அமைத்து எல்லாரும் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று வலை விரிக்கப்படுவதாலும் நெரிசல் மிகுதியாகிறது.
சாலை நெரிசலில் இத்தனை துயரங்களை அனுபவித்தாலும் சொந்தக் காரில் போவதுதான் கவுரவம் என்று நினைக்கும் மலேசியர்களின் மான உணர்வும் சாலை நெரிசலுக்கு இன்னொரு காரணமாகிறது.
எரிபொருள் வீணடிப்பு, பயனீட்டாளர்களின் மன அழுத்தம், குடும்ப அமைதி கெடுதல், நேர விரயம், சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு, விபத்துகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு சாலை நெரிசலை முறையாக நிர்வகிக்கும் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். பொருத்தமான நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
அரசாங்கத்திற்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும், அனைத்தும் தெரியும். இதனால் பயன் அடைபவர் யார் என்பது தான் முக்கியம். டத்தோக்களும், டான்ஸ்ரீக்களும் அமைச்சர்களும் அவர்கள் குடும்பங்களும். நாம் சுகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்களைக் கவலையில் ஆழ்த்தலாமா?
சார் இந்த பழைய கதைய வெச்சி பெட்ரோனாஸ் கோடி கணக்கில் மக்களிளிடம் அடிச்சிகிட்டு இருக்கானுங்க ! இப்போ புதுசா 2014 லில் ஜி எஸ் தி 4 % ஏத்த போறான் இத பத்தி எழுந்துங்க சார். 100 வெள்ளி எண்ண ஊத்தனா 4 வெள்ளி அரசுக்கு போவுது. ஒரு நாளய வரு (வாய) கணக்கு பண்ணி சொல்லுங்க சார். அப்புறம் அரசு “சப்பி”திஸ்திரி என்று ஒன்று நம்ம ஆறுதலா சப்பி எடுக்க தருவானுங்க..இதுவரை எரிபொருள் உற்பத்தி வரவை சொல்லவே மாட்றானுங்க ? நல்ல பெற்றோல் எண்ணைய ஏற்று மதி செயிரானுங்கலாம். எல்லாம் கமிசன் சைட் அடியாம் சார்.
ஐயா ஆறு நாகப்பன் அவர்களே ! நீங்கள் ஒட்டு மொத்த மாநகர்வாசிகளின் உல்ல குமுறலை கொட்டி தீர்த்து இருக்கிறீர் ஐயா !
“நம் நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகள் திருத்தப்படாமல் இருப்பது திட்டமிட்டே செய்யப்படுவதாக இருக்கலாம். புரோட்டோன் தொடங்கி ப்ரொடுவ, வாஜா என்று கிட்டத்தட்ட 14 வகையான கார்கள் பல நிறுவனங்கள் வழி இலட்சக்கணக்கில் சாலைகளில் இறங்குகின்றன. ‘ஏழைகளும் கார் வாங்கலாம்’ என்ற தந்திரத்தின் “அடிப்படையில் முன்பணம் இல்லாமல் முழுக்கடன் பெற்றுக் கார் வாங்கும் வசதிகளை வங்கிகள் வழங்குவதால் நமது சாலைகளில் எந்த நேரமும் கார்கள் நிரம்பி வழிகின்றன. இந்தக் கார் நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்கும் வங்கிகளுக்கும் பின்னணியில் இருக்கும் டத்தோ, டான்ஸ்ரீகள் சாலை நெரிசல் பற்றிக் கவலைப்படுவதில்லை”
“கொடுமையாக இருந்தாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மலேசியர் முன் வராததும் சாலை நெரிசலுக்கு ஒரு காரணம்தான். பல வண்டிகளில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வதை எப்போதும் பார்க்க முடிகிறது.”
*** நேரத்தோடு வரும் பொதுப் போக்குவரத்து என்று ஒன்று நம்நாட்டில் தொலைந்து போன கதை எனபது வரலாறு***
“சாலை நெரிசலில் இத்தனை துயரங்களை அனுபவித்தாலும் சொந்தக் காரில் போவதுதான் கவுரவம் என்று நினைக்கும் மலேசியர்களின் மான உணர்வும் சாலை நெரிசலுக்கு இன்னொரு காரணமாகிறது.”
*** ஒரு வேளை இந்த உணர்வு கட்டுரையாளருக்கு இருக்குமோ ???
ஏன் ஐயா மற்றவர்கள் வயித்தெரிச்சலை கிளறுகிறீர்கள் ?நீங்கள்
குறிப்பிட்ட பொதுப் போக்குவரத்துக்கு தான் செத்து சரித்திரமாக
சவக்குழியில் துயிலுதே ! தொடரும் ……***
.
நம் நாட்டு சம்மந்தப்பட்ட அமைச்சரவையில் வீற்றிருப்போர்
நல்ல அறிவாளிகளா ?…தூரநோக்கு சிந்தனையாளர்களா ?
அப்படிப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் மரமண்டையில்
புதுப் புது அறிவுப் பூர்வமான ஆய்வுகளும் அதற்கேற்ற நல்ல
மாற்று வழிகளும் பலவாக கிளை விட்டிருக்குமே ?
ஒரே நெடுஞ்சாலை …அதனை ஒட்டியே …அந்த சாலை அருகிலேயே
எங்கெங்கு காலி நிலம் இருக்குமோ அங்கெல்லாம் புதுப் புது
வீடமைப் புக்கள் …ஆயிரக்கணக்கான வீடுகள் ,
குடியிருப்பாளர்களுக்கு இன்னொரு மாற்று வழி உருவாக்காமல்
இருக்கும் நெடுஞ்சாலையிலேயே அத்தனை ஆயிரம் பேரின்
போக்குவரத்துக்கு பிரச்னையை கூட்டுவது ..,
நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் சமிக்ஞ்சை விளக்குக்கு
மாற்றாக மேம்பாலம் அமைத்தால் சில நெடுஞ்சாலைகளில் தேங்கும் வாகன பல மைல் ஸ்தம்பிதத்தை தவிர்க்கலாம்
என்னும் ஆராய்ச்சி உண்மையை இன்னும் நிறைவேற்றாமை …
இவர்களை அறிவாளிகள் என்றா புகளுவது???
இப்படி ஒன்றா இரண்டா …???
ஏன் பிற நாடுகளையெல்லாம் ஊர் பணத்தில் சுற்றிவரும் கோமாளிகள் அங்கே நிகழும் மாற்றங்களை அறிவுப் பூர்வமாக
நம் நாட்டில் நிகழ்த்தாமல் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்???
மக்களின் முக்கிய தேவைகளை … சாலை வசதிகளை ஆய்வு
பண்ணி நிவர்த்திக்கும் வழி காணுங்கள் .,
பல ஆயிரம் ஆயிரம் கோடி மக்கள் சாபத்தில் இருந்து
விமோசனம் பெறுவீர் .
நாற்காலியை சூடேற்றும் கலை பாமரனும் செய்வான்
மின்னல் fm மில் பாடல்கள் கேட்டு கொண்டே கடும் நெரிசலிலும் பயணம் மேற் கொள்ளலாம்.தினமும் காலை 7.25 எந்த ரோடு ஜேம் என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
நாளுக்கு நாள் கார்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால், சாலைகள் அதிகரிக்கவில்லை. பூமிக்கு உள்ளே அல்லது பாலத்திற்கு மேலே இன்னொரு பாலம் கட்டினால்தான் இந்தப் பிரச்னை தீரும் போல.
ஒரு சின்ன செய்தி, (கட்டுரை சம்பந்தப்பட்டதல்ல) கடந்த 10/10/2013 அன்று இரவு டிவி1-ல் மலாய் செய்தி கேட்டுக்கொண்டிருந்தேன். Communications and Multimedia Minister Datuk Seri Ahmad Shabery பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ஹரிராயா ஹாஜி பெருநாளை அங்கு படிக்கும் மலேசிய மாணவர்களுடன் கொண்டாடினார். யார் அப்பன் வீட்டு காசு? விஷயம் என்ன வென்றால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒருவர் கூட மலாய்காரர் போல் இல்லை அனைவரின் முகவெட்டும் இந்தோனேசியர் போல்தான் இருந்தது. மலேசிய அரசாங்கம் இந்தோனேசியர்களை மலேசியர் என்ற அங்கீகாரத்துடன் அங்கு படிக்க அனுப்புவதாக நினைக்கிறேன். இதனால்தான் நம் இன மாணவர்களுக்கு வெளி நாடுகளில் படிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்தோனேசியன் மலேசியனாகிக்கொண்டிருக்கிறான். நாம் அப்படியே இருக்கிறோம்.
யார் எவ்வளவு நேரம் சாலை நெரிசலில் மாட்டிக் கொண்டாலும் அரசுக்குக் கவலை இல்லை.அதுக்குத் தேவை கார் விற்பனையில், எண்ணையில் வரும் காசுதான்.அவர்கள் போகும்போது மட்டும் மற்ற வர் விலகி வழி விட வேண்டும்.எல்லோரும் கார்களை வீட்டில் வைத்துவிட்டு பேருந்தில் பயணம் செய்யுங்கள் என்று அரசு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே சாலை நெரிசலைக் குறைக்க முடியும். கட்டுரையாளர் அவர்களுக்கு இருக்கும் சமூக உணர்வு எல்லோருக்கும் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்.
எந்த ஒரு அரசியல்வாதியோ. அமைச்சரோ,தலைவரோ தங்கள் வகனத்தில் பயணிக்கும் போது,அவர்களுக்கு போலீஸ் ( டிராப்பிக் )பாதுகாப்பு வழங்காதிருந்தாலே போதும். எல்லாம் சரியாகிவிடும்.